Leo Trailer: ”லியோ” படக்குழுவுக்கு ஏன் இப்படி ஒரு விளம்பரம்..! டிரெய்லரில் விஜய் - லோகேஷ் கனகராஜ் செய்தது நியாயமா?
Leo Trailer: அற்ப விளம்பரத்திற்காக லியோ படக்குழுவினர் டிரெய்லரில் செய்த ஒரு சம்பவம் தான், சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
Leo Trailer: விஜயின் லியோ படத்தின் டிரெய்லரில் கெட்டவார்த்தை பயன்படுத்தப்பட்டதற்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
லியோ டிரெய்லர்:
மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் - அனிருத் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. மிகப்பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படம், வரும் 19ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.
புதிய சாதனை:
தணிக்கை குழுவில் லியோ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமான தான் படத்தின் டிரெய்லர் ரத்தம் தெறிக்க, தெறிக்க முழுக்க முழுக்க வன்முறை காட்சிகளால் நிரம்பியுள்ளது. விஜய் படத்தில் இதுவரை வெளியான எந்தவொரு படத்திலும் இல்லாத அளவிற்கு படத்தில் வன்முறை இருக்கும் என கருதப்படுகிறது. டிரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே 25 மில்லியனை கடந்த வியூஸ் மற்றும் 1 மில்லியனை கடந்த லைக்ஸ்களை பெற்று புதிய சாதனை படைத்தது. விஜய் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். இதனிடையே டிரெய்லரில் ஒரு இடத்தில் விஜய் பேசிய மிகவும் மோசமான, பொதுவெளியில் பயன்படுத்தவே முடியாத ஒரு வார்த்தையை உள்ளடக்கிய வசனம் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கெட்ட வார்த்தை பிரச்னை:
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரையும் ரசிகர்களாக கொண்டுள்ளார். குறிப்பாக இவரது படங்களை குடும்பம் குடும்பமாக சென்று ரசிகர்கள் பார்ப்பது வழக்கம். அப்படி இருக்கையில், லியோ படத்தில் உச்சபட்ச வன்முறை காட்சிகள் இடம்பெற்று இருப்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. இது குழந்தைகளின் மத்தியில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஆனால், அதையும் மிஞ்சும் விதமாக தான், விஜய் பேசிய வசனம் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளதோடு, முகம் சுளிக்கவும் வைக்கிறது. நீண்டகாலமாக திரைத்துறையில் இருக்கும் பண்பட்ட நடிகரான விஜய், அரசியலில் தடம் பதிக்கவும் விரும்புகிறார். அப்படி இருக்கையில், கோடிக்கணக்கானோர் பார்க்கும் ஒரு டிரெய்லரில் இப்படிபட்ட வார்த்தையை பயன்படுத்தியது எந்த காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.
சமூகத்தில் மோசமான தாக்கம்:
லியோ படத்தின் போஸ்டர்கள் வெளியானபோதே, அதில் விஜய் புகைபிடித்தபடி இருந்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும், தவறான உதாரணமாக அமையும் என பல தரப்பினரும் குற்றம்சாட்டினார். ஆனால், விஜய் புகைப்பிடிப்பதால் தான் சமூகத்தில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரிக்குமா என அவரது ரசிகர்கள் சப்பைக் கட்டு கட்டினார். ஆனால், அந்த படத்தில் இருந்து வெளியான நா ரெடி தான் பாடலை, உச்சரிக்காத இளைஞர்களோ, குழந்தைகளோ தமிழ்நாட்டில் மிகவும் சொற்பம் தான். விஜய் செய்யும் எந்தவொரு செயலும், தமிழ்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தான் இது உணர்த்துகிறது. அப்படி இருக்கையில், மிகவும் மோசமான கெட்ட வார்த்தைகளை படத்தில் இடம்பெற செய்வது என்பது விஜய் போன்ற நபர்களுக்கு அழகானதல்ல. இதற்கும் கூட இயக்குனர் சொன்னதை தான் விஜய் செய்தார். அவர் மீது தவறில்லை என சிலர் முரட்டுத்தனமாக முட்டுக் கொடுக்கலாம். ஆனால், உச்சநட்சத்திரங்களின் படங்களில் அவர்களது இசைவு இன்றி எந்தவொரு வசனமும் இடம்பெறாது என்பது தான் உண்மை. அதையும் தாண்டி வெற்று விளம்பரத்திற்காகவே இந்த வசனத்தை படக்குழு பயன்படுத்தி இருக்கிறது என்பதே உண்மை.
இந்த விளம்பரம் அவசியாமா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் டிரெய்லரில் இடம்பெற்று இருந்த கெட்ட வார்த்தை படத்தில் நீக்கப்பட்டு இருந்தது. இதேபோன்று, லியோ டிரெய்லரில் இடம்பெற்றுள்ள அந்த மோசமான வார்த்தையும் படத்தில் மியூட் அல்லது நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், டிரெய்லருக்கு தணிக்கை இல்லை என்ற ஒரே காரணத்திற்காக, எப்படிபட்ட வசனங்களை வேண்டுமானாலும் இடம்பெறச் செய்யலாம் என கருதுவது என்ன மனநிலை? அந்த ஒரு வார்த்தையின் மூலம் தான் படம் பிரபலமடைந்து, பேசுபொருளாக்கி அதன் வியாபாரத்தை அதிகரிக்க வேண்டுமா? போன்ற கேள்விகளும் எழுகின்றன. தனக்குள்ள ரசிகர்களின் பலத்தை உணர்ந்து தான் நடிகர் விஜய் அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளதோடு, அடுத்த படத்திற்கு 200 கோடி ரூபாயை ஊதியமாகவும் பெற்றுள்ளார். அப்படி இருக்கையில், இப்படிபட்ட வசனங்கள் தங்களது ரசிகர்கள் மத்தியில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், பொதுவான ரசிகர்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என சற்றேனும் சிந்தித்து இருக்க வேண்டாமா?
பணத்தை குறிவைக்கும் நட்சத்திரங்கள்?
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களாகவும், பெரும் ரசிகர் பட்டாளத்திற்கு சொந்தக்காரர்களாகவும் இருப்பவர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய் மற்றும் சூர்யா போன்ற நடிகர்கள். இதன் மூலம் சமூகத்தின் மீது தங்களுக்கும் பொறுப்பு உள்ளது என்பதை, அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். ஆனால், பணத்திற்காகவும், படம் வெற்றி பெறுவதற்காகவும் என்ன வேண்டுமானலும் செய்யலாம் என்பதே நடிகர்களின் எண்ணமாக உள்ளது. அஜித்தின் மங்காத்தா தொடங்கி ரஜினியின் ஜெயிலர் டூ விஜயின் லியோ படம் வரையிலும் படத்தில் ஏகத்திற்கு வன்முறை காட்சிகள் மற்றும் தகாத வார்த்தைகளை வசனங்களாக பேசுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. விளம்பரத்திற்காக மட்டுமே என்றாலும், இப்படியெல்லாம் செய்து தான் இவர்களின் படம் வெற்றி பெற வேண்டும் என்ற, எந்த அவசியமும் இல்லை என்பதை என்று தான் இவர்கள் உணரப்போகிறார்களோ?