அதிர்ச்சி! மறு அறிவிப்பு வரும் வரை படப்பிடிப்புக்கு நோ! தயாரிப்பாளர் சங்கம் முடிவுக்கு காரணம் என்ன?
தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் சங்கத்தினர் மறு அறிவிப்பு வரும் வரை படப்பிடிப்பு நடத்த வேண்டாம் என்று அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் தமிழ் திரையுலகம் தவிர்க்க முடியாத திரையுலம் ஆகும். ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் தமிழ் சினிமாவின் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
நடிகர்கள் ஊதிய விவகாரம்:
தமிழ் சினிமாவில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பல ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒரு சங்கம் உள்ளது. ஒவ்வொரு சங்கத்தினருக்கும் இடையே ஏராளமான கருத்து வேறுபாடுகளும், சிக்கல்களும் உள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.
சமீபகாலமாக, தமிழ் திரையுலகில் நடிகர்களின் அதிக சம்பளங்கள் காரணமாக தயாரிப்பாளர்கள் பல சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிகிறது. இதனால், நடிகர்களின் ஊதியத்தை குறைக்க கூறி தயாரிப்பாளர்கள் தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
படப்பிடிப்பு கிடையாது:
இந்த நிலையில், நடிகர்களின் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கத்தினர் நடிகர் சங்கம், பெப்சி உள்ளிட்ட சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றாலும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை தமிழில் புதிய படங்களின் படப்பிடிப்பை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திரைப்படங்களின் படப்பிடிப்புகளை மட்டும் நடத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய விவகாரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து மற்ற சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
தயாரிப்பு செலவுகள்:
புதிய படங்களின் பணிகளை தொடங்க வேண்டாம் என்ற அறிவிப்பால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அடுத்தாண்டு வெளியீடாக பல படங்களை வெளியிடலாம் என்ற அடிப்படையில் பணிகளைத் தொடங்க திட்டமிட்டிருந்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
உச்சபட்ச நடிகர்களின் சம்பளம் என்பது தயாரிப்பாளர்களுக்கு பெரும் சிரமமான ஒன்றாக அமைந்துள்ளது. ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற நடிகர்களின் ஊதியமானது பல சிறு படங்களின் தயாரிப்புச் செலவிற்கு நிகராக இருக்கிறது. சில நேரங்களில் இந்த படங்கள் எதிர்பார்த்த வசூலை எட்ட முடியாவிட்டால் தயாரிப்பாளர்கள் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நடிகர்களின் ஊதியத்திற்கே பல கோடிகளில் செலவு செய்வதால் தரமான திரைப்படங்களை உருவாக்குவதில் தயாரிப்பாளருக்கு சிரமம் ஏற்படுகிறது. இந்த குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஏற்பட்டு வருகிறது.
மேலும், பெரும் பட்ஜெட் படங்கள் காரணமாக சிறு பட்ஜெட் படங்களுக்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து எழுந்து வருகிறது. அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கவும் தொடர்ந்து சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.