Jayam Ravi : கமல் சார் வெறியன் நான்... 85% நான் நடிகனாக அவர்தான் காரணம்... மேடையில் நெகிழ்ந்த ஜெயம் ரவி
Jayam Ravi : உலகநாயகன் கமல்ஹாசனின் வெறியன் என சொல்லும் ஜெயம் ரவியின் த்ரோ பேக் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
உலக நாயகன், ஆண்டவர், சினிமாவின் என்சைக்கிளோபீடியா இப்படி பல விதங்களில் திரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஒரு நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், பாடகர், இசையமைப்பாளர், எழுத்தாளர், நடன இயக்குநர் என பன்முக கலைஞராக திகழும் கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என பல தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் KH234 படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியானது. மேலும் ஹெச். வினோத் இயக்கும் KH233 படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார் உலகநாயகன் என்ற அறிவிப்பும் வெளியானது. இப்படி அடுத்தடுத்து அப்டேட் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.
மணிரத்னம் இயக்கும் KH234 படத்திற்கு "Thug Life " என பெயரிட்டுள்ளனர். கமல்ஹாசனின் பிறந்தநாளான இன்று 'Thug Life' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. கேங்ஸ்டர் படமாக உருவாகும் இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், நாசர், அபிராமி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் கமல்ஹாசனின் தீவிர வெறியனான ஜெயம் ரவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மேடையில் பேசிய போது கமல்ஹாசன் மீது தனக்கு இருக்கும் ஈர்ப்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார். கமல்ஹாசனின் மிக பெரிய திரைப் பயணத்தில் அவர் ஒரு சிறு எறும்பாகவாவது பயணிக்க வேண்டும் என ஆசைப்படுவதாகவும் ஆளவந்தான் படத்தில் அவர் உதவி இயக்குநராக பணியாற்றியது குறித்தும் அது பற்றி கமல் சாருக்கு தெரிந்து இருக்க கூட வாய்ப்பில்லை என்பதையும் சுட்டிக்காட்டி இருந்தார்.
கமல் சார் செட்டில் நுழைந்தாலே ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடி விடுவாராம் ஜெயம் ரவி. அந்த அளவிற்கு அவர் சின்சியாரிட்டி மீது மரியாதை கொண்டு இருந்ததாகவும் தான் ஒரு நடிகனாக ஆனதற்கு மிக பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் கமல்ஹாசன் என்றும் குறிப்பிட்டு இருந்தார். 85% கமல் சார் காரணம் என்றால் மீதம் உள்ள 15% அவருடைய அப்பா என்றும் குறிப்பிட்டு இருந்தார். கமல் சார் முன்னாடி ஒரு விருது வாங்கி விட வேண்டும் என்பதே அவருடைய நீண்ட நாள் கனவாக இருந்தது என்றும் பேசி இருந்தார்.