Papanasam : உங்க காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோங்க.. பாபநாசம் மீம்ஸை பறக்கவிட்ட நெட்டிசன்கள்..
நீங்கள் பாபநாசம் படத்தைப் பார்த்திருந்தால் நிச்சயம் ஆகஸ்ட் 2-ஆம் தேதியை உங்களால் மறக்க முடியாது.
ஒரு சினிமா மக்களிடையே எவ்வளவு நுணுக்கமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்று சில நேரங்களில் நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடிவதில்லை. சாதிக்கு எதிரான ஒரு படத்தின் கதாபாத்திரம் எப்படி சாதிக்கு ஆதரவாக பயண்படுத்தப்படும் என்பதற்கு மாமன்னன் படம் சிறந்த உதாரணம். கிட்டதட்ட இதே மாதிரியான ஒரு படத்தில் வரும் காட்சி இன்று நிஜ வாழ்க்கையில் ஒரு மீம் பொருளாக மாறியுள்ளது. மாமன்னன் படத்திற்கு நிகழ்ந்ததுபோல் அத்தனை தீவிரமான விளைவாக இல்லாமல் பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்கு ஒரு மீம் இது!
பாபநாசம்
மலையாளத்தில் மோகன்லால், மீனா நடித்து, ஜீது ஜோசப் இயக்கியப் படம் த்ரிஷ்யம். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த இந்தப் படம் தமிழ் , தெலுங்கு, இந்தி, என அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் இந்தப் படம் பாபநாசம் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
கமல்ஹாசன், கெளதமி, நிவேதிதா தாமஸ், எம்.எஸ் பாஸ்கரன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தில் சுயம்புலிங்கம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கமல். அமைதியான சுபாவமுள்ள ஒரு கதாபாத்திரமாக மலையாளத்தில் மோகன்லால் நடித்த அதே கதாபாத்திரத்தை உள்வாங்கி வெகுளியான அதே நேரத்தில் ஒரு வில்லேஜ் விஞ்ஞானியைப்போல கமல்ஹாசன் இந்தப் படத்தில் நடித்திருந்தார்.
ஆக்ஸ்ட் 2 சுயம்புலிங்கம் எங்கே சென்றார்?
தனது மகள் செய்த கொலையில் இருந்து தனது குடும்பத்தைக் காப்பாற்ற பல்வேறு திட்டங்களை தீட்டி அனைவரையும் நம்ப வைத்து விடுவார் சுயம்புலிங்கம். கொலை நடந்த நாளான ஆக்ஸ்ட் 2-ஆம் தேதி தனது குடும்பத்துடன் ஆசிரமத்துக்கு சென்றதாக அனைவரிடமும் நம்ப வைப்பார். இதனை நிரூபிக்கும் வகையில் அனைத்து ஆதாரங்களையும் அவர் சேர்த்தும் வைத்திருப்பார். இறுதிவரை சுயம்புலிங்கம் சொன்னது பொய் என்று நிரூபிக்க முடியாமல் திணறும் காவல்துறை. காவல்துறை நம்பியது மட்டுமில்லாமல் படத்தைப் பார்த்த மக்கள் அனைவரும் இந்தப் பொய்யை நம்பிவிடுவார்கள்.
டிரெண்டாகும் மீம்கள்
இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரும்போது எல்லாம் பாபநாசம் படத்தை நினைவுபடுத்தும் வகையில் சுயம்புலிங்கம் குடும்பத்துடன் ஆசிரமத்திற்கு சென்ற நிகழ்வு மீம்களாக பகிரப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட ஸ்டார்களின் பிறந்தநாளுக்கு நிகராக அனைவரின் மனதிலும் இந்த நாள் பதிந்துவிட்டிருக்கிறது. இன்று என்ன நாள் என்று உங்களிடம் யாராவது கேட்டால் மறந்துவிடாதீர்கள் இன்று சுயம்புலிங்கம் தனது குடும்பத்தோடு தென்காசிக்குச் சென்று ஆசிரமத்திற்கு சென்று வந்த நாள். ஹாஹா.