கூலியை சூழந்த நெகட்டிவிட்டி...ரஜினி கமல் கூட்டணி வெறும் திசைதிருப்பலா ?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி கமல்ஹாசன் இணைந்து நடிக்க இருப்பதாக வெளியான தகவல் திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி என தகவல்கள் வெளியாகியுள்ளன

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது. ஒருபக்கம் படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்கள் வெளியாகி வந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரவின. கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
திசைதிருப்ப பரப்பப்பட்ட செய்தியா ?
கூலி படம் வெளியான முதல் நாள் முதலே படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியாகத் தொடங்கின. லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களில் மிக சுமாரான படமாக கூலி படத்தை ரசிகர்கள் குறிப்பிட்டனர். முதல் நான்கு நாட்களில் கூலி படம் ரூ 404 கோடி வசூலித்தாலும் அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறையத் தொடங்கியது. படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்களே இதற்கு முக்கிய காரணம். இதனால் கூலி வசூலை மறுபடியும் உயர்த்துவதற்காக திட்டமிட்டு பரப்பட்ட செய்திதான் ரஜினி கமல் கூட்டணியா என்கிற சந்தேகத்தை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளார்கள்.
ரஜினி கமலை ஒரே படத்தில் இயக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டது உண்மைதான். இதனை அவரே நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துகொண்டார். இணைந்து நடிப்பதற்கு கமல் மற்றும் ரஜினி தரப்பில் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். ஆனால் அந்த பேச்சுவார்த்தை கைவிடப்பட்டதாகவும் இனிமேல் இருவரையும் ஒரே படத்தில் இயக்குவது என்பது சாத்தியமற்றது என லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.
கூலி கலெக்ஷன்
கூலி திரைப்படம் வெளியாகி 18 நாட்கள் கடந்துள்ள நிலையில் உலகளவில் இப்படம் ரூ 500 கோடியை கடந்துள்ளதாகவும் இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ 300 கோடியை கடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் கூலி படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை சன் பிக்ச்சர்ச் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
கைதி 2
கூலி படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக கார்த்தி நடிக்கும் கைதி 2 படத்தை இயக்க இருக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸில் மிக முக்கியமான படமாகவும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாகவும் கைதி 2 இருந்து வருகிறது. கமல் , சூர்யா, கார்த்தி , ஃபகத் ஃபாசில் என எல்.சி.யுவில் இடம்பெற்ற அத்தனை நடிகர்களும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.





















