Lyricist Thirumaran : 'சுதந்திர தேசமே வந்தே மாதரம்' பாடலின் பாடலாசிரியர் திருமாறன் காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Lyricist Thirumaran : பாடலாசிரியராக தன்னை நிலைநிறுத்தி கொள்ள போராடிய திருமாறன் உடல்நலக்குறைவால் காரணமானார்.
பாடலாசிரியராக, உதவி இயக்குநராக தன்னை திரைத்துறையில் நிலைநிறுத்தி கொள்ள போராடிய திருமாறன் உடல் நல குறைவால் காலமானார். இந்த செய்தி திரைதுறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரைத்துறையில் பல கனவுகளுடன் நுழைபவர்கள் தான் ஏராளம். அப்படி வரும் அனைவராலும் ஜெயித்து விட முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. ஒரு சிலரால் உடனே ஜொலித்து விட முடியும் அதே நேரம் ஒரு சிலருக்கு மெல்ல மெல்ல அவரின் திறமைகள் வெளிப்பட்டு வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் இதிலும் மனவேதனையான ஒரு சூழல் என்றால் அசாத்தியமான திறமைகள் இருந்தும் அதற்கு கடைசி வரையில் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போவது மனதுக்கு நெருடலாகவே இருந்து வருகிறது.
அப்படி மனது நிறைய கனவுகளுடன் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தவர் தான் திருமாறன். பல போராட்டங்களுக்கும் தேடல்களுக்கும் பிறகு உதவி இயக்குநராக இயங்கும் வாய்ப்பு கிடைத்தது. எஸ்.வி. சேகர் இயக்கத்தில் 1994ம் ஆண்டு வெளியான 'காலம் மாறிப்போச்சு' படத்தின் மூலம் ஒரு வாய்ப்பு பெற்றார்.
உதவி இயக்குநராக இருந்த போதிலும் எழுத்தின் மீது அவருக்கு இருந்த ஆர்வத்தால் 1998ம் ஆண்டு வெளியான 'கோல்மால்' படத்தின் மூலம் பாடலாசிரியராக அவதாரம் எடுத்தார். அப்படத்தில் இடம்பெற்ற ஹே பாப்பா, ஓ பாப்பா மற்றும் வாடா வான்னா என்ற இரண்டு பாடல்களுக்கும் அவர் தான் பாடல் வரிகளை எழுதினார். பின்னர் இராம.நாராயணன் இயக்கத்தில் வெளியான 'மாயா' படத்தில் இடம்பெற்ற தத்தக்கா பித்தக்கா... என்ற பாடல் வரிகளையும் திருமாறன்தான் எழுதினார்.
ஒரு சில சமயங்களில் அவர் எழுதும் பாடல் வரிகளுக்கு அவரே மெட்டமைத்து அவரே பாடுவாராம். இந்த உண்மை தெரிந்த பலரும் அவரை பாட வைத்து அழகு பார்ப்பார்களாம். அப்படி அதை ஒரு முறை கேட்ட அந்தோணிதாசன் தான் தன்னுடைய 'ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ்' இசை லெப் மூலம் ஒரு பாடலை வெளியிட்டுள்ளார்.
77வது சுதந்திர தினத்தையொட்டி 'சுதந்திர தேசமே வந்தே மாதரம்' என்ற திருமாறனின் பாடல் 'ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ்' யூடியூப் சேனலில் வெளியானது. அந்த பாடலை சின்னக்குயில் சித்ரா, சங்கர் மகாதேவன், ஜீவி பிரகாஷ்குமார், கேசவ் ராம், ஹஷ்வந்த், அந்தோணிதாசன், மீனாட்சி இளையராஜா, ரீத்தா அந்தோணிதாசன் மற்றும் குட்டிப்பாப்பா ரௌடி பேபி வர்ஷினி உள்ளிட்டோர் பாடி இருந்தனர். தேசப்பற்றை போற்றும் வகையில் அமைந்த இந்த பாடல் வரிகள் பலரின் கவனத்தையும் பெற்றது. இப்படி உதவி இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முக திறமை கொண்டவராக விளங்கிய திருமாறன் திரைத்துறையில் நிலைநிறுத்தி கொள்ள படாதபாடுபட்டார். நிச்சயம் ஒரு நாள் அவருக்கான அடையாளம் கிடைக்கும் என காத்திருந்த சமயத்தில் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தி திரைத்துறையை சேர்ந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருமாறனுக்கு மனைவி மற்றும் மகள் உள்ள நிலையில் அவரின் இறுதி சடங்குகள் இன்று அம்பத்தூரில் நடைபெற உள்ளது.