Karthi : சைலண்டாக கார்த்தி செய்யும் வேலை... மலிவு விலையில் உணவகம்: குவியும் பாராட்டுகள்!
Karthi : சென்னை வளசரவாக்கத்தில் இயங்கி வரும் நடிகர் கார்த்தி மக்கள் மன்ற தலைமை அலுவலக வாசலில் தினந்தோறும் மலிவு விலையில் தரமான வெஜிடபிள் பிரிஞ்சி வழங்கும் உணவகம் 500 நாட்களை நிறைவு செய்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான 'ஜப்பான்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் 'கார்த்தி 26' படத்தில் நடித்து வருகிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கைதி 2' மற்றும் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் 'சர்தார் 2' உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.
நடிப்பில் முழு ஈடுபாடுடன் இருக்கும் நடிகர் கார்த்தி அதே சமயம் பல சமுதாய நல தொண்டுகளை எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக செய்து வருகிறார். அந்த வகையில் 'கார்த்தி மக்கள் நல மன்றம்' என்ற பெயரில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் தரமான உணவை இயக்கத்தின் கீழ் மிகவும் மலிவான விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது. 50 ரூபாய் மதிப்பிலான வெஜிடபிள் பிரிஞ்சி சாப்பாடு வெறும் 10 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கார்த்தி மக்கள் மன்ற தலைமை அலுவலக வாசலில் இந்த உணவு தினமும் வழங்கப்படுவதால் 100க்கும் மேற்பட்ட மக்கள் இதனால் பயனடைகிறார்கள். அன்றாடம் வெளியில் வேலை செய்யும் பலருக்கும் தரமான மலிவான விலையில் கிடைக்கும் இந்த உணவானது மிகவும் உதவியாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தவிர திங்கள் முதல் சனி வரை வாரத்தில் ஆறு நாட்களும் மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை இந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது.
எந்த ஒரு லாபத்தையும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செய்யப்படும் இந்த சேவையை பலரும் பாராட்டி வருகிறார்கள். கடந்த பிப்ரவரி 17ம் தேதியோடு இந்த உணவகம் துவங்கி 500 நாட்களை நிறைவு செய்கிறது. சாலை பராமரிப்பு காரணமாக ஒரு சில மாதங்கள் இந்த உணவகம் செயல்படாமல் இருந்தது. ஆனால் தற்போது சாலை சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு மீண்டும் தற்போது இந்த உணவகமானது தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஊரில் உள்ள பலருக்கும் நேரத்தோடு உணவு டெலிவரி செய்யும் டெலிவரி மேன்கள், கொரியர் டெலிவரி செய்யும் ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் என பலருக்கும் தினமும் இந்த உணவு பசியாற்றுகிறது.
பலரும் அவர்கள் செய்யும் சிறு சிறு உதவியை கூட விளம்பரம் செய்து கொள்ளும் இந்த காலத்தில் எந்த ஒரு அலப்பறையோ அல்லது ஆர்பாட்டமோ இல்லாமல் அமைதியாக செய்து வருகிறார் நடிகர் கார்த்தி என அவருக்கு பாராட்டுக்கள் குவித்து வருகின்றன.