பரந்தூர் பறக்கும் விஜய்! நிதியமைச்சர் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை விஜய் சந்திக்க உள்ள நிலையில், அவரது சந்திப்பு குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, பொதுவாக விமான நிலையத்தை உருவாக்குவது என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகுந்த அவசியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏன் பரந்தூர் விமான நிலையம் அவசியமாக இருக்கிறது என்றால், இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களுடன் ஒப்பிடும்போது இப்போது இருக்கும் சென்னை விமான நிலையம் மிகச்சிறிய விமான நிலையமாக இருக்கிறது.
பரந்தூர் விமான நிலையம் ஏன் அவசியம்?
டெல்லி விமான நிலையம் ஏறத்தாழ 5 ஆயிரத்து 100 ஏக்கர், ஹைதரபாத் விமான நிலையம் 5 ஆயிரத்து 500 ஏக்கர், மும்பையில் 1350 ஏக்கர், பெங்களூரில் 4 ஆயிரத்து 8 ஏக்கர் உள்ளது. ஆனால், சென்னை விமான நிலையத்தின் பரப்பளவு 1301 ஏக்கர் மட்டும்தான் உள்ளது.
இந்த அளவீடு சிறியதாக இருந்தாலும் வருடத்திற்கு 2 கோடி பேர் பயணிக்கின்றனர். தினசரி சராசரியாக 60 ஆயிரம் பேர் இந்த விமான நிலையத்தில் பயணிக்கின்றனர். இந்த பயணிகளின் எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் 3.5 கோடியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அடுத்த 10 வருடங்களில் 8 கோடி பயனாளிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள பெருநகரங்களான டெல்லி - 5,100 ஏக்கர், ஹைதராபாத் - 5,500 ஏக்கர், பெங்களூரு - 4,008 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையங்கள் அமைந்துள்ள நிலையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் மொத்த பரப்பளவு 1301 ஏக்கர் மட்டுமே. பரப்பளவு மட்டுமின்றி பெரிய விமானநிலையத்தின் அவசியம்… https://t.co/yCUUy5KnfS
— Thangam Thenarasu (@TThenarasu) January 19, 2025
போக்குவரத்து நெரிசல்:
எவ்வளவுதான் அந்த விமான நிலையத்தை விரிவுபடுத்தினாலும் அந்த பயணிகளைச் சமாளிக்க முடியாது. சென்னை விமான நிலையத்தைச் சுற்றி நகர்ப்புறங்கள் உருவாகிவிட்டது. மீனம்பாக்கமோ, திரிசூலமோ என அதன் குடியிருப்பு பகுதிளை எந்த வகையிலும் நாம் ஏதும் செய்ய முடியாது. எதிர்காலத்தில் நமக்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக வரும்.
நமது உள்கட்டமைப்பை மேம்படுத்துவது நமது ஆட்சியின் முதல் பணி. ஒரு மாநிலத்தின் உள்கட்டமைப்பு பெரிதாகும்போதுதான் அது பொருளாதாரமாக இருந்தாலும் சரி, சுற்றுலாவாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் அதிகரிக்கும். உள்கட்டமைப்பிற்கும், வளர்ச்சிக்கும் உள்ள பிணைப்பை நாங்கள் உணர்ந்திருக்கும் காரணத்தினால்தான் மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுகிறோம்.
விஜய் சந்திப்பு:
டைட்டல் பூங்கா கலைஞர் உருவாக்கினார். அது தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கு அது வித்திட்டது. பரந்தூர் விமான நிலையம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிகோலாக அமைந்திருக்கும். இது பயணிகளின் போக்குவரத்து மட்டுமின்றி தொழில், வர்த்தகம் போன்ற வளர்ச்சி, கட்டமைப்புகளை உறுதி செய்யும்.
பரந்தூர் விமான நிலைய போராட்டக்குழுவினரைச் சந்திக்க விஜய் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் போகலாம். அங்கு அவர்களின் குறைகளை கேட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால், அரசு அந்த குறைகளை நிச்சயம் ஆராயும். அவர் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையம் தேவையான ஒன்றாக உள்ளது. அங்குள்ள மக்கள் பாதிக்காத வகையில் அவர்கள் மறு குடியமர்வுக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் முதலமைச்சர் கவனமாக உள்ளார். நிலம் வழங்குபவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கினாலும், மறு குடியமர்விலே அவர்களுக்கு வேண்டிய வாழ்வாதார வசதியை ஏற்படுத்தும் அரசு முனைப்பாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

