Laandhar Movie: விதார்த் மாதிரியான நடிகர் கிடைத்தால் 50 சதவீத சுமை குறைந்துவிடும்.. லாந்தர் பட இயக்குநர் பாராட்டு!
Laandhar Movie: "விதார்த் கதை சொல்லும் போதே அவர் தனக்கான பங்களிப்பை தீர்மானித்து விடுவார். விதார்த் போன்றதொரு அனுபவம் வாய்ந்த நடிகர் கிடைத்துவிட்டால் ஐம்பது சதவீத சுமை குறைந்து விடும்"
விதார்த் நடித்துள்ள லாந்தர் படத்தின் இசை வெளியீட்டு விழா முன்னதாக நடைபெற்றது. சாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லாந்தர்' படத்தில் ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எம்.எஸ்.பிரவீன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் முன்னதாக நடைபெற்றது.
அப்போது பேசிய படத்தின் ஹீரோ விதார்த், ''நாயகன் போலீஸ் என்று சொன்னவுடன் மூன்று மாதம் நேரம் ஒதுக்குங்கள், உடலை முறுக்கிக் கொண்டு வருகிறேன் என்றேன். இதற்கு இயக்குநர் அந்தக் கதாபாத்திரம் பொதுமக்களின் பிரதிநிதி. அதனால் நீங்கள் இப்போது இருக்கும் தோற்றத்திலேயே வாருங்கள் என்றார்.
படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், இசையமைப்பாளர் என அனைவரும் புதுமுகங்கள். இந்த திரைப்படத்தின் மூலம் அவர்களின் திறமை வெளியே தெரியும்.
பாடலாசிரியர் தேவாவிற்கு சிறப்பான எதிர்காலம் உண்டு. நான் ஏராளமான தயாரிப்பாளர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் பத்ரி போன்ற ஒரு தன்னடக்கம் மிகுந்த மனிதரை சந்தித்ததில்லை. . சினிமா மீது இவர் வைத்திருக்கும் ஆர்வத்தின் காரணமாகவே இவர் வெற்றி பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். ஏனெனில் இவர் 'லாந்தர்' படத்தின் மூலம் வெற்றியைப் பெற்றால் தொடர்ந்து படங்களை தயாரிப்பார்" என்றார்.
இயக்குநர் சாஜி சலீம் பேசுகையில், ''என்னுடைய தயாரிப்பாளர் பத்ரி அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஏனெனில் நான் சொன்ன கதையை நம்பி முதலீடு செய்து எந்த தடங்கலும் இல்லாமல் படத்தின் பணியை நிறைவு செய்திருக்கிறார். அவருடன் பழகிய இந்த ஒரு ஆண்டில் தான் என்னுடைய பேங்க் பேலன்ஸ் ஏறி இருக்கிறது. பணத்தை கேட்பதற்கு முன்பே என்னுடைய வங்கி கணக்கில் செலுத்தி விடுவார். என்னை மட்டுமல்ல ஒட்டுமொத்த படக் குழுவினர் மீதும் அவருடைய அக்கறையான அரவணைப்பு இருந்தது.
என்னுடைய தந்தையார் கே. என். முகமது ஷரீப் என்னுடைய சிறிய வயதில் நாவல்களை வாங்கி தந்து படிக்கச் சொல்லி ஊக்கப்படுத்துவார். அதன் பிறகு வாசித்த கதைகளை சொல்லச் சொல்லி கேட்பார். அதன் பிறகு சில கதைகளை எழுதச் சொல்லி பயிற்சியும் தந்திருக்கிறார். அவர் இன்று இல்லை என்றாலும் அன்று அவர் அளித்த பயிற்சிதான் இன்று என்னை மேடையேற்றி இருக்கிறது.
நான் திரைத்துறையில் வாய்ப்பு தேடுவதற்கு முன் என் மாமியாரிடம் தான் அனுமதி கேட்டேன். ஏனெனில் எனக்கென்று ஒரு குடும்பம் இருந்தது. அந்தக் குடும்பத்தை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, திரைத் துறையில் வாய்ப்பு தேடத் தொடங்கினேன். அந்தத் தருணத்தில் 'உங்களால் வெற்றி பெற முடியும். நீங்கள் சென்று வாருங்கள். நான் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன்' என்று அவர் உறுதிமொழி அளித்தார். அவர் தாயாக இருந்து குடும்பத்தை பாதுகாத்ததால் தான் என்னால் திரைத்துறையில் பணியாற்ற முடிந்தது.
இதனைத் தொடர்ந்து என்னுடைய மனைவி சாஜிதா பானு. மற்றவர்கள் செய்த உதவியை வேறு எந்த வகையிலாவது அவர்களுக்கு என்னால் பதிலுக்கு செய்திட இயலும். ஆனால் எனக்காக என்னுடைய மனைவி பதினைந்து ஆண்டுகாலம் வாழ்க்கையை தியாகம் செய்தார். அதை எந்த வகையிலும் என்னால் திருப்பித் தர இயலாது. இனிமேல் அவர்களை சிறப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். இவர் இல்லையென்றால் இன்று நான் மேடையில் ஏறி பேசியிருக்க இயலாது.
இத்திரைப்படத்தை இருபத்தி மூன்று நாட்களில் படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்வதற்கு கடுமையாக உழைத்தவர்கள் என்னுடைய உதவி இயக்குநர்கள். அவர்கள் உதவி இயக்குநர்கள் அல்ல. உதவிய இயக்குநர்கள். இவர்களைத் தொடர்ந்து படப்பிடிப்பு முதல் தற்போது வரை உதவிக் கொண்டிருக்கும் தயாரிப்பு குழுவினருக்கும் நன்றி. படத்தின் இசையமைப்பாளரான பிரவீன் எங்களுடைய நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறார். பாடல்களையும், பின்னணி இசையும் சிறப்பாக வழங்கியிருக்கிறார்.
முதல் திரைப்படத்தை இயக்கும் இயக்குநர்களுக்கு விதார்த் போன்றதொரு அனுபவம் வாய்ந்த நடிகர் கிடைத்துவிட்டால் ஐம்பது சதவீத சுமை குறைந்து விடும். ஏனெனில் கதை சொல்லும் போதே அவர் தனக்கான பங்களிப்பை தீர்மானித்து விடுவார். அவரிடம் படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளையும், வசனங்களையும் விளக்க வேண்டிய அவசியம் இருக்காது. கதாபாத்திரத்திற்கு அவ்வளவு நம்பகத்தன்மையுடன் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார்.
இந்தப் படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் குறித்து சில வரிகளில் தான் விவரித்தேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நான் எதிர்பார்த்ததை விட அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு வருகை தந்திருந்தார். அவரைப் பார்த்தவுடன் நான் வியந்து விட்டேன். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.