Jailer Success: தாறுமாறு வெற்றி.. ஜெயிலர் படக்குழுவினர் 300 பேருக்கு தங்க நாணயங்கள்... காசு மழையில் திணறடிக்கும் கலாநிதிமாறன்!
ஜெயிலர் படத்தில் பணியாற்றிய 300க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தயாரிப்பாளரும் சன் பிச்சர்ஸ் நிறுவனருமான கலாநிதி மாறன் தங்க நாணயங்களை வழங்கியுள்ளார்.
சன் பிச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் நடித்து நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர்.
கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம், இதுவரை உலகம் முழுவதும் சுமார் 600 கோடிகளை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் செப்டெம்பர்7ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியான நிலையில், இப்படம் ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு காசோலைகள் மற்றும் உயர் ரக சொகுசு கார்களை இப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் முன்னதாக வழங்கினார்.
இந்நிலையில், ஜெயிலர் படத்தில் பணியாற்றிய 300க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கலாநிதி மாறன் தங்க நாணயங்கள் வழங்கும் வீடியோவை சன் பிச்சர்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது. ஜெயிலர் படக்குழுவுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு எனக் கூறி நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினருடன் கலாநிதி மாறன் கேக் வெட்டி கொண்டாடி, தங்க நாணயங்கள் வழங்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது.
Mr.Kalanithi Maran felicitated more than 300 people who worked for #Jailer with gold coins today. #JailerSuccessCelebrations pic.twitter.com/qEdV8oo6dB
— Sun Pictures (@sunpictures) September 10, 2023
சன் பிச்சர்ஸ் நிறுவனம் சார்பில் ரஜினிகாந்த் முதல் எளிய படக்குழுவினர் வரை பரிசுகள் வழங்கப்படுவது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ.525 கோடி வசூலித்திருப்பதாக முன்னதாக சன் பிச்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்த கலாநிதி மாறன், காசோலை மற்றும் உயர் ரக சொகுசு காரான BMW X7 காரை ரஜினிகாந்தின் தேர்வின்படி பரிசாக அளித்தார்.
தொடர்ந்து இயக்குநர் நெல்சனை அழைத்து அவருக்கு காசோலையும் போர்ஷே சொகுசு காரை பரிசாக வழங்கினார். தொடர்ந்து, இசையமைப்பாளர் அனிருத்துக்கும் போர்ஷே சொகுசு கார் மற்றும் காசோலையை வழங்கினார்.
நடிகைகள் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா ரவி, மாஸ்டர் ரித்விக், நடிகர்கள் மோகன்லால், சிவராஜ் குமார், விநாயகம், சுனில், யோகிபாபு, ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி என முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக இப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் என அனைத்தும் ஹிட் அடிக்க, டிக்கெட் முன்பதிவு தொடங்கியே ஜெயிலர் படம் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.