கலகலப்பு பட நடிகர் கோதண்டராமன் காலமானார்...25 வருடத்தில் என்ன சம்பாதித்தார் ?
பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் சண்டை கலைஞரான கோதண்டராமன் இன்று தனது 69 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஒரு பக்கம் முன்னணி நட்சத்திரங்களை மக்கள் கடவுளாக கொண்டாடி வருகிறார்கள். அவர்களின் பேனருக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள். இன்னொரு பக்கம் பல்வேறு படங்களில் காமெடியனாகவோ ஸ்டண்ட் மாஸ்டராகவோ நடித்து நம்மை மகிழ்வித்த ஜூனியர் ஆர்டிஸ்கள். எத்தனை படங்களில் நடித்தாலும் இவர்களின் பல பேரின் பெயர்கள் கூட நமக்கு தெரிவதில்லை. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை சினிமாவில் கழிக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு நிரந்தர வருமாணமோ , பணமோ புகழோ எதுவும் கிடைப்பதில்லை.
அதிர்ஷ்டவசமாக ஏதாவது ஒரு கேரக்டர் க்ளிக் ஆகி மக்கள் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டை நினைவில் வைத்துக்கொள்வது அபூர்வமே. அப்படியான ஒரு நடிகர் கோதண்டராமன்.
ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் காலமானார்
தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வந்தவர் கோதண்டராமன். பட படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்து பின் நகைச்சுவை நடிகராகவும் அடையாளம் காணப்பட்டார். சுந்தர் சி இயக்கிய கலகலப்பு படம் அவருக்கு ஒரு நல்ல நகைச்சுவை நடிகராக அடையாளம் கொடுத்தது . இப்படத்தில் பேய் என்கிற அவரது கதாபாத்திரம் தனித்துவமாக கவனம் பெற்றது.
கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் இன்று பெரம்பூரில் தனது இல்லத்தில் அவர் காலமானார். அவருக்கு வயது 69. அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெற இருக்கிறது. பகவதி , திருப்பதி , கிரீடம் , கலகலப்பு , அந்நியன் , உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
கோதண்டராமன் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தனது உறவினர்கள் எல்லாம் தன்னை விட்டு சென்றுவிட்டதாகவும் தற்போது தான் தனியாக நிற்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் தன்னுடன் ஸ்டண்ட் யூனியனில் இருக்கும் நண்பர்கள் மக்கள் தான் தனக்கு உறுதுணையாக இருப்பதாக அவர் தெரிவித்தார். மக்கள் தன்னை மறக்கவேயில்லை என்பது தான் அவரது கடைசி வார்த்தையாக இருந்தது