(Source: ECI | ABP NEWS)
கன்னியாஸ்த்திரி ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட சரோஜா தேவி...நடிகையானது எப்படி தெரியுமா?
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் தான் ஒரு கன்னியாஸ்திரியாக வேண்டும் என்று ஆசைப்பட்டதாக தனது வாழ்க்கை வரலாற்றில் சரோஜா தேவி குறிப்பிட்டுள்ளார்

சரோஜா தேவி மரணம்
பழம்பெறும் நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக காலமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவின் தனிப்பெரும் அடையாளமாக திகழ்ந்தவர் சரோஜா தேவி பெங்களூரில் தனது வீட்டில் காலமானார். அவரது இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரைசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 50 ஆண்டுகால திரை வாழ்க்கையில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சரோஜா தேவி . இந்திய திரையுலகமே போற்றும் நடிகையான சரோஜா தேவி நடிக்க வருவதற்கு முன் கன்னியாஸ்திரியாகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டது பலருக்கு தெரியாத தகவல்
கன்னியார்ஸ்திரி ஆக விரும்பிய சரோஜா தேவி
" பெங்களூரில் சாம்ராஜ்பேட்டையில் தான் நான் பிறந்தேன். அங்கு எங்கள் வீட்டு பக்கத்தில் கோட்டை ஆஞ்சநேயர் கோயில் இருந்தது. அம்மா என்னை அந்த கோயிலுக்கு அடிக்கடி அழைத்து செல்வார். 12 - 13 வயதிலேயே நான் நன்றாக வளர்ந்திருந்தேன். பார்ப்பவர்கள் எல்லாரும் என் வளர்ச்சி பற்றி தான் கேட்பார்கள். நான் படித்த கான்வெண்டில் ஒரு அநாதை ஆசிரமம் இருந்தது. அங்கிருக்கும் கன்னியாஸ்த்திரிகள் குழந்தைகளை பார்த்துகொள்ளும் விதம் என்னை ரொம்பவும் கவர்ந்தது. அவர்களைப் போல நானும் கன்னியாஸ்த்திரியாக வேண்டும் என்று ஆசை வந்தது. என் வீட்டில் பூ பொட்டு எல்லாம் வைத்து என்னை பள்ளிக்கு அனுப்புவார்கள். பள்ளியில் ஒரு சர்ச் இருக்கும். ஜீசஸ் முன் சென்று மனமுருகி பிரார்த்தனை செய்வேன். பூ பொட்டு எங்கே என்று கேட்டால் விளையாடும் போது அழிந்துவிட்டது என்று சொல்லிவிடுவேன். தினமும் பள்ளிக்கு பஸ்ஸில் போக அம்மா பணம் கொடுப்பார். அதை சேமித்து வைத்து நடந்து பள்ளிக்கு போவேன். அந்த பணத்தை ஆசிரமத்திற்கு கொடுத்துவிடுவேன்.
ஜோசபின் டீச்சரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் பைபிளை படிக்கும்போது விம்மி விம்மி அழுவேன். சர்ச்சில் பிரார்த்தனை செய்ததை ஒரு நாள் கமலா அக்கா பார்த்து அம்மாவிடம் சொல்லிவிட்டார். இனிமேல் இப்படி செய்ய வேண்டாம் என்று அம்மா அட்வைஸ் செய்தார். சச்சிற்கு வந்து ஜீசஸ் முன் மண்டியிட்டு அழுதுகொண்டிருந்தேன். அப்போது ஜோசபின் டீச்சர் அங்கு வந்தார். நான் கன்னியாஸ்த்திரியாகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுதாக அவரிடம் சொன்னேன். என் அப்பா போலீஸ் என்பதால் அவரிடம் சென்று பேசுவதற்கு அச்சமாக இருந்தது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றால் கன்னியாஸ்த்திரியாக வேண்டும் என்று அவசியம் இல்லை எதுவாக இருந்து சேவை செய்யலாம் என்று ஜோசபின் டீச்சர்தான் சொன்னார். "
சினிமாவிற்கு வந்தது எப்படி
"சின்ன வயதில் இருந்து நான் நன்றாக பாடுவேன். போலீஸ் துறையில் அடிக்கடி நாடகம் போடுவார்கள். என் அப்பாவிற்கு நாடகம் இயக்குவதில் ஆர்வம் அதிகம். அவர் இயக்கிய நாடகம் ஒன்றில் எனக்கு பாலகிருஷ்ணா வேடம் கொடுத்தார். அதில் நான் நடித்ததை நிறைய பேர் பாராட்டினார்கள். என் பள்ளி ஆண்டுவிழாவின் போது நான் ஒரு இந்தி பாடலை பாடினேன். அந்த நிகழ்ச்சிக்கு ஹோனப்பா பாகவதர் வந்திருந்தார். பி.யு.சின்னப்பா , தியாகராஜ பாகவதருக்கு அடுத்தபடியாக ஹோனப்ப பாகவதர் பிரபலமாக அறியப்பட்டவர். நான் பாடுவதைக் கேட்டு எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். என் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியே. ஹோனப்ப பாகவதர் இயக்கிய ஶ்ரீராம பூஜா படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்தேன். " என தான் சினிமாவிற்கு வந்த பின்னணியை கூறியுள்ளார் சரோஜா தேவி





















