Mari Selvaraj: “இந்த கதையை படமாக எடுக்க முடியாது என்ற பயந்தேன்; உதய் சாருக்கு நன்றி” - இயக்குநர் மாரி செல்வராஜ் பேட்டி!
படம் மூலம் யார்கிட்ட விண்ணப்பிக்க முடியுமோ, யார்கிட்ட கோரிக்கை வைக்க முடியுமோ தெளிவா தெரிஞ்சுதான் விண்ணப்பிச்சு இருக்குறோம் என இயக்குநர் மாரி செல்வராஜ் பேட்டியளித்துள்ளார்.
மாமன்னன் திரைப்படத்தை பார்த்த பின்னர் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “படம் எப்படி இருக்கிறது என்பதை மக்கள்தான் பார்த்து சொல்ல வேண்டும். படத்தில் என்ன இருக்கு, யார் இருக்கா..? என்ன கதை இருக்கு, படம் எதை உணர்த்துகிறது, என்னவா அது உள்வாங்கப்படுது, இதையெல்லாம் மக்கள்தான் சொல்ல வேண்டும்.
இந்த படம் முழுக்க முழுக்க சமூகம் சார்ந்த படம். எப்பவும் நீங்க படத்தை ஒரு சின்ன விஷயத்துக்குள்ள அடக்குறீங்க. படம் ஒரு 2.30 மணி நேரமா ஓடி இருக்கு. படம் நிச்சயமா மக்கள் விவாதிக்கும் படமா இருக்கும்.
படம் மூலம் யார்கிட்ட விண்ணப்பிக்க முடியுமோ, யார்கிட்ட கோரிக்கை வைக்க முடியுமோ தெளிவா தெரிஞ்சுதான் விண்ணப்பிச்சு இருக்குறோம். மக்களை நம்பி எப்படி படம் எடுத்தோம். எந்த மாதிரியான இயக்கங்கள் கிட்ட நான் பேசு முடியுமோ, கேட்க முடியுமோ அதனால்தான் படத்தில் கட்சியின் பெயருக்கு சமூகநீதி கட்சின்னு பெயர் வச்சோம்.
இயக்குநரா இந்த படம் 100 சதவீதம் வெற்றியை கொடுத்துருக்கு. இந்த கதையை படமாக எடுக்க முடியாது என்ற பயம் எனக்கு இருந்தது. கதையை சொன்னவுடன் ஒப்புக்கொள்ள மாட்டார் என்று நினைத்தேன். ஆனால் அவர் ஒப்புக்கொண்டார். அதுமட்டுமில்லாமல், இக்கதையை விரிவுபடுத்தவும், மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவும் நான் கேட்ட அனைத்தையும் செய்து கொடுத்தார். உதய் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். இது சாதாரண விஷயம் கிடையாது. பல நட்சத்திரங்கள் நடித்ததால்தான் இப்படம் மக்களிடம் சென்றடைந்தது. கருத்தும் என் ஆசையும் நிறைவேறுமா என்பது தெரியாது. என் ஆசையை நிறைவேற்றிய உதய் சாருக்கு நன்றி. அப்புறம் ரஹ்மான் சார், படத்தை புரிந்து கொண்டு என் இண்டென்ஸை புரிந்து கொண்டு பலமான இசையையும் இமோஷனலான இசையையும் கொடுத்து படத்தை தாங்கி பிடித்து இருக்கிறார். அவருக்கும் நன்றி. கேமரா மேன், உதவி இயக்குநர்கள் எல்லோருக்கும் நன்றி. அப்புறம் கீர்த்தி, ஃபஹத் சார், வடிவேலு சார் ஆகிய மூன்று பேரும் என்னை புரிந்து கொண்டு, மாரியோட எமோஷனை புரிந்து கொண்டு ஒவ்வொருத்தரும் மாறி மாறி போட்டி போட்டு கொண்டு நடித்தனர். அதன் ரிசல்டை பார்த்து இருக்கோம். எல்லாவற்றுக்கும் நன்றி. மக்களுக்கும் நன்றி.” என தெரிவித்தார்.