ரஜினிகிட்ட இதைக் கேப்பீங்களா? : ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த லெஜெண்ட் சரவணன்..
‘பெஸ்ட்டு பெஸ்டு’ என்ற தனது நிறுவனத்தின் விளம்பர பாடலுக்கு ஆடி மக்களின் மனதை ஈர்த்த அருள் சரவணன், இப்போது வெள்ளித்திரைக்கும் வந்து விட்டார். இவருக்கென்று ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கிவிட்டார்.
சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின் தலைவர் அருள் சரவணன். தன்னுடைய நிறுவனத்தின் விளம்பரத்தில் தானே மாடலாக நடித்து புது ட்ரென்ட்டை உருவாக்கியவர் இவர். திரையுலக ரசிகர்களால் செல்லமாக ‘தி லெஜன்ட்’ என்று அழைக்கப்படுகிறார். காரணம், இவர் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் வைத்திருப்பதால் மட்டுமல்ல…ரஜினி, கமல், அஜித், விஜய் என முன்னனி கதாநாயகர்களுக்கு போட்டியாக, தன் படத்தையும் பான் இந்தியா அளவில் வெளியிட இருக்கும் இவரது துணிச்சல்தான்..!
தி லெஜன்ட்!
சமீபத்தில் வெளியான இவரது தி லெஜன்ட் திரைப்படத்தின் ட்ரெயிலர், யூடியூபில் முப்பது மில்லியனுக்கும் மேற்பட்ட வியூஸ்களை அள்ளிக்குவித்திருக்கிறது.மேலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாடி வாசல் வாடி’ பாடல் தான், இளைஞர்களின் ‘ப்ளே லிஸ்டின் ரிப்பீட் மோடில்’ இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா அளவில் இப்படம் வரும் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது. பட வெளியீட்டிற்கான வேலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
‘பெஸ்ட்டு பெஸ்டு’ என்ற தனது நிறுவனத்தின் விளம்பர பாடலுக்கு ஆடி மக்களின் மனதை ஈர்த்த அருள் சரவணன், மெதுமெதுவாக நகர்ந்து இப்போது வெள்ளித்திரைக்கும் வந்து விட்டார். இவருக்கென்று ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கிவிட்டார்.
சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆசை…
தி லெஜன்ட் படத்தில் சரவணனுக்கு ஜோடியாக ஊர்வசி ரவுடேலா, ராய் லக்ஷ்மி உள்பட மூன்று கதாநாயகிகள் உள்ளனர். நடிகர் சுமன், மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், நடிகர் நாசர், மயில் சாமி, ரோபோ சங்கர், யோகி பாபு என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. ஜே டி ஜெர்ரி இயக்கும் இப்படத்திற்கு ‘மெல்லிசை மன்னர்’ ஹாரிஸ் ஜெயராஜ்
இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழாவில் நடிகைகள் தமன்னா, ஹன்சிகா மோத்வானி, யாஷிகா ஆனந்த், ராய் லக்ஷ்மி உள்ளிட்ட நடிகைகள் கலந்து கொண்டனர். இதில், தனக்கு சினிமாவில் தொடர்ந்து நடிக்க விருப்பமுள்ளதாக தெரிவித்த சரவணன், தான் இரண்டாவது படத்திலும் நடிக்க உள்ளதாக கூறி அனைவருக்கும் ‘சர்ப்ரைஸ்’ கடலில் ஆழ்த்தியுள்ளார்.
‘தி லெஜன்ட்’ படத்தில், அருள் சரவணன் வெளிநாட்டிலிருந்து வரும் சயின்டிஸ் ஹிரோவாக நடித்துள்ளார். ட்ரெயிலரில் இடம்பெற்றுள்ள இவரது சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், இப்படம் ‘ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ்’ நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘தி லெஜன்ட்’ படத்திற்கான ‘ப்ரமோஷன்’ வேலைகளை படக்குழு 'வெறித்தனமாக' மேற்கொண்டு வருகிறது. மேலும் , படத்தின் விளம்பரம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறது.
"ரஜினியிடம் இப்படி கேட்பீர்களா?"
லெஜன்ட் படத்தின் விளம்பர நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சமீபத்தில் ‘லெஜன்ட்’ திரைப்படத்தின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர். “ அனைவருக்கும் வணக்கம்” என முதலில் தமிழில் ஆரம்பித்த சரவணன், “அந்தர் கீ நமஸ்காரம்” என தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் புகுந்து விளையாடி காண்பவர்கள் அனைவரையும் திக்குமுக்காட செய்தார் !
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். அதில் ஒரு செய்தியாளர், “இத்தனை வருடங்களுக்கு பிறகு இந்த வயதில் நீங்கள் நடிக்க வந்தது ஏன்?” என அவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு சரவணன், “தமிழில் ரஜினி,கமல், சரத்குமார், இந்தியில் அமிதாப் பச்சன் என என்னை விட வயதில் மூத்தவர்கள் உள்ளனர். அவர்களும் தான் படங்களில் நடித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் போய் இப்படி கேள்வி கேட்பீர்களா?” என கேள்வி கேட்டவரிடமே கேள்விகேட்டு, அவர் வாயடைக்கும் வகையில் சிரித்துக்கொண்டே கூலாக பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது கனவாக இருந்ததாகவும் அந்தக் கனவை அடைய நிறைய உழைக்க வேண்டியிருந்தது என்றும் கூறினார். மேலும், வியாபாரத்தில் கடுமையாக உழைத்து தான் ஒரு இடத்தை அடைந்து விட்டதால் சினிமாவில் நடிப்பதற்கு இப்போதுதான் வாய்ப்பு கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.
இப்படி தமிழ் சினிமாவில் புதிதாக கால் பதித்திருக்கும் சரவணன், "உண்மையிலேயே ஒரு லெஜண்டாக உருவெடுத்து விடுவாரோ?!" என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் எழுந்துள்ளது.