Radhika Sarathkumar: செல்ஃபோனில் நடிகைகள் துணிமாற்றும் வீடியோ - அதிர்ச்சியை கிளப்பிய நடிகை ராதிகா
Malayalam Film Industry Allegations: நடிகைகள் கேரவனில் ஆடை மாற்றுவதை ரகசிய கேமராக்கள் வழியாக மலையாள திரையுலகினர் பார்த்ததாக நடிகை ராதிகா சரத்குமார் அதிர்ச்சியளிக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ராதிகா சரத்குமார்
ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து கேரளாவில் திரையுலகைச் சேர்ந்த பல ஆண்களின் பெயர்கள் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளன. இதுகுறித்து தற்போது தமிழ் திரையுலகினரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். நடிகை ராதிகா சரத்குமார் தனக்கு நிகழ்ந்த அதிர்ச்சிகரமான நிகழ்வுகளைப் பற்றி பேச முன்வந்திருக்கிறார். “நான் சினிமாவில் கடந்த 45 ஆண்டுகளாக இருக்கிறேன். மலையாள சினிமாவில் மட்டுமில்லை தமிழ், இந்தி எல்லா சினிமாத் துறையிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருந்து தான் வருகிறது.
கேரவனில் ரகசிய கேமரா
நான் ஒரு மலையாள படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றபோது அங்கு படப்பிடிப்பில் இருந்தவர்கள் செல்ஃபோனில் எதையோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் என்னவென்று கேட்டபோது தான் நடிகைகள் கேரவனில் ஆடை மாற்றுவதை ரகசிய கேமராக்கள் வழியாக அவர்கள் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். நீங்கள் எந்த நடிகையின் பெயரைச் சொன்னாலும் அவர்களின் வீடியோ இருக்கிறது. இந்த நிகழ்விற்கு பிறகு எனக்கு தெரிந்த எல்லா நடிகைகளையும் எச்சரித்தேன். கேரவனில் ஆடைமாற்றாமல் ஹோட்டல் ரூமிற்கு சென்றுதான் ஆடை மாற்றுவேன். நான் சினிமாவிற்கு வந்தபோது மரத்திற்கு பின்னால் நின்று ஆடை மாற்றியிருக்கிறேன். அப்போது பெரிதாக வசதியில்லை அதனால் அப்படி எல்லாம் செய்தோம் . இன்று ஒரு கேரவன் இருந்தும் பாதுகாப்பு இல்லை என்றால் எப்படி. சினிமாவில் யாரும் எலிஸபெத் ராணியின் சொந்தக்காரர்கள் நடிக்க வருவதில்லை. எல்லாரும் தங்கள் குடும்ப சூழல் காரணமாக கஷ்டப்பட்டு தான் வருகிறார்கள்.
அப்படி வருபவர்களுக்கு சில நடிகைகள் தங்களுக்கு அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு நடந்திருக்கிறது என்று எனக்கு தெரியும். பெரிய பெரிய அரசியல்வாதிகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் பெயர்களை எல்லாம் நான் சொல்லப்போவதில்லை. இந்த பிரச்சனையில் இன்று வரை ஒரு ஆண் வாயை திறந்திருக்கிறார்களா. இத்தனை போராட்டங்களுக்குப் பிறகுதான் ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியாகி இருக்கிறது. தற்போது பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதைப் பற்றி பேசும்போது அவர்களிடம் ஆதாரம் கேட்கிறார்கள். எங்களிடம் ஒருத்தன் தவறாக நடந்துகொள்ளும்போது நாங்கள் என்ன வீடியோவா எடுத்துக்கொண்டு இருக்க முடியும் “ என்று ராதிகா சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.