Captain Miller: தனுஷூம் இவரும் சேர்ந்து மிரட்டப்போறாங்க... ‘கேப்டன் மில்லர்’ படத்தில் கன்னட சூப்பர்ஸ்டாரின் ரோல் இதுதான்!
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாக இருக்கிறார் பிரபல கன்னட சூப்பர்ஸடார் சிவராஜ் குமார்.
தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட நடிகராக உள்ள தனுஷ் கடைசியாக ‘நானே வருவேன்’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.
தமிழில் 'சாணி காயிதம்', 'ராக்கி' ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களிடத்தில் கவனம் பெற்ற அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். தொடரி, பட்டாஸ், மாறன் ஆகிய படங்களை தொடர்ந்து தனுஷை வைத்து 4ஆவது முறையாக மிகப்பிரமாண்டமாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தில் பிரியங்கா அருள்மோகன், கன்னட ஸ்டார் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா, ஜான் கொக்கென் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் டிசம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் கன்னட சூப்பர்ஸ்டார் என்ட்ரி
‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தில் முக்கியமான நடிகர் ஒருவர் தனுஷூக்கு அண்ணனாக நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் அண்ணனான சிவராஜ்குமார் தான் அந்த நடிகர்.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ஜூன் தெரிவித்துள்ளதாவது: ”தனுஷின் கதாபாத்திரத்தை விட வயது அதிகமாக இருக்கும் ஒரு நடிகர் எங்களுக்குத் தேவைப்பட்டார். மேலும் இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கம்பீரமான தோற்றம் கொண்டவராகவும் தனுஷின் முகச்சாயலோடு ஒத்துப்போகும் ஒரு நடிகரை நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம்.
கன்னடத்தில் நாங்கள் ஒரு படத்தை தயாரித்து வருகிறோம். அந்தப் படத்தில் சிவராஜ்குமார் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனால் நாங்கள் அவரிடம் பேசி பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் அவரை பெங்களூரில் சந்தித்து கதையைச் சொன்னார். சிவராஜ்குமாருக்கு கதை ரொம்பப் பிடித்திருந்ததால் அவர் உடனே சம்மதம் தெரிவித்தார்.
இருவரும் சேர்ந்து மிரட்டபோகிறார்கள்
தனுஷ் மற்றும் சிவராஜ்குமார் இருவரும் சேர்ந்து திரையில் வரும் காட்சிகளில் ரசிகர்களை நிச்சயம் மிரட்டப்போகிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
கேப்டன் மில்லர் டீசர்
இப்படியான நிலையில் தனுஷின் 40வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவருக்கு ரசிகர்களும் திரையுலகப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் தனுஷ் பிறந்தநாளை சிறப்பிக்கும் பொருட்டு படத்தின் டீசர் நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி டீசர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதில் மிரட்டலாக இடம் பெற்றுள்ள காட்சிகளைப் பார்க்கும்போது இப்படம் தனுஷ் கேரியரில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.