Kamalhassan about M.R. Radha : ”அதுவாடா உயிர் கொடுத்ததுன்னு கேப்பார்” : எம்.ஆர் ராதா பற்றி கமல்ஹாசன் பேசிய சுவாரஸ்யங்கள்..
பொதுவாக ஒரு நடிகர் அது போன்ற காட்சியில் நடிக்கும்போது ஆச்சரியப்படுவோம். ஆனால் எம்.ஆர். ராதா ஒரு காகத்தின் எச்சத்தைப்போல ஏய்... அப்படினு ஒரு ரியாக்ஷன் கொடுப்பார்.
தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக திகழ்ந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்டோரின் வரிசையில் இடம் பெற்ற மற்றுமொரு தவிர்க்க முடியாத பிறவி கலைஞன் நடிகவேள் எம்.ஆர். ராதா. இயல்பிலேயே திராவிட சிந்தனை கொண்டவராக திகழ்ந்த எம்.ஆர். ராதா எந்த ஒரு விஷயம் என்றாலும் துடுக்குத்தனமாக தைரியமாக பேச கூடியவர். மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவர் என்பது அவரது வசனங்களிலேயே அனல் வீசும். கதாநாயகன், குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் என அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது என சொல்லும் அளவிற்கு தனி முத்திரை பதித்த மகா திறமைசாலி. அவரின் குரல் மற்றுமொரு ஸ்பெஷலிட்டி.
ஒரு தீவிரமான நாத்திகவாதியாக இருந்த எம். ஆர். ராதா தன்னுடைய இறுதி காலகட்டங்களில் முருக பக்தராகவும், ஐயப்ப பக்தராகவும் ஆன்மீக பக்தி படங்களில் நடித்தார். நடிகர் கமல்ஹாசன் பல ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது எம்.ஆர். ராதாவின் நாத்திக குணம் பற்றி சில அனுபவங்களை பகிர்ந்து இருந்தார். "பொல்லாதவர் அவர். உயிர் கொடுத்த சாமி என்றால் அதுவா டா உயிர் கொடுத்தது என்பார். அவர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை நாஸ்ட்டி பாய்ஸ். எப்படி தான் டர்ட்டி பாய்ஸ் இந்த படுதாவை கட்டிக்கிட்டு இருக்கானுங்கனு தெரியவில்லை. அவர் லண்டன் ரிட்டர்ன் இல்லையா படுதா என்றால் வேஷ்டியாம். அதே போல குரோட்டன்ஸ் சாப்பிடுறானுங்க என்பார். வெற்றிலையை தான் குரோட்டன்ஸ் என்பாராம். எப்படித்தான் அப்படியெல்லாம் யோசிப்பாருன்னு தெரியாது. ஜெயிலில் இருந்து வந்த பிறகு பக்தி படங்களில் நடித்தார். அது ஒரு ஸ்வாரஸ்யமான கதை. அது ஒரு முருக படம். அதில் அவர் நாத்திகனாக இருந்து ஆத்திகனாக மாற வேண்டியது. துஷ் என்ற ஒரு சத்தம் வந்ததும் அவர் நடிக்க வேண்டும். பொதுவாக ஒரு நடிகர் என்றால் அப்படிப்பட்ட காட்சியில் ஆச்சரியப்படுவோம். ஆனால் எம்.ஆர். ராதா ஒரு காக்கை எச்சத்தைப்போல ஏய்... அப்படினு ஒரு ரியாக்ஷன் கொடுப்பார். அவருடைய பகுத்தறிவை அங்கேயே சொல்லியிருப்பார். அப்படியொரு அதிசயம் நடந்தால் ஒன்னு எல்லாரும் ஆ... என பார்ப்பார்கள் அல்லது பயப்படுவார்கள் ஆனால் அவரோ 'ஏய்...' என வித்தியாசமான ஒரு ரியாக்ஷன் கொடுத்தார். இதுவரையில் யாரும் அப்படி நடித்து இருக்க மாட்டாங்க.
அதில் ஒரு காட்சியில் யாருடா நீ என கடவுளிடம் கேட்டவுடன் முருகன் என்பார். என்ன மொட்டையா சொன்னா என்ன? உடனே முருகன், சிவனுக்குரிய பெயர்களை நாம மாலையாக வரிசையாக சொல்ல.. உடனே அப்படி நிறுத்தி டேய் ஒரு பெயரைத்தான்டா சொல்லணும் என்பார்" என எம்.ஆர். ராதாவின் நகைச்சுவையான அனுபவங்களை பகிர்ந்து இருந்தார் கமல்ஹாசன்.