52 years of Rickshawkaran: புரட்சித் தலைவர் மாயாஜாலம் செய்த 'ரிக் ஷாக்காரன்'..! 52 ஆண்டுகளை கடந்தும் மனதில் நிற்கும் மாயம்..!
எம்.ஜி.ஆருக்கும் நடிப்பு துறையில் வாய்ப்புகள் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. சிறு சிறு கதாபாத்திரங்கள் என்றாலும் அதை திறம்பட செய்து மக்களால் ஏழை பங்காளனாக அடையாளம் காணப்பட்டு கொண்டாடப்பட்டார்.
பதினான்கு வயதில் நடிக்க துவங்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு ஆரம்ப காலகட்டத்தில் உறுதுணையாய் இருந்தது மேடை நாடகங்களே. பெரும்பாலான நடிகர்களை போலே எம்.ஜி.ஆருக்கும் நடிப்பு துறையில் வாய்ப்புகள் என்பது அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. இப்படி படிப்படியாக தனது திறமையால் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்க அவருக்கு ஆறு ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. சிறு சிறு கதாபாத்திரங்கள் என்றாலும் அதை திறம்பட செய்து மக்களால் ஏழை பங்காளன் என அடையாளம் காணப்பட்டு கொண்டாடப்பட்டார்.
முதல் வண்ண படம் :
எம்.ஜி.ஆரின் பல திரை பரிணாமங்களில் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது 1971ம் ஆண்டு வெளியான 'ரிக்ஷாக்காரன்' திரைப்படம். கருப்பு வெள்ளை படங்களின் ஆதிக்கத்தில் சத்யா மூவீஸ் தயாரித்த முதல் வண்ணப்படத்தில் எம்.ஜி.ஆர் தான் நடிக்க வேண்டும் என எடுக்கப்பட்ட படம் தான் 'ரிக்ஷாக்காரன்'. கொலை குற்றவாளியை போலீசாரின் உதவியோடு கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி நீதியை நிலைநாட்டிய இப்படத்தின் கதையில் ஏகப்பட்ட ட்விஸ்ட் வைத்து விறுவிறுப்பாக நகர்த்தியது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று கொடுத்தது.
பத்மினி, அசோகன், ஜி. சகுந்தலா, மனோகர், தேங்காய் ஸ்ரீனிவாசன், மேஜர் சுந்தரராஜன், ராமதாஸ், சோ உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் மஞ்சுளா. பெரிய திரை பட்டாளமே இப்படத்தில் நடித்து இருந்தாலும் அவரவரின் பங்களிப்பை சிறப்பாக கொடுத்தது படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ஆர்.கே.சண்முகம் வசனங்கள், ராமமூர்த்தியின் ஒளிப்பதிவு, மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் இசை போன்றவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது. அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும், அழகிய தமிழ் மகள் இவள், கடலோரம் வாங்கிய காத்து போன்ற பாடல்கள் காதுகளுக்கு இனிமை சேர்க்கும் ரகம்.
தேசிய விருது பெற்ற முதல் நடிகர் :
ஒரு ரிக் ஷாக்காரன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஏராளமான பயிற்சிகளை மேற்கொண்டார். கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் அனல் தெறிக்கும் சண்டை படத்திற்கு ஹைலைட். சண்டை காட்சிகள் மட்டுமின்றி இயல்பான நடிப்பில் மக்களின் இதயங்களை கவர்ந்தார். இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற முதல் நடிகராக எம்.ஜி.ஆர் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் வாழ்க்கை :
எம்.ஜி.ஆர் வாழ்க்கையில் 1971ம் ஆண்டு ஒரு திருப்புமுனையாக அமைந்த ஆண்டாகவே கருதப்படுகிறது. அதற்கு காரணம் புரட்சி நடிகர் என்ற நிலையில் இருந்து புரட்சி தலைவர் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டார். தி.மு.கவில் இருந்து பிரிந்து அதிமுக கட்சியை துவங்கினார். இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு நடிகர் முதல்வராக பதவியேற்றது என்றால் அது எம்.ஜி.ஆர் தான். சாமானிய மக்களுடன் பிணைப்பை ஏற்படுத்த திரை வாழ்க்கையுடன் சேர்த்து அரசியல் வாழ்க்கையும் இணைத்து கொண்டார்.
51 நாட்களில் 50 லட்சம் வசூலித்தது ரிக் ஷாக்காரன் திரைப்படத்திற்கு பிறகு எம்.ஜி.ஆர் 'வசூல் சக்கரவர்த்தி' என கொண்டாடப்பட்டார். 52 ஆண்டுகளை கடந்த பின்பும் இன்றும் நம்மை சுற்றி வரும் மேஜிக்கல் திரைப்படம் ரிக்ஷாக்காரன் என்றால் அது மிகையல்ல.