Jailer: கோலிவுட்டின் வசூல் மன்னனாக மீண்டும் மாறுவாரா ரஜினி... வசூல் அள்ளிய சூப்பர் ஸ்டாரின் 7 படங்கள்!
ரஜினி நடிப்பில் வெளியாகி அதிக வசூல் ஈட்டிய 7 படங்களின் பட்டியல் இது!
கோலிவுட்டின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. ரஜினிகாந்தின் ஒவ்வொரு திரைப்படமும் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வெளியாகி புதிய வசூல் சாதனைகளை உருவாக்குவதற்கு பெயர்போனவை. ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் வசூல் வேட்டையை நிகழ்த்தக் காத்திருக்கும் நிலையில் இதுவரை அதிக வசூல் ஈட்டிய அவரது படங்களைப் பார்க்கலாம்.
2.0
இயக்குநர் ஷங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 2.0 தான் ரஜினிகாந்த் நடித்த படங்களில் வசூலில் முதல் இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறது. ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம் உலகளவில் 800 கோடிகளை வசூல் செய்து முதல் இடத்தைத் தக்கவைத்திருக்கிறது.
எந்திரன்
சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்த எந்திரன் திரைப்படம் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் நடித்து ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தார். தமிழ் சினிமாவின் தொழில் நுட்பத்தரத்தை உயர்த்தில் எடுத்துச் சென்றதில் எந்திரன் படத்திற்கு மிகப் பெரியப் பங்கு இருக்கிறது. எந்திரன் திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் மொத்தம் 290 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்தது.
கபாலி
பா ரஞ்சித் - ரஜினி இருவரது கூட்டணியில் வெளியான முதல் படம். மெட்ராஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கிய இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது. மேலும் சந்தோஷ் நாராயணின் இசையில் ரஜினி இன்னும் மிரட்டலாக ரசிகர்களுக்குத் தோற்றமளித்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக படம் வெற்றியடைந்தது. மொத்தம் 286 கோடிகளை வசூல் செய்தது கபாலி படம்.
பேட்ட
தீவிர ரஜினி ரசிகரான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினி ரசிகர்களுக்கு பந்தி போட்டு விருந்து வைத்தது போல் படத்தைக் கொடுத்தார். அதுதான் பேட்ட. இதுவரை ரஜினியை நாம் ரசித்துப் பார்த்த அத்தனை அம்சங்களையும் இந்தப் படத்தில் மறு உருவாக்கம் செய்தார் கார்த்திக். மிகப்பெரும் வெற்றியடைந்த இந்தப் படம் மொத்தம் 230 கோடிகளை வசூல் செய்தது.
தர்பார்
கார்த்திக் சுப்புராஜ் மட்டும் தான் எடுப்பாரா நானும் எடுப்பேன் என்று ஏ.ஆர் முருகதாஸ் செய்த சம்பவம் தான் தர்பார். ஆனால் இந்த முறை என்னவோ அது ரசிகர்களுடன் ஒன்றாமல் போனது. படம் சுமாரான வெற்றி பெற்றாலும் வசூலுக்கு பெரிதாகக் குறையில்லை. 200 கோடிகளுடன் தனது வசூலை முடித்தது தர்பார் திரைப்படம்.
காலா
இரண்டாவது முறையாக பா.ரஞ்சித் - ரஜினியின் கூட்டணியில் உருவானது தான் காலா திரைப்படம். கபாலி அளவுக்கான வரவேற்பு காலா திரைப்படத்திற்கான வரவேற்பு இல்லையென்றாலும், கபாலையை விட நல்ல விமர்சனங்களையே காலா பெற்றது. தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வண்டர்பார் நிறுவனம தயாரித்த இந்தப் படம் 159 கோடிகள் வசூல் செய்தது.
லிங்கா
லிங்கா திரைப்படம் ரஜினியின் அதிக வசூல் ஈட்டிய திரைப்படங்களில் இடம்பெறுவது சற்று ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு கே.எஸ் ரவிக்குமார் - ரஜினியின் கூட்டணியை பார்க்க அத்தனை ரசிகர்கள் காத்திருந்தார்கள். படம் என்னவோ தோல்விதான் என்றாலும் முதல் வார வசூலே ராக்கெட் வேகத்தில் எகிறியது. மொத்தம் 154 கோடிகளை வசூல் செய்தது லிங்கா திரைப்படம்.