Lawrence : ஜெய்பீம் படத்தின் நிஜ பார்வதியம்மாள் ஞாபகம் இருக்குதா? சொன்னதைச் செய்த லாரன்ஸ்; குவியும் பாராட்டு..
வீடு கட்டி கொடுப்பதற்கு பதிலாக ரூபாய் ஐந்து லட்சம் பணத்தினை ஜெய்பீம் படத்தின் உண்மை நாயகி பார்வதி அம்மாவிற்கு வழங்கிய நடிகர் லாரன்ஸ்.
வீடு கட்டி கொடுப்பதற்கு பதிலாக ரூபாய் ஐந்து லட்சம் பணத்தினை ஜெய்பீம் படம் காட்சிப்படுத்திய அசல் பார்வதி அம்மாவிற்கு வழங்கினார் நடிகர் லாரன்ஸ்.
ஜெய் பீம்
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தின் நிஜமான வாழ்க்கையினை கொண்டவர்கள்தான் ராஜா கண்ணுவும் அவரது மனைவியும் அவரது உறவினர்களும். ஜெய் பீம் படம் வெளியாகி கொஞ்ச நாட்களில் ராஜாகண்ணுவின் மனைவி பார்வதிக்கு வீடு கட்டிக்கொடுப்பதாக நடிகர் லாரன்ஸ் அறிவித்திருக்கிறார்.
இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கியுள்ள ’ஜெய் பீம்’ படத்தை தயாரித்து நடித்தவர் நடிகர் சூர்யா. மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தினையே ‘ஜெய் பீம்’ படமாக எடுத்திருக்கிறார்கள் படக் குழுவினர்.
ராஜாகண்ணு, பார்வதி
கடலூர், விருதாச்சலத்தை அடுத்த கம்மாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமம் முதனை. அப்பகுதியைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு. 1993-ஆம் ஆண்டு புனையப்பட்ட ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜாக்கண்ணு காவல்துறையால் லாக்அப்பில் அடித்து கொலை செய்யப்பட்டார். பழங்குடி வேட்டை சமூகத்தைச் சேர்ந்த அவரது கொலை வழக்கில் தொடர்புடைய காவல்துறையினர் உள்ளிட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. புனையப்பட்ட வழக்கில் லாக்கபில் கொலை செய்யப்பட்ட ராஜாக்கண்ணு குறிப்பிட்ட அந்த திருட்டு நிகழ்வில் தொடர்பில்லாதவர் என்பது பெரும் விசாரணையில் தெரியவந்தது. இருளர் - பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு கொலை வழக்கில் ஆஜராகி நீதி பெற்றுத் தந்தவர் வழக்கறிஞர் கே.சந்துரு. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கம்மாபுரம் முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜா மோகன் மூலமாக வழக்கறிஞர் சந்துருவை பார்வதி அணுகவே வழக்கு உயர்நீதிமன்றத்தை அடைந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கே.சந்துரு, வழக்கறிஞராக பணியாற்றிய காலகட்டத்தில் அவர் எடுத்து நடத்திய இந்த வழக்குதான் 'ஜெய் பீம்' படமாக உருவாகி பாராட்டுக்களை குவித்துக்கொண்டிருக்கிறது.
நடிகர் லாரன்ஸ்
கணவரின் நீதிக்காக கடைசிவரை போராடிய ராஜாக்கண்ணுவின் 75 வயதான மனைவி பார்வதி தற்போதும் தனது சொந்த கிராமமான முதனை கிராமத்தில் வசித்து வருகிறார். அவரது நிலைக்குறித்துக் கேள்விப்பட்ட நடிகர் லாரன்ஸ் வீடுகட்டித் தருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு அதாவது 2021 நவம்பர் 8ம் தேதி வீடு கட்டித்தருவதாக கூறியிருந்தார். அவரது டிவிட்டர் பதிவில், ” செய்யாத குற்றத்திற்காக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் வாழ்க்கை நிலைக்குறித்துக் கேள்விப்பட்டு துயருற்றேன். அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டித்தருவதாக உறுதியளித்திருக்கிறேன். 28 வருடங்களுக்குமுன் நடந்த ஒரு கொடூரமான துயர நிகழ்வை இன்றைக்கு தமிழகம் முழுக்க பேசுபொருளாக்கிய ’ஜெய் பீம்’ படக்குழுவினருக்கும், ’ஜெய் பீம்’ படத்தை உரிய கலைப்படைப்பாக மாற்றிய சூர்யாவுக்கும், ஜோதிகா, இயக்குநர் ஞானவேலுக்கும் என் பாராட்டுகளும் நன்றிகளும்” என குறிப்பிட்டுருந்தார்.
வீட்டிற்கு பதிலாக 5 லட்சம்
அதேவேளையில், ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு தமிழக அரசே வீடு கட்டி கொடுப்பதாக அறிவித்து வீடு கட்டியும் கொடுத்தது. இதனால் நடிகர் லாரன்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்ததற்கு பதிலாக ரூபாய் ஐந்து லட்சம் பணத்தினை பார்வதி அம்மாவிடம் ஒப்படைத்திருக்கிறார். இதனால் அவருக்கு எட்டுத்திக்கிருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது.