Jayam Ravi : பெரிய பட்ஜெட் படம், 3 ஹீரோயின், ஏ.ஆர்.ஆர் இசை... ஜெயம் ரவி காட்டில் மழை..
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மூன்று ஹீரோயின்களுடன் டூயட் பாட தயாராகும் நடிகர் ஜெயம் ரவி.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி, பொன்னியின் செல்வன் ரிலீசுக்கு பிறகு டாப் கியரில் உச்சத்தை எட்டிவிட்டார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழிவர்மனாக சோழ நாட்டின் அரசனாக முடிசூட்டப்பட்ட ஜெயம் ரவியின் கதாபாத்திரம் அமோகமான வரவேற்பை பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து எக்கச்சக்கமான பட வாய்ப்புகள் பெற்று மிகவும் பிஸியான ஒரு நடிகராக வலம் வருகிறார்.
நீளும் ஜெயம் ரவி லிஸ்ட் :
ஜெயம் ரவி தற்போது கை நிறைய படங்களில் நடித்து வருகிறார். இறைவன், சைரன், JR30 என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். அதிலும் அஹமத் இயக்கத்தில் நயன்தாராவின் ஜோடியாக நடிக்கும் 'இறைவன்' படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதே போல அந்தோனி பாக்யராஜ் இயக்கும் சைரன் படத்தின் ஷூட்டிங் பணிகளும் முழுவதுமாக முடிவடைந்து விட்டன. இறுதி கட்ட பணிகள் மட்டுமே மீதம் உள்ளன என கூறப்படுகிறது. இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படத்தின் பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில், ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
100 கோடி பட்ஜெட்டில் 3 ஹீரோயினுடன் :
இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக இருந்த புவனேஷ் அர்ஜுனன் இயக்கும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் ஜெயம் ரவி. படத்திற்கு வித்தியாசமாக 'ஜீனி' என தலைப்பிடப்பட்டுள்ளது. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படம் மிகவும் பிரமாண்டமாக 100 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். தற்போதைய அப்டேட்டின் படி இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி என இருவர் மட்டுமின்றி மூன்றாவதாக மேலும் ஒரு பிரபலமான ஹீரோயினும் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயம் ரவி நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம் இதுவாகும். ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகவும் இதில் ஜெயம் ரவியின் சம்பளமாக 30 கோடி பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
JR33 :
மேலும் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கும் ஒரு படத்திலும் ஜெயம் ரவி ஒப்பந்தமாகியுள்ளார். இது அவர் நடிக்கும் 33 வது படமாகும். கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்க உள்ளார். முதல் முறையாக ஜெயம் ரவி - நித்யா மேனன் காம்போவில் உருவாகும் படம் இதுவாகும்.