வசனங்களின் வித்தகன்... திரைக்கதை மன்னன்... திரைக்கதை ஆசிரியராக கருணாநிதியின் கைவண்ணம்..!
தமிழ் சினிமாவில் முக்கியப் பங்காற்றியுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ஒரு திரைக்கதை ஆசிரியராக ஆற்றிய பங்களிப்பைப் பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் ‘கலைஞர்’ கருணாநிதி கிட்டதட்ட 75 படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். ஒரு அரசியல் சித்தாந்தத்தின் மேல் பெரும் நம்பிக்கை கொண்ட ஒருவர், திரைப்படங்களில் எந்த மாதிரியான தாக்கங்களை கொண்டு வர முடியும் என்பதற்கு கருணாநிதி ஒரு நல்ல உதாரணம். இன்று நவீன சினிமா இயக்குனர்கள் பலர் தங்களுக்குப் பிடித்த படங்களின் வரிசையில் பராசக்தி படத்தை நிச்சயம் குறிப்பிடுவார்கள்.
20 வயதில் தொடங்கிய பயணம்:
தனது 20 ஆவது வயதில் ஜூபிடர் பிக்சர்ஸ்க்கு திரைக்கதை எழுதத் தொடங்கினார் கருணாநிதி. தமிழ் திரையுலகின் அன்று தொடங்கிய அவரது பயணம், 2011ஆம் பொன்னர் சங்கர் திரைப்படம் வரை கிட்டதட்ட 60 ஆண்டுகள் தொடர்ந்தது.
எம் ஜி ஆர் நடிப்பில் 1947ஆம் ஆண்டு வெளியான ‘ராஜகுமாரி’ படத்துக்கு திரைக்கதை எழுதியதன் மூலம் திரைக்கதை ஆசிரியராக உருவெடுத்தார் கருணாநிதி. அன்று நெருங்கிய நண்பர்களாக இருந்த இந்த இருவர் பிற்காலத்தில் அரசியல் களத்தில் எதிரெதிர் முனைகளில் நிற்பார்கள் என்று அவர்களே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
வரலாறு படைத்த பராசக்தி:
இதனைத் தொடர்ந்து அபிமன்யு மற்றும் மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களுக்கு திரைக்கதை அமைத்தார் கருணாநிதி . இந்த இரண்டு படங்களிலும் எம்.ஜி.ஆர் கதா நாயகனாக நடித்தார்.
1952 ஆம் ஆண்டு நடிகர் திலகம் எனப் போற்றப்படும் சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதினார் கருணாநிதி. அவரது சினிமா கரியரில் மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்த திரைப்படம் பராசக்தி. ஒரு சாமானியன் மனிதர்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகள், சுரண்டல்கள் என ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்பையும் பார்த்து கேள்வி கேட்கும் ஒரு காட்சியை முதன்முதலில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தது கருணாநிதி தான்.
திராவிடம்:
அந்நியன், ரமணா, முதல்வன், கத்தி என அரசியல் பேசிய எந்தப் படத்தை வேண்டுமானால் எடுத்துக்கொண்டாலும் அந்தப் படங்களில் கதாநாயகன் பேசும் வசனங்களும் தொனி, வார்த்தைகளின் பிரயோகம் ஆகியவற்றுக்கும் முன்னுதாரணமாக அமைந்தப் படம் பராசக்தி.
திராவிட இயக்கத்தில் இருந்து வந்த கருணாநிதி வசனங்கள் மூலம் மக்களுடன் உரையாடும் வழக்கத்தை சினிமாவில் அறிமுகப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவர். தனது வசனங்களின் மூலம் தீண்டாமை, சமூக சீர்கேடுகள், பெண் ஒடுக்குமுறை ஆகிய அனைத்தையும் கேள்விகளுக்கு உட்படுத்தினார் கருணாநிதி.
ஃப்ரன்ட் லைன் இதழுக்கு முன்னொருமுறை கருணாநிதி கொடுத்த பேட்டியில் பேசியபோது, “நான் திரைப்படங்களில் எழுதுவதன் நோக்கம் கவர்ச்சிகரமான பாடல்களை எல்லாம் தவிர்த்து சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே” என்றார். அவரது நோக்கத்தை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்லும் அடுத்த தலைமுறை நடிகர்கள் வந்து உரையாடிக் கொண்டிருக்கும் சூழலில், இவற்றுக்கெல்லாம் ஆணிவேராக கலைஞர் கருணாநிதி என்றும் நினைவுகூரப்படுவார்!