Tamil Cinema: ”தமிழ் சினிமால இந்த நிலைமை மாறணும்”.. ரஜினி - விஜய் - அஜித்... மாரி செல்வராஜ் சொன்ன கருத்து..
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர்கள் திரையில் தோன்றினாலே போதும் என, அவர்களது ரசிகர்கள் கொண்டாடுவது அதிகரித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர்கள் திரையில் தோன்றினாலே போதும் என, அவர்களது ரசிகர்கள் கொண்டாடுவது அதிகரித்து வருகிறது.
ரசிகர்களின் உற்சாகம்:
தமிழ் சினிமா தரமான கதைக்கும், நடிகர்களுக்கும், மேக்கிங்கிற்கும் பெயர் போனது என்பதில் எந்த ஐயமும் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதேநேரம், இந்தியாவின் வேறு எந்த திரையுலகிலும் இல்லாத அளவிற்கு தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கிறது ரசிகர்கள் இடையேயான மோதல். தங்களது வலிமையை காட்டுவதற்காக தங்களது ஆதர்ஷ நாயகர்களின் படம் வெளியாகும் போது அவர்களின் ரசிகர்கள் திரையரங்குகளில் கூடி, அந்த பகுதியையே திருவிழாக்கோலமாக மாற்றி வருகின்றனர். சமூக வலைதளகளில் முடிவில்லா ஒரு பெரும் போரையே நடத்தி வருகின்றனர்.
முட்டுக்கொடுக்கும் ரசிகர்கள்:
தங்களுக்கு பிடித்த நடிகர்கள் மீது ரசிகர்கள் வெறித்தனமான அன்பை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, படத்திற்கு முரட்டுத்தனமாக முட்டுக்கொடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது. படம் நன்றாக இருக்கிறதோ, இல்லையோ அவர்கள் கொண்டாடி தீர்த்துவிடுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், மற்றவர்களும் அதே போன்று தான் நினைக்க வேண்டும், படத்தை குறை சொல்லக்கூடாது என்பதெல்லாம் என்ன நியாயம்.
உமிழப்படும் வெறுப்பு:
என் தலைவன் வந்தால் மட்டும் போதும், திரையில் தோன்றினால் மட்டும் போதும், நடந்தால் மட்டும் போதும், பன்ச் டயலாக் பேசினால் மட்டும் போதும், கண்ணாடி மாட்டினால் போதும், நடனமாடினால் மட்டும் போதும் என்றெல்லாம் சிலர் முரட்டுத்தனமாக முட்டு கொடுத்து வருகின்றனர். அது அவர்களது விருப்பம். அதேநேரம், தாங்கள் பார்த்த படம் சிலருக்கு பிடிக்கலாம், பிடிக்காமலும் போகலாம். அவர்கள் தத்தமது கருத்துகளை வெளிப்படையாக பேசலாம். ஆனால், இந்த நட்சத்திர நடிகர்களின் ரசிகர்களோ தங்களது ஆதர்ஷ நடிகரை பற்றி யாரேனும், சற்றே குறைத்து பேசிவிட்டாலும் பெரும்படையாக சென்று அவரை சூழ்ந்து இழிவுபடுத்துகின்றனர். தனிநபர் தாக்குதல் தொடங்கி, அவரது ஒட்டுமோத்த குடும்பத்தயே இந்த ரசிகர் படை அவமானப்படுத்துவதெல்லாம் தொடர்கதையாகி வருகிறது. அண்மையில் ஒரு நடிகை கூட இந்த பாதிப்புக்கு ஆளானதை அறிந்திருப்போம். சில சமயங்களில் ரசிகர்கள் இடையேயான மோதல் அடி, தடியாக மாறியதை கூட தமிழ்நாடு அறிந்ததே.
அவரு ரேஞ்சுக்கு?
இதோடு மட்டுமின்றி தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களான ரஜினி, விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் செய்யும் அதகளம் என்பது சிரிப்பையும் தாண்டி ஒரு கட்டத்தில் கோவத்தை தூண்டும் விதமாக தான் உள்ளது. குறிப்பாக சற்றே சிரமமான மற்றும் தர்மசங்கடமான சூழல்களில் அவர்கள் நடித்து விட்டால் போதும், அவ்வளவு தான் ”எங்க தலைவர் ரேஞ்சுக்கு” என பக்கம் பக்கமாக பேச தொடங்கிவிடுகின்றனர்.
கோடிகளில் ஊதியம்:
தமிழ் சினிமாவில் யாருமே தங்களது ரசிகர் கூட்டத்தின் அடிப்படையில் ஊதியம் வாங்குவதில்லை. அனைவருமே தங்களது படங்களுக்கு உள்ள வியாபாரம், தங்களது கதாபாத்திரம் என்ன மாதிரியானது என்பதையெல்லாம் ஆராய்ந்து, அதன் அடிப்படையில் தான் லட்சங்கள் தொடங்கி கோடிகள் வரையில் ஊதியம் பெற்று வருகின்றனர். ஆனால், இவற்றையெல்லாம் மறந்துவிட்ட குறிப்பிட்ட சில நடிகர்களின் ரசிகர்கள் முரட்டுத்தனமாக முட்டுக்கொடுத்து வருகின்றனர்.
