ரஜினி படப்பிடிப்பில் திட்டு வாங்காத நாளே கிடையாது - ஹரிஹரன் பகிர்ந்த சுவாரஸ்யங்கள்!
"திட்றதுன்னா நேரடியா திட்ட மாட்டார், என்னை போய் ரஜினியின் பக்கத்தில் நிற்க சொல்வார். அங்கிருந்து என்னை சத்தமாக கத்தி கூப்பிடுவார். அப்போது ரஜினி புரிந்துகொள்வார், ஹரிய திட்டல, நமளதான் திட்றாருன்னு."
1978-80 ரஜினி நடிகராக தன்னை வலுவாக நிலைநிறுத்திக்கொண்ட காலகட்டம். அவர் ஒரு வணிக மதிப்புமிக்க நாயக நடிகராக நிலைபெற உதவிய முக்கியமான படங்களில் ஒன்று 'தர்மயுத்தம்'. மாறுபட்ட கதைகள், துணிச்சலான கருப்பொருட்களுக்காக தனி கவனம் பெற்றவர் இயக்குநர் ஆர்.சி.சக்தி. கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்; உடன்பிறவா அண்ணன் என்றுதான் கமல் அவரை எப்போதும் குறிப்பிடுவார். 'உணர்ச்சிகள்', 'மனிதரில் இத்தனை நிறங்களா' ஆகிய தன்னுடைய முதல் இரண்டு படங்களில் கமலை முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க வைத்த அவர் மூன்றாவது படத்தில் ரஜினியை நாயகனாக்கியது தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத சுவாரஸ்யங்களில் ஒன்று.
'மனிதரில் இத்தனை நிறங்களா'வில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீதேவி இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். அதற்கு முன்பே சில படங்களில் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடி இணைந்து நடித்திருந்தாலும் அந்த இணை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது இந்தப் படத்தின் மூலமாகத்தான். இதற்குப் பிறகு 'ஜானி', 'போக்கிரி ராஜா','தனிக்காட்டு ராஜா', 'அடுத்த வாரிசு' எனப் பல படங்களில் இணைந்து நடித்தனர். இந்தப் படத்தில் ரஜினியின் தங்கையாக லட்சுமிஸ்ரீ நடித்தார். அந்த நேரத்தில் பெரும் ஹிட்டான அந்த படத்தில் வேலை செய்த அனுபவங்கள் குறித்து இயக்குனர் ஆர்.சி.சக்தியின் உதவி இயக்குனர் ஹரிஹரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அவர் பேசுகையில், "ரஜினி தர்மயுத்தம் படப்பிடிப்பில் திட்டு வாங்காத நாளே கிடையாது. தினமும் திட்டு வாங்குவார். திட்டுவதென்றால் நேரடியாக திட்ட மாட்டார், என்னை போய் ரஜினியின் பக்கத்தில் நிற்க சொல்வார். அங்கிருந்து என்னை சத்தமாக கத்தி கூப்பிடுவார். அப்போது ரஜினி புரிந்துகொள்வார், ஹரிய திட்டல, நமளதான் திட்றாருன்னு, அப்போ வந்துடுவார். ஒரு முறை ரஜினியை ரொம்ப திட்டிட்டார், என்னையும் திட்டிட்டார். ரொம்ப திட்டினதும் எனக்கு அப்செட் ஆகிடுச்சு, நான் சோகமா போய் ஒரு ஓரமா உக்காந்துட்டேன். நான் அப்படியே சோகமா உக்காந்துருக்கும்போது, ரஜினி பின்னால வந்து தோள் மேல கைய வச்சார். "அது ஒரு லூசு, அப்படித்தான் எப்போவும் திட்டிக்கிட்டே இருக்கும், நீ ஒரு பீடி இருந்தா கொடு" என்றார். நான், "நீங்க எனக்கு சிகரெட் இருந்தா கொடுங்க… நான் ட்ரிபில் ஃபைவ் சிகரெட் அடிச்சதே இல்ல" ன்னு சொன்னேன். அவரு பீடி குடிக்கிறார், நான் சிகரெட் அடிக்குறேன், டைரக்டர் தேடுறார், எங்க இருக்காங்க ரெண்டு பேரையும் காணும்ன்னு. உடனே லைட்மேன் லைட்ட திருப்பிட்டான். ரெண்டு லூசும் ஒண்ணா சேர்ந்து தம் அடிக்க போய்டுச்சான்னு விட்டுட்டார். அந்த சம்பவம் என் வாழ்க்கைலயே மறக்க முடியாது." என்று கூறினார்.
1979ல் வெளிவந்த இந்த திரைப்படம் அண்ணன் – தங்கை பாசம், காதல், ஆக்ஷன் என வெகுஜன சினிமாவுக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் சரிவிகிதத்தில் கலந்து உருவாக்கப்பட்ட திரைக்கதை கொண்டிருந்ததால் அந்த சமயத்தில் தியேட்டர்களில் நன்றாக ஓடியது. இளையராஜா இசையில் அமைந்த 'ஆகாய கங்கை' என்னும் டூயட் பாடலில் அந்த கண்ணாடியையே கையில் சுழற்றியபடியே நடந்துவந்து அபாரமான ஸ்டைல் காட்டியிருப்பார். இந்தப் பாடலையும், தங்கையின் மீதான பாசத்தை வெளிப்படுத்துவதுபோல் அமைந்த 'ஒரு தங்க ரதத்தில்' என்னும் பாடலையும் மலேசியா வாசுதேவன் அருமையாகப் பாடியிருப்பார். இன்றுவரை இசை ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் பாடல்களாக இவை இரண்டும் நிலைத்துவிட்டன.