KH233 Rise To Rule: எச்.வினோத் மூலம் தேர்தல் வியூகம் வகுக்கும் கமல்..! மக்கள் மத்தியில் எடுபடுமா?
எச்.வினோத் மூலம் கமல்ஹாசன் வகுத்துள்ள தேர்தல் வியூகம் மக்கள் மத்தியில் எடுபடுமா? என்பது வாக்காளர்களின் கைகளில்தான் உள்ளது.
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமும், பன்முக திறனும் கொண்டவர் கமல்ஹாசன். உலகநாயகன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கமல்ஹாசனின் விக்ரம் படம் மாபெரும் வெற்றி பெற்ற பிறகு, அவர் மீண்டும் கோலிவுட்டில் தனது முழு ஈடுபாட்டுடன் களமிறங்கியுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள கமல்ஹாசன், பிரபாஸ் நடிக்கும் ப்ராஜெக்ட் கே படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் ஏற்கனவே வெளியாகிய நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசியல் படமா?
கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த வீடியோவில் அதிர வைக்கும் பி.ஜி.எம். இசையுடன் கையில் தீப்பந்தத்துடன் கமல்ஹாசன் நிற்கிறார். போராடும் மக்களுக்கு மத்தியில் தீப்பந்தத்துடன் நிற்கும் கமல்ஹாசனின் இந்த படம் தற்போது கமல்ஹாசன்233 என்று குறிப்பிடப்படுகிறது. அதற்கு கீழே ரைஸ் டூ ரூல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தீவிர அரசியலில் இறங்கி மக்கள் நீதிமய்யம் கட்சியை தொடங்கிய பிறகு கமல்ஹாசன் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டார். ஆனால் இரண்டு தேர்தலிலும் படுதோல்வி அடைந்தார். அதன்பின்பு, விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் திரையில் தனது ஆதிக்கத்தை செலுத்த கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.
விஜய் வருகையால் பின்னடைவு:
சமீபகாலமாக தி.மு.க.வுடன் நெருக்கமான உறவை கமல்ஹாசன் காட்டினாலும், அவர்களுடன் கூட்டணி என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக கூறவில்லை. மக்களவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், மக்கள் நீதிமய்யத்தின் நிலைபாடு என்னவென்று? அதன் தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மற்றொருபுறம் விஜய் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்திய பிறகு மக்களின் பார்வை விஜய்யின் பக்கம் அதிகளவில் திரும்பியுள்ளது. இது கமல்ஹாசனுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், திரையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தி அதன்மூலம் மக்கள் மத்தியில் தனது எழுச்சியை நிரூபிக்க கமல்ஹாசன் விரும்புவதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாகவே, எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தை அரசியல் படமாக கமல் எடுக்க விரும்புகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதன் வெளிப்பாடாகவே படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும், ரைஸ் டூ ரூல் என்ற அதன் அடைமொழியும் நமக்கு உணர்த்துகிறது.
கமல் வியூகம் எடுபடுமா?
பணம் சமூகத்தில் படுத்தும் பாட்டை சதுரங்க வேட்டை, வலிமை. துணிவு ஆகிய படங்கள் மூலம் எடுத்துக்காட்சிய எச்.வினோத் முதன்முறையாக அரசியலை மையமாக கொண்ட திரைப்படத்தை இயக்குவது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வலை ஏற்படுத்தியுள்ளது. எச்.வினோத் மூலம் கமல்ஹாசன் வகுத்துள்ள தேர்தல் வியூகம் மக்கள் மத்தியில் எடுபடுமா? என்பது மக்கள் கையில்தான் உள்ளது.