ஜெயிலர் டிரெய்லர்:
அண்மையில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில், ரஜினி தனது மகன் மற்றும் பேரனின் காலணிகளை துடைப்பது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. அதை கண்ட பிறகு சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள பதிவுகளில் “தனது வயது, தனக்கு உள்ள ரசிகர் பட்டாளம் என எதையுமே கருத்தில் கொள்ளாமல், கதாபாத்திரத்திற்கு தேவையானதை செய்து கொடுத்துள்ளார். இதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்” என பெருமிதப்படுகின்றனர்.
விஜய்:
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு படத்தில் இடம்பெற்று இருந்த ரஞ்சிதமே பாடலில், கடைசி நிமிடத்தில் இடைவிடாது நடனமாடி இருப்பார். இது அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது என்பதை அந்த பாடலை பார்த்த அனைவருமே உணர்ந்தனர். ஆனால் சமூக வலைதளங்களிலோ “விஜய்க்கு இருக்கும் மாஸிற்கு இதெல்லாம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் ரசிகர்களுக்காக செய்கிறார். அதனால் தான் அவர் அடுத்த சூப்பர் ஸ்டார், இந்த வயதிலும் என்ன மாதிரியான ஃபிட்னஸை பின்பற்றி வருகிறார்” என பெருமை பேசி வருகின்றனர்.
அஜித்:
அஜித் ரசிகர்கள் பற்றி எல்லாம் சொல்லவே வேண்டாம். தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக ஒரு நடிகரை கடவுளாகவே அங்கீகரித்த பெருமை எல்லாம் அவர்களை மட்டுமே சேரும். அஜித்தை திரையில் பார்த்தாலே போதும், பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகும் என்ன மாதிரியான ஃபிட்னஸை தொடர்ந்து வருகிறார் என்றெல்லாம் அவரது ரசிகர்கள் புகழ்பாடுவதையும் தாண்டி துதி பாடி வருகின்றனர்.
நடிகர்களுக்கான அங்கீகாரம்..!
தமிழ் சினிமாவின் வர்த்தகமே தற்போதைய சூழலில் ரஜினி, விஜய் மற்றும் அஜித் எனும் பெயர்களை தான் சார்ந்து உள்ளது. அவர்களது படத்திற்கு வரும் அளவிலான வசூல் வேறு எந்த படத்திற்கும் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. இதற்கு காரணம் ரஜினியின் உழைப்பு, விஜயின் விடாமுயற்சி மற்றும் அஜித்தின் தன்னம்பிக்கை தான். ஆரம்ப காலங்களில் அவர்கள் கொட்டிய உழைப்பு தான், இன்று பல நடிகர்கள் உயிரைக் கொடுத்து நடித்தாலும் கிடைக்காத 100 கோடி ரூபாய் எனும் ஊதியத்தை சர்வ சாதாரணமாக பெற்று வருகின்றனர். வேறு யார் படங்களுக்கும் கிடைக்காத வரவேற்பும், வேறு யாருக்கும் இல்லாத அளவிலான பரந்து விரிந்த ரசிகர்கள் பட்டாளமும் இவர்களுக்கு அமைந்துள்ளது. இதைவிடவா பெரிய அங்கீகாரம் அவர்களுக்கு கிடைத்து விட போகிறது?
இதெல்லாம் நியாயமா?
ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு எங்களது தலைவர் ரேஞ்சுக்கு என புகழ்பாடுவது எல்லாம் என்ன நியாயம். இவர்கள் வாங்கும் ஊதியம் என்பது அந்த கதாபாத்திரத்திற்கானது. அந்த கதாபாத்திரமாகவே வாழ வேண்டும் என்பதற்காக தான். அப்படி இருக்கையில் சண்டைக் காட்சிகளில் நடிப்பது, ஒருவரது காலில் விழுவது, கடினமான நடன அசைவுகளில் ஆடுவதெல்லாம் அந்த கோடிகளுக்காகவே தவிர, ரசிகர்களுக்காக அல்லது என்பதை புரிந்து கொள்ளுங்கள். சமூக வலைதளங்களில் குறிப்பிடுவது போன்று தங்களது தகுதியை மனதில் வைத்துக்கொண்டு இந்த நடிகர்கள் திரைப்படங்களில் நடித்தால், இரண்டாவது நாளுக்கெல்லாம் திரையரங்குகள் ஈ அடிக்க தொடங்கி விடும் என்பது தான் உண்மை.
அவசியமா?
தங்களது ரசிகர்கள் அதை செய்யுங்கள், இதை செய்யுங்கள் என ஏகபோக வசனம் பேசும் இந்த நடிகர்கள் யாருமே, பிறரை இழிவுபடுத்த வேண்டாம், தனிநபர் தாக்குதல் செய்ய வேண்டாம், படங்கள் தொடர்பான மோதல்களில் ஈடுபட வேண்டாம் என இதுவரை வாய் திறந்து பேசியதே இல்லை. காரணம், ரசிகர்கள் இடையேயான இந்த மோதல் தான், அவர்களது படங்களுக்கான வியாபாரமாக உள்ளது. இதை உணராமல் இன்னும் பலர் தங்களது நாயகன் தான் எல்லாமே என பிதற்றிக்கொண்டு இருக்கின்றனர். இதையெல்லாம் பார்க்கும்போது அண்மையில் மாரி செல்வராஜ் நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம் தான் நினைவிற்கு வருகிறது. ஆமாம் “மொதல்ல இந்த நிலைமை மாறனும்”