Rohini Theatre Damage: லியோ டிரெய்லர் வெளியீட்டில் ரோகிணி திரையரங்கம் சேதமானதற்கு போலீசாரே காரணம் - உயர்நீதிமன்றம் அதிருப்தி
ஏ.ஆர். ரஹ்மான் இசை வெளியீட்டு விழாவிலும் ரசிகர்களை கையாள காவல்துறை தவறியதால் குளறுபடி ஏற்பட்டதாக கூறி, நீதிபதி ஜெயச்சந்திரன் அதிருப்தி தெரிவித்தார்.
Rohini Theatre Damage: லியோ டிரெய்லர் வெளியான போது ரோகிணி திரையரங்கம் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு போலீசாரின் தவறான கையாளுதலே காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சேலம் மற்றும் கிருஷணகிரி மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணையில், லியோ படத்தின் டிரெய்லர் வெளியீட்டின் போது ரோகிணி திரையரங்கு சேதபடுத்தப்பட்டதற்கு காவல்துறையின் தவறான அணுகுமுறையே காரணம் என்ற நீதிபதி, பார்க்கிங்கில் ஸ்கிரீன் அமைத்து டிரெய்லரை ரிலீஸ் செய்திருந்தால் பிரச்சனை வந்திருக்காது என்றார். இதேபோன்று, ஏ.ஆர். ரஹ்மான் இசை வெளியீட்டு விழாவிலும் ரசிகர்களை கையாள காவல்துறை தவறியதால் குளறுபடி ஏற்பட்டதாக கூறி, நீதிபதி ஜெயச்சந்திரன் அதிருப்தி தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை குற்றவியல் வழக்கறிஞர், லியோ டிரெய்லர் வெளியிடுவது தொடர்பாக ரோகிணி திரையரங்கு நிர்வாகம் தரப்பில் அனுமதி பெறவில்லை என்றார். அதனால், ரசிகர்கள் கட்டுபாடுகளையும் மீறி திரையரங்கிற்குள் நுழைந்ததால் அசம்பாவிதம் ஏற்பட்டதாக தெரிவித்தார். ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியில் காவல்துறை தரப்பில் தவறு இல்லை என்றும், கவன குறைவால் குளறுபடி ஏற்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நிகழ்ந்த குளறுபடி போன்று லியோ இசை வெளியீட்டு விழாவிலும் அசம்பாவிதம் ஏற்பட கூடாது என படக்குழுவை எச்சரித்ததாகவும், படக்குழுவே தானாக முன்வந்து இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்ததாகவும் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
நேற்று மாலை லியோ படத்தின் டிரெய்லர் வெளியான போது ரோகிணி திரையரங்கில் குவிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தடுப்புகளை மீறி உள்ளே சென்றனர். கட்டுக்கடங்காத கூட்டத்தால் திரையரங்கில் இருந்த இருக்கைகள் அடித்து உடைக்கப்பட்டு சேதமாகின. ரோகிணி திரையரங்கை சேதப்படுத்தும் வீடியோக்கள் இணையத்திலும் வைரலானது. திரையரங்கும் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில் ஆர்.எஸ்.எஸ். வழக்கில் ரோகிணி திரையரங்கு அசம்பாவிதங்கள் குறித்து நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: OTT Release: ரிபீட் மோடில் படங்களை பார்க்கலாம்... இந்த வார ஓடிடியில் வெளியாகும் படங்கள் லிஸ்ட் இதோ..!