Ilaiyaraaja Birthday: இன்று இசையின் ராஜாவுக்கு பிறந்தநாள்.. ஒரு ப்ளேலிஸ்ட் இதோ..
இசை உலகில் எப்போதும் ராஜாவாக கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வலம் வருகிறார்.
இசை உலகின் ஜாம்பவான், இசைஞானி , மாஸ்ட்ரோ என கொண்டாடப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. மூன்று தலைமுறை கடந்து ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இளையராஜாவிற்கு இன்று பிறந்தநாள். இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு பல திரைப்பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் இளையராஜா இசையில் வெளிவந்த சிறந்த பாடல்களை வரிசைப்படுத்தினால் அதற்கு ஒரு நாள் போதாது. இருப்பினும் அவருடைய இசையில் வெளிவந்து பலரையும் ஈர்த்த 10 பாடல்களை இங்கே காண்போம்..
1. தென்றல் வந்து தீண்டும்போது:
1995ஆம் ஆண்டு வெளியான அவதாரம் படத்தில் இடம்பெற்ற பாடல் தென்றல் வந்து தீண்டும் போது. இதை இளையராஜாவும் ஜானகியும் பாடியுள்ளனர். இப்பாடலில் வரும் வரிகள் மிகவும் அழகாக இருக்கும். குறிப்பாக, " எவரும் சொல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது.." என்ற வரிகள் பலரை இப்பாடலுக்கு கட்டுப்போட்டது.
2. மன்றம் வந்த தென்றலுக்கு:
1986ஆம் ஆண்டு வெளிவந்த 'மௌன ராகம்' படத்தில் இடம்பெற்ற பாடல் மன்றம் வந்த தென்றலுக்கு... இப்பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருப்பார். இந்தப் பாடலில் பின்னணியில் வரும் இசை கேட்போரின் காதுகளுக்கு ஒரு பெரிய ஆனந்தத்தை தரும். அத்துடன் எஸ்பிபியின் குரல் கேட்கும் போது இன்பதை தரும் வகையில் இருக்கும்.
3.வளையோசை கலகலவென:
1988ஆம் ஆண்டு வெளிவந்த சத்யா திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்று இருக்கும். இந்தப் பாடலில் எஸ்பிபி மற்றும் லதா மங்கேஷ்கர் சிறப்பாக பாடியிருப்பார்கள். இப்பாட்டு தொடங்குவதற்கு முன்பாக வரும் பின்னணி இசை பல முறை கேட்டாலும் சலிக்காமல் இருக்கும் வகையில் அமைந்திருக்கும். அந்த புல்லாங்குழல் சத்தம் மீண்டும் மீண்டும் ஒளிக்கும் வகையில் இருக்கும்.
4. என்ன சத்தம் இந்த நேரம்:
1986ஆம் ஆண்டு வெளிவந்த புன்னகை மன்னன் திரைப்படத்தில் பிண்ணனி இசை இளையராஜாவை இசைக்கு ஏன் அரசன் என்று சொல்கிறோம் என்பதற்கு சான்றாக அமைந்தது. இந்தப் படத்தில் அமைந்த 'என்ன சத்தம் இந்த நேரம்' பாடல் பலரை கவர்ந்தது. குறிப்பாக எஸ்பிபி கமல்ஹாசன் மற்றும் இளையராஜா கூட்டணி பலரை கட்டிப்போட்டு வைக்கும் வகையில் இருக்கும். அந்த கூட்டணியில் அமைந்த ஒரு பாடல் இது.
5. கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே:
1989ஆம் ஆண்டு வெளிவந்த புதுபுது அர்த்தங்கள் படத்தில் அனைத்து பாடல்களையும் எஸ்பிபி பாடியிருப்பார். படத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் இந்தப் பாடல் பல ஆண்டுகள் கல்யாண வீடுகளில் ஒழித்து கொண்டே இருக்கும் பாடலாக அமைந்தது. இதை படத்தில் காட்சி படுத்தும் போது நடிகர் ரஹ்மான் சிறப்பாக நடித்திருப்பார். ஒரு வரியில் தன்னை மெய் மறந்து இருப்பது போல இந்தப் பாடலில் இருப்பார். அந்த அளவிற்கு இந்தப் பாடல் மற்றும் அதன் வரிகள் இசையுடன் பின்னி இருக்கும்.
6. மண்ணில் இந்த காதல் அன்றி:
1990ஆம் ஆண்டு இயக்குநர் வசந்த் திரைப்படம் 'கேளடி கண்மணி'. இப்படத்தில் இளையராஜாவின் இசையில் எஸ்பிபி பாடிய மண்ணில் இந்த காதல் அன்றி வரலாற்றில் அழியாத இடத்தை பெற்றது. இந்தப் பாடலை எஸ்பிபி அளவிற்கு வேறு எவரும் பாட முடியாது என்பதை அவர் நிரூபித்திருப்பார். அத்தகைய சிறப்பு வாய்ந்த பாடலாக இது அமைந்தது.
7.சின்னத்தாய் அவள்:
1991ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'தளபதி'. நட்பிற்கு இலக்கணமாக கருதப்படும் இப்படத்தில் அம்மாவிற்காக வரும் பாடல் அனைவரையும் கண்கலங்க வைக்கும். அந்த அளவிற்கு உணர்ச்சியை தனது இசை மூலம் இளையராஜா வெளி கொண்டு வந்திருப்பார்.
8. நீ எங்கே:
1991ஆம் ஆண்டு வெளிவந்த சின்னதம்பி படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடலகளும் சிறப்பாக இருக்கும். அதில் குறிப்பாக நீ எங்கே எந்த பாடல் சுவர்ணலதாவின் குரலில் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் அமைந்திருக்கும். சுவர்ணலதாவின் குரலில் அமைந்த சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று.
9. தென்பாண்டி சீமையிலே:
1987-ஆம் ஆண்டு வெளிவந்த 'நாயகன்' படத்தில் இந்தப் பாடல் அமைந்திருக்கும். இளையராஜா மற்றும் கமல்ஹாசன் இந்தப் பாடலை பாடியிருப்பார்கள். இதில் பின்னணியில் வரும் இசை மற்றும் இளையாராஜா பாடலை ஆரம்பிக்கும் விதம் என இரண்டும் சிறப்பானதாக அமைந்திருக்கும்.
10. என்னை தாலாட்ட வருவாளா?:
1997-ஆம் ஆண்டு வெளிவந்த காதலுக்கு மரியாதை படம் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சிறப்பான படங்களில் ஒன்று. இந்தப் படத்தில் வரும் என்னை தாலாட்ட வருவாளா பாடல் அவ்வளவு அற்புதமாக இருக்கும். இளையராஜாவின் இசை இப்படத்திற்கு மிகவும் முக்கியமானது என்பது இது போன்ற பாடல்களால் உணர்த்தப்பட்டிருக்கும்.
இன்னும் இருக்கு... ராஜாவின் ராஜ்ஜியத்தை பட்டியலிட பக்கங்கள் போதாது என்பதால் இத்தோடு முடிக்கிறோம்!