Hrithik Roshan: 2 பக்கெட் ஜங்க் ஃபுட், சாக்லேட் சாப்பிட்டேன்... தூம் 2 பாடல் பற்றி சீக்ரெட் பகிர்ந்த ஹ்ரித்திக் ரோஷன்!
”24 மணிநேரத்துக்கும் மேல் பாடல் படமாக்கப்பட்டது. இந்தப் பாடல் பற்றி நான் என்றுமே பெருமைப்படுகிறேன். ஷூட்டிங் முடிந்ததும் எனக்கு இரண்டு வாளிகள் நொறுக்குத் தீனி, சாக்லேட் வழங்கினர்” - ஹிரித்திக் ரோஷன்
2000-களின் மத்தியில், பாலிவுட் தாண்டி இந்திய சினிமா ரசிகர்கள் அனைவராலும் திரையரங்குகள் தொடங்கி பட்டி தொட்டியெல்லாம் கொண்டாடித் தீர்க்கப்பட்ட பாடல்களில் ஒன்று ஹிருத்திக் ரோஷனின் ‘தூம் மச்சாலே’.
தூம் 2 படத்தில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடல், படத்தின் டைட்டில் கார்டு போடும்போது இடம்பெற்றிருக்கும். ‘பாலிவுட்டின் க்ரேக்க கடவுள்’ (Greek God of Bollywood) என ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்தப் பாடலின் நடனத்தை ஒட்டுமொத்த திரையுலகமும் வியந்து பார்த்து மெய்சிலிர்த்தது.
ஹ்ரித்திக் ரோஷனின் ஒப்பில்லாத நடனத் திறமைக்கு சான்றாக அமைந்து ரசிகர்களை கொண்டாட வைத்த இந்தப் பாடல், சிறந்த நடன அமைப்பைக் கொண்ட டாப் பாடல்களில் என்றுமே இடம்பெற்றிருக்கும்.
இதேபோல் நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் ஹிரித்திக் இணைந்து நடனமாடும் மற்றொரு வெர்ஷனான தூம் அகெய்ன் பாடலும் மாபெரும் ஹிட் அடித்தது. ஷிமக் தவார் எனும் கொரியோகிராஃபரின் இந்தப் பாடலுக்கு நடனமைத்த நிலையில், முன்னதாக இந்தப் பாடல் குறித்த சுவாரஸ்ய அனுபவங்களை ஹிரித்திக் ரோஷன் நினைவுகூர்ந்து பகிர்ந்துள்ளார்.
”தூம் 2 படத்தில் இந்தப் பாடலின் ஸ்டெப்கள், நடன அமைப்பு என அனைத்து விஷயங்களும் சீராக அமைந்தன. தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா இந்தப் பாடலை சிறப்பாகக் கொண்டுவர எல்லோருடனும் அதிக நேரம் செலவழித்தது எனக்கு நினைவிருக்கிறது.
இந்தப் பாடலுக்கான பெருமை மொத்தமாக ஆதித்யா சோப்ராவுக்கே சென்று சேரும். என்னை ஆட வைத்து என் உடலுக்கு பொருந்தும் ஸ்டெப்களை அலசிப் பார்த்து, அந்த ஸ்டெப்களை மெருகேற்றினர். இந்தப் பாடலைப் பற்றி நான் எப்போதுமே பெருமைப்படுகிறேன், ஏனென்றால் அதில் அவ்வளவு கடின உழைப்பு இருந்தது.
முதல் நாள் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 10-11 மணி வரை பேக் செய்யும் போது தூம் அகைன் பாடலை இடைவிடாமல் படமாக்கினோம். ஐஸ்வர்யா ராய் அடுத்த நாள் அவரது ஃப்ளைட்டை பிடிக்க வேண்டியிருந்தது. அதனால் எங்களுக்கு குறைந்த நேரமே இருந்தது. நான் காலை 9 மணிக்கு நடனமாடத் தொடங்கி, மறுநாள் காலை பேக்அப் செய்தேன்.
பாடலில் என் தோற்றத்துக்காக தண்ணீர், சாப்பாடு என்று அனைத்தையும் குறைத்துக் கொண்டேன். ஆனால் பாடல் ஷூட்டிங் முடிந்ததும் நான் பக்கெட் பக்கெட்டாக சாக்லேட்களை ஆர்டர் செய்தேன்.
படக்குழுவினர் எனக்கு இரண்டு வாளிகள் முழுவதும்நொறுக்குத் தீனியும் சாக்லேட்களையும் கொடுத்தார்கள். இப்படி சாப்பிடுவது நல்லது என்று நான் சொல்லவில்லை. ஆனால் அது போன்று ஒரு நாள் முழுவதும் கடினமாக வேலை செய்த பிறகு இது ஏற்றுக்கொள்ளத்தக்கது” எனப் பேசியுள்ளார்.
இந்நிலையில் ஹிரித்திக் ரோஷனின் இந்தப் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.