Madhavan Best Movies: மேடிக்கு இன்று பிறந்தநாள்.. கட்டாயம் பார்க்க வேண்டிய மாதவனின் 5 படங்கள்..!
Madhavan Best Movies: தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் மாதவனின் சினிமா கேரியரில் நாம் கட்டாயம் காண வேண்டிய 5 படங்கள் பற்றி காணலாம்.
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் மாதவன் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாதவனின் சினிமா கேரியரில் நாம் கட்டாயம் காண வேண்டிய 5 படங்கள் பற்றி காணலாம்.
-
அலைபாயுதே
முதலில் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் ஆடிஷனில் கலந்து கொண்டு நிராகரிக்கப்பட்ட மாதவன் அதே மணிரத்னம் இயக்கத்தில் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான அலைபாயுதே படம் காதலர்களின் ஆல்டைம் ஃபேவரைட். முதல் படம் என தெரியாத அளவுக்கு அசால்ட்டாக நடித்திருப்பார் மாதவன். இந்த படத்தில் ஷாலினி, ஜெயசுதா, விவேக், ஸ்வர்ணமால்யா, குஷ்பு, அரவிந்த் சாமி என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்தார்.
காதலர்கள் வாழ்க்கையில் இணைவது மட்டுமே வெற்றியல்ல. எத்தனை தடைகள், பிரச்சினைகள் வந்தாலும் அனைத்தையும் வலிமையாக எதிர்கொண்டு வாழ்க்கிறார்களோ அதை பொறுத்தே அவர்களின் வாழ்க்கை இன்பமாகவும், மகிழ்ச்சியாகும் இருக்கும் என்பதை மிகவும் அழுத்தமாக இப்படம் பதிய வைத்தது.
- மின்னலே
2001 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி மாதவனின் மின்னலே படம் வெளியானது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குநராக இப்படத்தில் அறிமுகமானார். மேலும் இந்த படத்தில் ரீமாசென், அப்பாஸ், விவேக் என பலரும் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். காதலுக்காக பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் தவறுகளைச் செய்யத்தூண்டும் கிறுக்குத்தனமான இளைஞரின் எண்ணங்களை மாதவன் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருப்பார்.
-
இறுதிச்சுற்று
2016 ஆம் ஆண்டு சுதா கொங்காரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங், காளி வெங்கட் என பலரும் நடித்த படம் ‘இறுதிச்சுற்று’. இந்த படத்தில் பாக்ஸிங் அரசியலால் ஒலிம்பிக் கனவோடு வாழ்க்கையையும் தொலைத்து அதன் கோபத்துடன் வாழும் நபராக மாதவன் இப்படத்தில் நடித்திருந்தார். பயிற்சியாளரான பின்னரும் கோபம் குறையாமல் வாழும் அவர் வட சென்னையில் மீனவக் குப்பத்தில் இருக்கும் பாக்ஸர் மதிக்குப் பயிற்சி கொடுத்து தன்னை மிதித்தவர்களை எப்படி பஞ்சர் ஆக்குகிறார் என்பது கதையாக அமைக்கப்பட்டிருந்தது. சாக்லேட் பாய், ரக்கெட் பாய் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நான் மாஸ் + கிளாஸ் ஆக பண்ணுவேன் என சொல்லி அடித்திருப்பார் மாதவன்.
-
விக்ரம் வேதா
2017 ஆம் ஆண்டு புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், கதிர், வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. சாம் சிஎஸ் இப்படத்துக்கு இசையமைத்தார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக மாதவன் நடித்திருப்பார். ஆனால் வழக்கமான போலீஸாக அவரது கேரக்டர் இடம் பெற்றிருக்காது. விக்ரமாதித்யன் வேதாளத்தின் கதையின் சாயலில் அமைக்கப்பட்ட இப்படத்தின் திரைக்கதை ரசிகர்களை கவர்ந்தது.
-
ராக்கெட்ரி தி நம்பி விளைவு
கடந்தாண்டு வெளியான ராக்கெட்ரி படத்தின் மூலம் நடிகர் மாதவன், இயக்குநராக அறிமுகமானார். தேசத் துரோக குற்றத்தை இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் தன் மீதான களங்கத்தை போராடி வென்ற கதையை நம் கண் முன்னாடி நிறுத்தினார் மாதவன். படத்தின் நாம் எங்கேயுமே இதற்கு முன் பார்த்த மாதவனை பார்க்கவே முடியாது. முழுக்க முழுக்க நம்பி நாராயணனாக மாறினார் மாதவன். அவர் இயக்குநராகவும் வெற்றி பெற்றார்.