வெறும் 20 ஆண்டுகள் சிறை...நடிகை பாலியல் வழக்கில் 6 பேருக்கு குறைந்தபட்ச தண்டனை அறிவித்த நீதிமன்றம்
கேரளா பிரபல நடிகை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 6 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம்

கேரளாவில் பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவித்துள்ளது எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம். முன்னதாக நடிகர் திலீப் இந்த வழக்கில் இருந்து நிரபராதி என விடுதலை செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கில் சம்பந்தபட்ட பல்சர் சுனி உட்பட 6 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை அறிவித்துள்ளது நீதிமன்றம் . குற்றவாளிகளுக்கு சாகும் வரையிலான ஆயுள் தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது சமூக ஆர்வலர்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
நடிகை பாலியல் வழக்கில் தீர்ப்பு
கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகை அடையாளம் தெரியாத நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். நடிகையை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் அதனை செல்ஃபோனில் வீடியோவாகவும் எடுத்தனர். இந்த வழக்கில் பிரபல மலையாள நடிகை திலீப் உட்பட 10 பேர் குற்றசாட்டப்பட்டனர். இதில் பல்சர் சுனி என்பவர் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார். நடிகையின் மேலிருந்த தனிப்பட்ட பகை காரணமாக நடிகர் திலீப் கூலிப்படையை வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது
திலீப் விடுதலை
கடந்த 8 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வரும் இந்த வழக்கு கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. போதுமான ஆதாரம் இல்லாத காரணத்தினால் நடிகர் திலீபை நிரபராதி என அறிவித்தது நீதிமன்றம். நீதிமன்றத்தின் இந்த முடிவு பலருக்கு ஏமாற்றத்தை அளித்தது. பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் இருந்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என கூறப்பட்டது.
6 பேருக்கு 20 ஆண்டு சிறை
திலீப் நிரபராதி என அறிவித்தபின் நடிகையின் கடத்தலில் ஈடுபட்ட 6 குற்றவாளிகளுக்கு இன்று தண்டை அறிவிக்கப்பட்டுள்ளது. திலீப் விடுதலையானாலும் மீதமுள்ள குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் வெறும் 20 ஆண்டுகள் சிறை தண்டைனையும் தலா 50 ஆயிரம் அபராதமும் தண்டனையாக வழங்கியுள்ளது. அபராதத் தொகை 50 ஆயிரத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்சர் சுனி என்கிற சுனில், மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன் பி, விஜேஷ் வி.பி., சலீம் எச் மற்றும் பிரதீப் ஆகியோர் இந்த 6 குற்றவாளிகள். இந்த வழக்கின் விசாரணை காலத்தில் குற்றவாளிகள் சிறையில் கழித்த வருடங்கள் இந்த 20 ஆண்டுகளில் இருந்து கழிக்கப்படும்.





















