நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
ஜெயிலர் 2’ முதல் பாடல் நாளை வெளியாகும் நிலையில், நெல்சனின் வழக்கமான ப்ரோமோ இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் பாடல் நாளை ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாக உள்ளது. ‘அலா போலேலோ’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பாடல் வெளியீட்டை முன்னிட்டு படக்குழு நேற்று ஒரு சிறு ப்ரோமோவை வெளியிட்டது. இருப்பினும், ரசிகர்கள் எதிர்பார்த்த நெல்சன் பாணியிலான தனித்துவமான ப்ரோமோ இல்லாதது குறித்த பேச்சு சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.
நெல்சனின் தனித்துவமான ப்ரோமோக்கள்
நெல்சன் இயக்கிய படங்களின் விளம்பரப் பணிகளில், கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் நடிகர்களை வைத்து உருவாக்கப்படும் நகைச்சுவை கலந்த ப்ரோமோக்கள் தனி கவனம் பெற்றவை. ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’, ‘ஜெயிலர்’ உள்ளிட்ட படங்களின் புரமோஷன் வீடியோக்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகித்தன. குறிப்பாக ‘ஜெயிலர்’ படத்தின் பாடல்கள் மற்றும் கதாபாத்திரங்களை மையமாக வைத்து வெளியான ப்ரோமோக்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன.
இதனால், நெல்சன் இயக்கும் அடுத்த படங்களிலும் இதேபோன்ற வித்தியாசமான விளம்பர முயற்சிகளை ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கினர். அந்த பாணி ரசிகர்களை மட்டுமின்றி, பிற படக்குழுக்களையும் ஈர்த்ததால் . பல திரைப்படங்களின் புரமோஷன்களிலும் இதுபோன்ற தனிப்பட்ட காட்சிகள் மற்றும் நகைச்சுவை வீடியோக்கள் இடம்பெறத் தொடங்கின. ஆனால் இந்த ப்ரோமோக்கள் நெல்சன் பாணியில் இருந்தனவே தவிர நெல்சனின் தனித்துவமான நகைச்சுவை அவற்றில் இல்லை.
நெல்சன் மேஜிக் மிஸிங்
இந்த நிலையில், ‘ஜெயிலர் 2’ முதல் பாடலுக்கான அறிவிப்பு வெளியானதும், நெல்சனின் வழக்கமான பாணியில் பெரிய ப்ரோமோ ஒன்று வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது வெளியாகியிருப்பது பாடலை அறிமுகப்படுத்தும் குறுகிய காட்சிகள் கொண்ட ப்ரோமோ மட்டுமே. அதனால், சில ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
எனினும், வெளியான ப்ரோமோவில் ரஜினிகாந்த் மற்றும் ஷம்னா காசிம் இடம்பெற்றுள்ளனர். பாடல் நாளை வெளியாக உள்ளதால், முழுமையான பாடல் வெளியான பிறகு இந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. முதல் படத்தில் ‘காவாலா’, ‘மனசிலாயோ’, ‘ஹுக்கும்’ போன்ற பாடல்கள் ஏற்படுத்திய தாக்கத்தை ‘அலா போலேலோ’ தொடருமா என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
‘ஜெயிலர் 2’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நெல்சன் திலீப்குமார் இயக்க, ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு, ஆர். நிர்மல் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்களும் இடம்பெறுகின்றனர். படம் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















