Maamannan Audio Launch: ”நான் முதல் படம் பண்ணும்போது பயம் இல்ல.. ஆனா மாரிக்காக பயந்தேன்’ : பா.ரஞ்சித்
மாரி செல்வராஜுக்கு இப்படி ஒரு மேடை கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது என இயக்குநர் பா.ரஞ்சித் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் பேசினார்.
பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு , உதயநிதி ஸ்டாலின் , ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். இந்த படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
சென்ற ஆண்டு மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியநிலையில் செப்டம்பர் மாதம் முடிவடைந்தது. 110 நாள்கள் வரை இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், இந்த மாதம் 29-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன், பா. ரஞ்சித், சந்தோஷ் நாராயணன், எச்.வினோத், முருகதாஸ், விஜயகுமார், விஜய் ஆண்டனி, நாஞ்சில் சம்பத், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, தேனாண்டாள் முரளி, கே.ராஜன் உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
அப்போது மாமன்னன் திரைப்படம் குறித்தும், மாரிசெல்வராஜ் குறித்தும் இயக்குநர் பா. ரஞ்சித் பேசினார். அதில், “வாழ்த்துகள்! மாரி செல்வராஜுக்கு.. மாமன்னன் பெயரை போலவே படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் பிரமாண்டமாய் நடைபெற்று வருகிறது. படத்தின் சில காட்சிகள் நான் பார்த்தேன். ரொம்ப இன்ரெஸ்டிங்கா இருக்கு. வடிவேல் சார் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் பாடல்களையும் கேட்டேன். அதுவும் அருமையாக இருந்தது. படக்குழு வெளியிட்ட முதல் பாடலே எளிய மக்களின் துயரத்தை சொல்லும் பாடலாக உள்ளது. மாரி செல்வராஜ் தான் நினைத்த கதையை இதில் கொண்டு வந்திருப்பார் என்று நம்புகிறேன். இந்த படத்தின் மூலம் மாற்றங்கள் நிகழுமா என்றால், சினிமா என்பது ஜனநாயக தன்மையானது என்று நம்புகிறேன்.
மாரி செல்வராஜுக்கு இப்படி ஒரு மேடை கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. நான் படம் பண்ணும்போது பயமில்லை. ஆனால் பரியேறும் பெருமாள் படம் செய்யும்போது பயமாக இருந்தது. மாரி செல்வராஜ் உருவாக்கிய படைப்பை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம்இருந்தது. இயற்கையாகவே அப்படம் மக்களிடம் சென்று சேர்ந்தது. சந்தோஷ் நாராயணன் இசையும் அதற்கு உதவியது. அம்பேத்கார் போட்டோ காட்டினால் மதுரை பற்றி எரியும் என்றார்கள். ஆனால் திரையரங்குகளில் மக்கள் கூடி கொண்டாடினர். பரியேறும் பெருமாள் பண்ணும்போது நிறைய பிரச்சினை இருந்தது. மக்கள் மட்டுமின்றி திரை கலைஞர்களும் உதவினர். அரசியல் பின்புலம் இருந்தாலும் மாரி செல்வராஜ் உடன் உதயநிதி இணைந்தது ரொம்ப நன்றி. ஏஆர் ரகுமான் மற்றும் வடிவேலுக்கு நன்றி. வடிவேலு கதாபாத்திரம் ஒர்க் அவுட் ஆகும் என்றார் மாரி செல்வராஜ். இதுவும் அரசியல் கதைதான். மக்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.” என பேசினார்.