Made In Heaven 2: இந்த முறை இன்னும் கலவரமான திருமணங்கள் இருக்கும்.....வெளியான 'மேட் இன் ஹெவன்’ சீசன் 2 அப்டேட்!
கடந்த 2019ஆம் ஆண்டு அமேசான் பிரைமில வெளியான ‘மேட் இன் ஹெவன்’ இணைய தொடரின் இரண்டாவது சீசன் குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான இணைய தொடர் ‘மேட் இன் ஹெவன்’. நித்யா மெஹ்ரா, ஜோயா அக்தர், பிரஷாந்த் நாயர், அலன்க்ரிதா ஸ்ரீவாஸ்தவா ஆகிய நான்கு இயக்குநர்கள் இணைந்து இந்தத் தொடரை இயக்கியிருந்தார்கள். ஷோபிதா துலிபாலா, ஜிம் ஸார்ப் , அர்ஜுன் மாதூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இரண்டு நண்பர்கள் இணைந்து திருமண நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தும் ஒரு wedding planners நிறுவனத்தைத் தொடங்குகிறார்கள். இவர்கள் சந்திக்கும் வெவ்வேறு திருமண தம்பதிகள், அவர்களின் சிக்கல்கள் ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர் தான் ‘மேட் இன் ஹெவன்’.
வெளியான நாள் முதல் விமர்சன ரீதியாக நல்ல பாராட்டுக்களைப் பெற்றது இந்தத் தொடர். இதன் இரண்டாவது சீசனுக்காக ரசிகர்கள் மிக ஆர்வமாகக் காத்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது சீசன் குறித்தான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டாம் சீசன்
இரண்டாவது சீசனை ஜோயா அக்தர் மற்றும் ரீமா காக்தி ஆகியவர்கள் இணைந்து இயக்கியுள்ளார்கள். முந்தைய சீசனில் நடித்த நடிகர்களான ஷோபிதா துலிபாலா, அர்ஜுன் மாத்தூர், கல்கி கோச்லின், ஜிம் சர்ப், ஷஷாங்க் அரோரா மற்றும் ஷிவானி ரகுவன்ஷி ஆகியவர்கள் இந்த சீசனிலும் தொடர்கிறார்கள்.
கடந்த ஜூலை 5ஆம் தேதி இந்தத் தொடரின் இரண்டாவது சீசனுக்கான போஸ்டரை ட்விட்டரில் பகிர்ந்தது படக்குழு. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் ஜோயா அக்தர் “இந்த முறை திருமணங்களும் நாடகங்களும் கலவரங்களும் இரண்டு மடங்காக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார். கூடிய விரைவில் இந்தத் தொடர் அமேசான் பிரைமில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram
போஸ்டர்
கலவரமாக ஒரு திருமண மண்டபத்தில் ஒரு கொத்து வாடிய ரோஜாப் பூக்கள் கிடக்கும் வகையிலான போஸ்டரை இன்று அப்டேட் உடன் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.
ஜோயா அக்தர்
ஜிந்தகி மிலேகி நா தோபாரா, கல்லி பாய் ஆகியப் படங்களை இயக்கி பாலிவுட் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தைக் கொண்டவர் ஜோயா அக்தர். நெட்ஃப்ளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் முதல் பாகத்தில் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் அமேசான் பிரைமில் வெளியான தஹாட் இணையத் தொடரை தயாரித்தும் இருக்கிறார் ஜோயா.





















