Hollywood Strike: நிலுவையில் நிற்கும் மிஷன் இம்பாசிபள் 8.. கோரிக்கைகளை நிறைவேற்றுமா தயாரிப்பு நிறுவனங்கள்?
ஹாலிவுட் தொலைக்காட்சி நடிகர் சங்கத்தின் போராட்டம் தொடர்ந்தால் அது ஏற்படுத்தும் பாதிப்புகள், ஈடு செய்ய முடியாததாக இருக்கும்.
ஹாலிவுட் திரைக்கதை எழுத்தாளர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து தற்போது அமெரிக்க தொலைக்காட்சி நடிகர்கள் சங்கமும் போராட்டத்தில் இறங்கியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்ந்தால் ஹாலிவுட்டில் வெளியாக இருக்கும் பெரும்வாரியானப் படங்கள் நிலுவையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
கோரிக்கைகளை ஏற்க மறுத்த தொலைகாட்சி நிறுவனங்கள்
ஹாலிவுட் தொலைக்காட்சி நடிகர்களுக்கு ஊதிய உயர்வு , மேம்படுத்தப்பட்ட பணிச்சூழல் மற்றும் பென்ஷன் சேவைகள் குறித்து SAG – AFTRA என்று சொல்லப்படும் ஹாலிவுட் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர்கள் சார்பாக தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்துவந்தது. ஏற்கனவே கொரோனாவால் பெரிய அளவில் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் தயாரிப்பு நிறூவனங்கள் இந்த கோரிக்கைகளை முழுவதுமாக ஏற்க மறுத்துவிட்டார்கள். இதன் காரணத்தினால் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர்கள் சங்கம் சார்பாக ஹாலிவுட் நடிகர்கள் அனைவரும் போராட்டத்தின் இறங்கியுள்ளார்கள். ஹாலிவுட் கடந்த 60 ஆண்டுகளாக இவ்வளவு பெரிய போராட்டத்தை சந்தித்தது இல்லை.
திரைக்கதை ஆசிரியர்களுடன் கூட்டணி
ஏற்கனவே கடந்த மே 4 ஆம் தேதி முதல் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் ஓடிடி நிறுவனங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி எழுத்தாளர்கள் சங்கத்துடன் தற்போது நடிகர்கள் சங்கத்தின் போராட்டமும் இணைந்துள்ளது.
நெட்பிளிக்ஸ், அமேசான், ஆப்பிள் டிஸ்னி ஆகிய நிறுவனங்ளுக்கு மற்றும் அமெரிக்கத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் ஆகியவர்களுக்கு இடையில் ஊதிய உயர்வு மற்றும் வேலை உத்தரவாதம் அளிக்கப்படுவது குறித்து பேச்சுவார்த்தை கடந்த நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த நிறுவனங்கள் சார்பாக எந்த உத்தரவாதமும் அளிக்கப் படாத நிலையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது அமெரிக்கத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்.
நிலுவையில் நிற்கும் படங்கள்
ஏற்கனவே அடுத்த வாரம் வெளியாக இருக்கும் ஓப்பன்ஹைமர் மற்றும் பார்பீ படங்களில் புரோமோஷன் நிகழ்வுகளில் படத்தின் நடிகர்கள் கலந்துகொள்ளவில்லை. இந்த போராட்டம் தொடர்ந்தால் ஹாலிவுட்டில் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் படங்கள் பனிகள் நிறைவு பெறாமல் நிலுவையில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அண்மையில் வெளியாகியிருக்கும் மிஷன் இம்பாசிபள் படத்தின் 8 ஆம் பாகத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில் மேலும் சில படங்களின் வேலைகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. டெட் பூல் 3 , வெனம் 3 , க்ளாடியேட்டர் 2 முதலியப் படங்களின் படப்பிடிப்பு வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் ஓடிடி நிறுவனங்கள் நடிகர்கள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் இந்தப் போராட்டம் இன்னும் நிறைய பொருளாதார இழப்பீடுகளை உருவாக்க வாய்ப்புள்ளது.