(Source: ECI/ABP News/ABP Majha)
Maamannan: 'அனைவருக்கும் பேச்சு, கருத்து சுதந்திரம் உள்ளது' .. மாமன்னன் படத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு
மாமன்னன் படத்திற்கு தடை கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துவிட்டது.
மாமன்னன் படத்திற்கு தடை கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துவிட்டது.
மாமன்னன் படம்
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் ‘மாமன்னன் ’. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலினும், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷூம் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் முக்கிய வேடத்தில் வடிவேலு, ஃபஹத் ஃபாசில், லால் ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் நாளை (ஜூன் 29) தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மாமன்னன் படம் உதயநிதியின் கடைசிப்படம் என்பதால் ஒட்டுமொத்த திரையுலகமும் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது. கடந்த ஜூன் 16 ஆம் தேதி மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதேசமயம் இந்த படத்திற்கு எதிர்ப்புகளும் எழத் தொடங்கியுள்ளது. படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டர்கள் மீது தாக்குதல் நடைபெறும் என மிரட்டல் வெளியாகியுள்ளது.
படத்துக்கு தடைக்கேட்டு வழக்கு
இதனிடையே திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இயக்குநர் மாரி செல்வராஜ் குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த படங்களை எடுத்து வருகிறார். கடைசியாக மாரி இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் கொடியன்குளம் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.
தற்போது வெளியாகவுள்ள மாமன்னன் படம் இரு சமூகத்திற்கு இடையேயான பிரச்சினையை காட்டும் விதமாக அமைந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவனை மாமன்னன் என அழைப்பார்கள். அவரை சித்தரிக்கும் வண்ணம் மாமன்னன் படம் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசில் அமைச்சராக உள்ள உதயநிதி இப்படத்தில் நடித்தது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 173 (ஏ) க்கு எதிராக உள்ளது. இப்படம் வெளிவந்தால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை மறுப்பு
இந்நிலையில் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்து விட்டது. திரைப்பட தணிக்கைத்துறை அனுமதி வழங்கியதில் தலையிட முடியாது. சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் காவல்துறையினர் பார்த்துக் கொள்வார்கள். மக்கள் பார்க்கத்தான் திரைப்படங்கள், 2 நாட்களில் அதனை மறந்து விடுவார்கள். அனைவருக்கும் பேச்சு, கருத்து சுதந்திரம் உள்ளது எனவும் இந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.