Ajithkumar: அடுத்தடுத்து அடி! காப்பாற்றுவாரா அஜித்? காத்திருக்கும் லைகா!
2024ம் ஆண்டு லைகா நிறுவனம் தயாரித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத சூழலில், 2025ம் ஆண்டு வெளியாகும் அஜித்தின் விடாமுயற்சி படத்தையே மிகப்பெரிய அளவில் நம்பியுள்ளனர்.
தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமாக திகழ்வது லைகா நிறுவனம். கடந்த 2014ம் ஆண்டு விஜய் நடித்த கத்தி என்ற படம் மூலமாக தமிழில் தயாரிப்பு நிறுவனமாக அறிமுகமாகியது.
கைதி நம்பர் 150, கோலமாவு கோகிலா, செக்கச் செவந்த வானம், வட சென்னை, எந்திரன் 2.0 என பல படங்களைத் தயாரித்தது.
லைகாவின் தயாரிப்பு:
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா என பலரது படங்களையும் தயாரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே லைகா நிறுவனம் தயாரித்த படங்கள் பெரிய அளவு வசூல் குவிக்கவில்லை.
2024ம் ஆண்டை பெரிதும் நம்பியிருந்த லைகா நிறுவனத்திற்கு இந்தாண்டு ஏமாற்றமாக அமைந்தது என்றே கூற வேண்டும். இந்தாண்டு லைகா தயாரிப்பில் ரிலீஸான படங்கள் எல்லாம் படுதோல்வியை அடைந்தது. இந்தாண்டு தொடக்கத்தில் வெளியான மிஷன் சாப்டர் படமே லைகா நிறுவனம் தயாரிப்பில் ரிலீஸ் ஆன முதல் படம் ஆகும். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் ரிலீஸான இந்த படம் தோல்வி அடையாமல் நல்ல வசூல் ஈட்டியது. ஆனால், அடுத்தடுத்து ரிலீசான இவர்களின் படங்கள் தோல்வியை மட்டுமேச் சந்தித்தது.
2024ல் அடுத்தடுத்து தோல்வி:
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரிலீசான லால் சலாம் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடித்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. படம் படுதோல்வி அடைந்தது. கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்திருந்தனர்.
இதையடுத்து, மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ரிலீஸ் ஆன படம் இந்தியன் 2. கமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகமாக முதல் பாகத்தை இயக்கிய ஷங்கரே இயக்கி ரிலீசான படம் இது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களால் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டது. இதனால், படம் மிக மோசமான தோல்வியை அடைந்தது.
வேட்டையன் வசூல் எப்படி?
இந்தியன் 2ம் பாகம் தந்த தோல்விக்குப் பிறகு ரிலீசான படம் வேட்டையன். ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய இந்த படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புடன் ரிலீசான இந்த படம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரஜினிகாந்த் நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் நடித்துள்ளார் என்று பாராட்டப்பட்டது. ஆனால், ரஜினிகாந்த் படத்திற்குரிய மசாலா குறைவாக இருப்பதாக ரஜினி ரசிகர்கள் கருத்துத் தெரிவித்தனர். கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்த படம் எதிர்பார்த்ததை விட குறைவான வசூலைப் பெற்றது.
இந்தாண்டு லைகா தயாரிப்பில் ரிலீசான படங்களில் மிஷன் சாப்டர் 1, வேட்டையன் படங்கள் மட்டுமே ஓரளவு வசூலை எட்டியது. லால்சலாம் மற்றும் இந்தியன் 2 படங்கள் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. இந்த நிலையில் 2025ம் ஆண்டை லைகா நிறுவனம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்துள்ளது.
காப்பாற்றுவாரா அஜித்?
2025ம் ஆண்டு லைகா நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக அஜித்குமார் நடித்த விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆக உள்ளது. துணிவு படத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் அஜித்குமார் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு உள்ளது. அஜித்தின் இந்த படம் பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆக உள்ளது.
விடாமுயற்சி படத்தையே லைகா நிறுவனம் மிகப்பெரிய அளவில் நம்பியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கியுள்ள இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக அர்ஜுன் நடித்துள்ளார். த்ரிஷா, ரெஜினா, ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விடாமுயற்சி மட்டுமின்றி அடுத்தாண்டு லைகா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட் படமான எம்புரான் படமும் ரிலீஸ் ஆக உள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்ற படமான லூசிபரின் இரண்டாம் பாகம் இந்த எம்புரான் படம் ஆகும். முதல் பாகத்தை இயக்கிய நடிகர் ப்ரித்விராஜே இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். 2025ம் ஆண்டு ரிலீஸ் ஆக உள்ள இந்த இரு படங்கள் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று லைகா நிறுவனம் நம்பிக்கையில் உள்ளது.