K.R. Vijaya: சொந்த விமானம் வைத்திருந்த முதல் நடிகை... அக்கா பற்றி புகழ்ந்து பேசிய தங்கை கே.ஆர். வத்சலா
K.R. Vijaya : நடிகை கே.ஆர். விஜயா பற்றிய ஆச்சரியமான தகவல்களை அவரின் சகோதரியும் நடிகையுமான கே.ஆர். வத்சலா பகிர்ந்து இருந்தார்.
மூன்று தலைமுறைகளாக நடித்து கொண்டு இருக்கும் பழம்பெரும் நடிகை கே.ஆர். விஜயா அனைவராலும் புன்னகை அரசி என கொண்டாடப்பட்டவர். 1963ம் ஆண்டு 'கற்பகம்' திரைப்படம் மூலம் அறிமுகமான கே.ஆர். விஜயாவின் இயல்பான நடிப்பு அவருக்கு அடுத்தடுத்து தமிழ் திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், சிவகுமார் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகையான கே.ஆர். விஜயா நடிப்பில் ஒரே ஆண்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியான காலகட்டம் எல்லாம் இருந்தன. பக்தி படங்கள் என்றால் கே.ஆர். விஜயா இல்லாமல் இருக்காது. அந்த அளவுக்கு கடவுள் கதாபாத்திரங்களுக்கு முதல் சாய்ஸ் கே.ஆர் விஜயா தான்.
சினிமாவில் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே தொழிலதிபரை 1966ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த 60 ஆண்டு காலமாக 500 மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கே.ஆர். விஜயா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார். அவர் கணவர் தயாரித்த ஏராளமான திரைப்படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்தன. வீடு, வாசல், சொத்து என மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வந்த கே.ஆர். விஜயா சொத்துக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில் வாடுகிறார் என்றும் இறந்து விட்டார் என்றும் பல வதந்திகள் அவ்வப்போது இணையத்தில் பரவி வருகின்றன.
இது குறித்து நடிகை கே.ஆர். விஜயாவின் தங்கையும் நடிகையுமான கே.ஆர். வத்சலா சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசி இருந்தார்.
என்னுடைய அக்கா ஆரோக்கியமாக நலமாக இருக்கிறார். அவர் வீட்டை விற்று விட்டார், இறந்து விட்டார் என தயவு செய்து பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம். இது போன்ற வதந்திகள் எல்லாம் என்னுடைய அக்காவுக்கு பழகிப் போனதால் அவர் இது குறித்து வருத்தப்படுவது எல்லாம் கிடையாது. அவருக்கு என்றும் பண தேவை என்ற ஒரு சூழ்நிலை வந்ததே இல்லை. அக்காவும் நானும் பேசி கொள்ளும் போது கடவுள் பற்றியும் சமையல் பற்றியும் தான் பேசிக்கொள்வோம். அக்கா மிகவும் அருமையாக சமைப்பார் என கூறி இருந்தார்.
மேலும் அவர் பேசுகையில் அக்கா ஷூட்டிங் சென்று வருவதற்காக சொந்தமாக விமானம் ஒன்றை வைத்து இருந்தார். நான்கு கப்பல்களை கூட வைத்து இருந்தார். தமிழ் சினிமாவில் முதன்முதலாக தனி விமானம், கப்பல் எல்லாம் வைத்திருந்த முதல் நடிகை என்ற பெருமையை பெற்றவர் கே.ஆர். விஜயா. அவரின் தங்கை கே.ஆர். வத்சலா சொன்ன இந்த தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.