Kangana Towards Big Loss; கையை சுட்டுக்கொண்ட கங்கனா... அரசியலுக்கும் உதவாத எமர்ஜென்சி...
எமர்ஜென்சி திரைப்படத்தை தயாரித்து, இயக்கி நடித்த கங்கனா ரனாவத், இந்த படத்தின் மூலம் தனது கையை சுட்டுக்கொள்வார் எனவே தெரிகிறது. இந்த படம் அவரது அரசியலுக்கும் பெரிய அளவில் உதவி செய்யவில்லை.

சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் கங்கனா ரனாவத். அரசியலுக்கு வரும் முன்னரே, சினிமாவில் பல பிரபலங்கள் குறித்து விமர்சித்தும், புகார்கள் அளித்தும், எப்போதும் பேசப்படும் நபராகவே கங்கனா விளங்கினார். அதுவே, அவர் அரசியலுக்குள் பிரவேசிக்கவும் துணையாக இருந்தது. இந்த நிலையில், அவரே தயாரித்து, இயக்கி நடிகத்த எமர்ஜென்சி திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி, அரசியல் ரீதியாகவும் சரி, அவருக்கு எந்தவித பலனையும் அளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
கங்கனாவின் எமர்ஜென்சி திரைப்படம்
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், இயக்கி நடித்த திரைப்படம் எமர்ஜென்சி. படத்தின் இணை தயாரிப்பாளராகவும் உள்ள கங்கனா, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக இதை உருவாக்கிளார். இந்திரா காந்தியின் ஆட்சியின்போது அமல்படுத்தப்பட்ட அவசர நிலையை தழுவியே இந்த படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், சில முறை தள்ளிவைக்கப்பட்டு, பலவித இன்னல்களுக்கு ஆளான எமர்ஜென்சி திரைப்படம், ஒருவழியாக ஜனவரி 17-ம் தேதி வெளியானது.

வசூலில் பின்தங்கும் எமர்ஜென்சி
எமர்ஜென்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், வெள்ளிக் கிழமை படம் வெளியானதால், வார இறுதி நாட்களில் ஓரளவு வசூலை குவித்தது. நாடு முழுவதும் சுமார் 2000 திரையரங்குகளில் வெளியான எமர்ஜென்சி திரைப்படம் முதல் நாளில், 2.25 கோடி ரூபாயை வசூலித்ததாக தெரிவிக்கப்படுகிறது. சனிக்கிழமையன்று சற்று முன்னேற்றமடைந்து 3.6 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. ஞாயிறன்று இன்றும் சற்று முன்னேற்றமடைந்து 4.35 கோடி ரூபாயை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 10 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ள எமர்ஜென்சி திரைப்படம், 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், 4-வது நாளான இன்று(20.01.25) வெறும் 44 லட்சம் ரூபாயை மட்டுமே வசூலித்துள்ளது எமர்ஜென்சி திரைப்படம். தற்போது வசூல் குறைந்துள்ள நிலையில், இதே நிலை நீடித்தால், ஒரு தயாரிப்பாளராக கங்கனா ரனாவத், கையை சுட்டுக்கொள்வது நிச்சம் என்கிறார்கள் திரைப்படத் துறையினர்.
அரசியலுக்கும் கை கொடுக்காத எமர்ஜென்சி
தற்போது பாஜக எம்.பி-யாக இருக்கும் கங்கனா, தனது கட்சியின் பிரதான எதிரியாக உள்ள கட்சியின் ஒரு பிரபல தலைவர் குறித்து எடுத்த திரைப்படம், அரசியல் ரீதியாகவும் அவருக்கு உதவவில்லை. தனது சொந்த கட்சியாலேயே அவரது பட வெளியீட்டிற்கு பிரச்னை இருந்ததாக முன்பு கூறப்பட்டது. சீக்கியர்களுக்கு எதிரான இந்த படம் இருக்கும் என ஒரு கருத்து எழுந்த நிலையில், ஹரியானா தேர்தலில் சீக்கியர்களின் வாக்குகளை பெற, பாஜகவே இந்த படத்தின் வெளியீட்டிற்கு தடையாக இருப்பதாக படத்தை இணைந்து தயாரித்த நிறுவனம் குற்றம்சாட்டியது. படத்தில் 4 இடங்களை வெட்டவும், 3 இடங்களில் திருத்தம் செய்யவும், 6 இடங்களை புதிதாக சேர்க்கவும் சென்சார் போர்டு கூறிய நிலையில், அதற்கு கங்கனா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நடந்த வரலாற்றை எந்தவித திரிபும் இன்றி அப்படியே பதிவு செய்திருப்பதாகவும், படத்தின் நமபகத்தன்மையை கெடுக்க விரும்பவில்லை எனவும் அவர் கூறினார்.
இந்த திரைப்படம், அவசர நிலைக்காக காங்கிரஸை பெரிதாக குறை கூறும்படியும் உருவாக்கப்படவில்லை என்ற கருத்தே நிலவுகிறது. வசூலிலும் கை கொடுக்காத எமர்ஜென்சி திரைப்படம், சொந்த கட்சியினரிடையேயும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எதிர் தரப்பிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால், அரசியல் ரீதியாக, இந்த படம் கங்கனாவிற்கு எந்த விதத்திலும் கை கொடுக்காது. இத்தகைய சூழலில், படத்திற்காக வீட்டையும் இழந்து நிற்கும் கங்கனாவை காப்பாற்றப்போவது யார் என்ற கேள்வியே மிஞ்சுகிறது.
இதையும் படிங்க: அசத்தும் அஜித் குமார்; அடுத்த ரேசுக்கு செலெக்ட் ஆயிட்டார்... இதோ அப்டேட்...





















