மாமன்னனாக 40 ஆண்டுகளுக்கு முன்பே நடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
40 ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னனை போல் ஒடுக்கப்பப்பட்ட மக்களுக்காக ஒரே ரத்தம் என படத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்துள்ளார்
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் சாதி ஆதிக்கவாதிகளின் அடக்குமுறையும், ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும் பிரதிபலிப்பதாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனர். அதேநேரம், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னனை போல் ஒடுக்கப்பப்பட்ட மக்களுக்காக திரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்துள்ளார் என்ற தகவலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பேசும் கதாபாத்திரத்தில் மு.க.ஸ்டாலின் நடித்த திரைப்படமும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அரசியலில் மிகப்பெரிய ஆளுமையாக வலம் வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 1988ம் ஆண்டு வெளியான ‘ஒரே ரத்தம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். கருணாநிதியின் வசனத்தில் உருவான ஒரே ரத்தம் திரைப்படத்தில் கார்த்திக், ராதாரவி, பாண்டியராஜ், மனோரமா, சீதா என நடிகர்கள் பட்டாளமே நடித்த இந்த படத்தில் மு.க.ஸ்டாலின் பண்ணையார் வீட்டில் வேலை பார்க்கும் தாழ்த்தப்பட்டவரின் மகனாக நடித்திருப்பார். அதில் மு.க.ஸ்டாலின் பெயர் நந்தகுமார். தாழ்த்தப்பட்ட குலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், சென்னையில் சென்று படித்து பகுத்தறிவு வாதியாக தனது சொந்த ஊருக்கு திரும்பு மு.க.ஸ்டாலின் முதலில் எதிர்கொள்வது தீண்டாமையை தான்.
பட்டணத்தில் இருந்து வரும் மு.க.ஸ்டாலினை, ராதாரவி மாட்டு வண்டியில் அழைத்து செல்வார். அப்போது மு.க.ஸ்டாலின் தாழ்த்தப்பட்டவர் என தெரிந்ததும் வரும் உரையாடலில், “கீழே இறங்குடா கீழ் சாதிக்காரனே...கழுதையும்,குதிரையும் ஒன்றா... உன்னால் என் வண்டி தீட்டுப்பாட்டு போயிடுச்சு, பெனாயில் ஊற்றி கழுவ வேண்டும்” என மு.க.ஸ்டாலினை பார்த்து ராதாரவி பேசும் கருணாநிதியின் வசனம் சாதி தீண்டாமையின் உச்சத்தை திரையில் காட்டியது.
இன்றும் குடிநீரில் மலத்தை கலக்கும் அளவுக்கு சாதிவெறி இருக்கும் நிலையில், அதற்கு சம்மட்டி அடியாய் மாமன்னன் இருக்கும் என சிலர் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். 1988ம் ஆண்டு கீழ்சாதி தந்தைக்கு மகனாக மு.க.ஸ்டாலின் நடித்தது, தற்போது, உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். சாதி தீண்டாமையை மட்டும் இல்லாமல் அதன் பின்னால் இருக்கும் அரசியலையும், சமூக எதார்த்தத்தையும், ஆதிக்கவர்க்கத்தின் சுயநலத்தையில் திரையில் தோலுரித்து காட்டுவதால் அரசியலையும் தாண்டி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது மாமன்னன்.