Lal Salaam: AI மூலம் மறைந்த பாடகர்களின் குரலில் பாடல்.. லால் சலாமில் ஏ.ஆர்.ரஹ்மான் செய்த மேஜிக்..!
சமீபகாலமாக AI எனப்படும் Artificial intelligence தொழில்நுட்பம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் லால் சலாம் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பான சம்பவம் ஒன்றை செய்துள்ளார்.
லால் சலாம் படத்தில் அனைவரும் பிரமிக்கத்தக்க வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பான சம்பவம் ஒன்றை செய்துள்ளார்.
3, வை ராஜா வை படங்களை இயக்கிய நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தற்போது “லால் சலாம்” படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் பிப்ரவரி 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்ராந்த், விஷ்ணு விஷால், நிரோஷா, தன்யா பாலகிருஷ்ணன், அனந்திகா சனில்குமார், செந்தில், கே.எஸ்.ரவிகுமார், ஜீவிதா, தம்பி ராமையா என பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
அதேசமயம் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கேரக்டரில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். விளையாட்டில் இருக்கும் மத வேறுபாடுகள் பற்றியும், மத நல்லிணக்கம் பற்றியும் லால் சலாம் படம் எடுத்துரைக்கிறது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் இரண்டு பாடல்களும் முன்னதாகவே வெளியாகியது.
கடந்த மாதம் ரஜினி பிறந்தநாள் அன்று மொய்தீன் பாய் காட்சிகள் அடங்கிய கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இதனிடையே லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படம் பற்றிய பல்வேறு தகவல்களை ரஜினி, ஐஸ்வர்யா தொடங்கி தம்பி ராமையா வரை பகிர்ந்து கொண்டனர். விரைவில் லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சத்தமே இல்லாமல் அனைவரும் ஆச்சரியப்படும் வண்ணம் சிறப்பான சம்பவம் ஒன்றை செய்துள்ளார். சமீபகாலமாக AI எனப்படும் Artificial intelligence தொழில்நுட்பம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் பிரதமர் மோடி பல்வேறு மொழிகளில் பாட்டு பாடுவது போலவும், மறைந்த பாடகர்கள் மீண்டும் தற்கால பாடல்களை பாடுவது போலவும் வீடியோக்கள் வெளியாகி வைரலானது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டு ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு சிறப்பான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
அதாவது 1998 ஆம் ஆண்டு காலமான பாடகர் ஷாகுல் ஹமீது மற்றும் 2022 ஆம் ஆண்டு காலமான பம்பா பாக்யா ஆகிய இரு பாடகர்களின் குரலையும் AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தி லால் சலாம் படத்தில் திமிறி எழுடா என்ற பாடலை உருவாக்கியுள்ளார். இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.