புது அவதாரம் எடுக்கும் சிவகார்த்திகேயன்! மதராஸியின் பராசக்தியாக முருகதாஸ், சுதா கொங்கரா!
சுதா கொங்கரா, ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் நடிக்கப்போகும் சிவகார்த்திகேயனின் புதிய பாதை தமிழ் சினிமாவில் தொடங்கியுள்ளதாக அவரது ரசிகர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நட்சத்திரத்தில் இருந்து நட்சத்திர அந்தஸ்திற்கு சிவகார்த்திகேயன் வந்துள்ளார். மெரினா படம் மூலமாக சாதாரண காமெடி நாயகனாக திரையுலகில் அறிமுகமானவர் எதிர்நீச்சில், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான்கராத்தே, ரெமோ, ரஜினி முருகன் என பல ஹிட் படங்களை கொடுத்தவர் நம்ம வீட்டுப் பிள்ளை படம் மூலமாக குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக மாறினார்.
அமரனில் தொடங்கிய புது பயணம்:
காமெடி, குடும்பங்கள் என வெற்றி பெற்றவர் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆக்ஷன் படங்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் கோட் படத்தில் விஜய்யிடம் இருந்து துப்பாக்கியை வாங்கும் காட்சியில் சிவகார்த்திகேயன் நடித்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடினாலும் பலரும் விமர்சித்தனர். இந்த விமர்சனத்திற்கு எல்லாம் பதிலடி தரும் வகையில் அவருக்கு ஒரு வெற்றி தேவைப்பட்டது.
அப்படி ஒரு வெற்றியை அவருக்கு அமரன் படம் தந்தது. சிவகார்த்திகேயன் திரைவாழ்விலே அப்படி ஒரு ப்ளாக்பஸ்டர் வெற்றியை அவர் பார்த்திருக்கமாட்டார். மேஜர் முகுந்தனின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படம் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்ததால் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
பராசக்தி:
இந்த வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் தனது கதைத்தேர்விலும், இயக்குனர் தேர்விலும் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இந்த சூழலில், சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக வேண்டிய படம் சூர்யாவிடம் இருந்து சிவகார்த்திகேயன் வசம் வந்தது. படத்தின் டைட்டிலும் டீசருமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழும் சிவாஜி நடித்த பராசக்தி தலைப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்தி திணிப்பு எதிர்ப்பை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த படத்தின் மீது மாபரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு மதராஸி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
புது பரிமாணம்:
ஏ.ஆர்.முருகதாஸ், சுதா கொங்கரா போன்ற முன்னணி இயக்குனர்களின் கைவண்ணத்தில் தற்போது மேலும் மெருகூட்டப்படும் சிவகார்த்திகேயனின் புதிய பரிணாமத்தை இனி தமிழ் சினிமாவில் காணலாம் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.
சிவகார்த்திகேயன் இதன்பின்பு தனது கதைத்தேர்வில் காமெடி படங்களை குறைத்துவிட்டு ஆக்ஷன், குடும்ப படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும், அமரன் போன்ற உண்மை சம்பவத்தை தழுவிய படங்களுக்கு முக்கியத்துவம் தரவும் திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.





















