Jasper Movie: இசையமைப்பாளராகும் ட்ரம்ஸ் சிவமணியின் மகன்.. ஹாலிவுட் பாணியில் உருவாகும் ஜாஸ்பர்..!
ஹாலிவுட்டில் கலக்கி வரும் கதாபாத்திரமான ஹிட்மேனை தழுவி, தமிழ் சினிமாவில் ஜாஸ்பர் என்ற படம் இயக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் மற்றும் திரில்லர் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் ஹிட்மேன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து வரும் ஆக்சன் நிறைந்த திரில்லர் படங்களின் எண்ணிக்கையானது குறைவு; அதை பூர்த்தி செய்யும் விதமாக விஸ்வரூபி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் யுவராஜ்.D இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவுள்ளது ஜாஸ்பர் திரைப்படம்.
யார் அந்த ஹிட்மேன்?
ஹிட்மேன் என்ற கதாபாத்திரம், வீடியோ கேமிலிருந்து உருவாகி ஹாலிவுட்டில் ஏஜெண்ட் 47 என்ற புனைப்பெயருடன் கலக்கி வரும் ஹீரோவின் பெயராகும்.தனக்கு கொடுக்கப்படும் கட்டளைகளின்படி, கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல், க்ரிமினல்களை கொல்லும் கதாநாயகனாக வலம் வருபவர் ஏஜண்ட் 47 எனும் ஹிட்மேன்.
ஜாஸ்பர்
முழுக்க முழுக்க ஆக்ஷன், சண்டை காட்சிகள் நிறைந்த படமாக மட்டுமில்லாமல் ஐஸ்வர்யா தத்தா மற்றும் விவேக்கின் மென்மையான காதல் காட்சிகளும் ஜாஸ்பர் படத்தில் இருக்கின்றன; இதுமட்டுமல்லாமல், விவேக் ராஜகோபால், ஐஸ்வர்யா தத்தா, சி.எம் பாலா, ராஜ் கலேஷ், லாவண்யா, பிரசாந்த் முரளி, கோட்டையம் ரமேஷ் மற்றும் பலர் இந்ததிரைப்படத்தில் நடித்துள்ளனர். பிரபல இசைக்கலைஞர் ட்ரம்ஸ் சிவமணியின் மகன் குமரன் சிவமணி இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரபல பாடகர்கள் பிரதீப்குமார் மற்றும் சைந்தவி குரலில் பாடல்கள் உருவாகியிருக்கின்றன.
கதையின் கரு:
90 காலகட்டங்களில் ஒரு ஹிட்மேன் ஆக வலம் வரும் கதாநாயகன், தன் வாழ்வில் சந்தித்த பெரும் இழப்பினால் அவை அனைத்தையும் விட்டு தனிமை வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்; ஓய்வு காலத்தில் அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வரும் கதாநாயகன் மீண்டும் தன் வாழ்வில் ஒரு இழப்பை சந்திக்க நேருகிறது; அந்த இழப்பை தவிர்ப்பதற்கு மறுபடியும் ஹிட்மேன் ஆக உருவெடுக்கிறார் படத்தின் கதாநாயகன்;
இணையத்தில் வெளியாகி உள்ள ஜாஸ்பர் படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில், வரும் 23 ஆம் தேதி ஜாஸ்பர் திரைப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.