HBD Karunanidhi: “கலைஞர் ரொம்ப கிரேட்.. பாசமுள்ள தலைவர்” : கலைஞருக்கு புகழாரம் சூட்டிய சினிமா பிரபலங்கள்
வார்த்தைகளில் இருந்து செயல்கள் வரை மற்றவர்களிடத்தில் இருந்து தனித்து செயல்படும் கருணாநிதியின் வாழ்க்கை பயணம் பற்றி தெரிந்து கொண்டால் ஆச்சரியப்படுவதை தவிர்த்து பெரிய உணர்வுகள் வெளிப்படாது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் ஒன்று கொண்டாடப்படும் நிலையில் அவரைப் பற்றி திரைப் பிரபலங்கள் சொன்ன கருத்துகளை காணலாம்.
அரசியல், சினிமா, இலக்கியம் என எந்த துறை எடுத்தாலும் அதில் என்றும் தங்கமாய் மின்னினார் கலைஞர் கருணாநிதி. இன்றைய தலைமுறையினருக்கு கலைஞரின் பெருமை பற்றி நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதேசமயம் வார்த்தைகளில் இருந்து செயல்கள் வரை மற்றவர்களிடத்தில் இருந்து தனித்து செயல்படும் அவரின் வாழ்க்கை பயணம் பற்றி தெரிந்து கொண்டால் ஆச்சரியப்படுவதை தவிர்த்து பெரிய உணர்வுகள் வெளிப்படாது.
அப்படி இருக்கையில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நேர்காணலில் பங்கேற்ற பிரபலங்கள் கலைஞர் கருணாநிதி பற்றி தங்கள் கருத்துகளை பகிர்ந்திருந்தனர். அதனைப் பற்றி காணலாம்.
நடிகை நளினி
கலைஞர் அப்பா ரொம்ப கிரேட். எனக்கு வில்லி கேரக்டருக்கு மாநில அரசு விருது கிடைத்தது. அதனை அவர் தான் வழங்கினார். நான் கலைஞரின் கதை, வசனத்தில் உருவான காகித ஓடம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளேன். வில்லிக்கான விருது கொடுக்கும் போது, “இவ எங்க ஹீரோயின் ஆச்சே.. வில்லி கேரக்டருக்கு விருது கொடுக்க சொல்லுறீங்க” என கருணாநிதி கூறினார். அதனை என்னால் மறக்கவே முடியாது.
இயக்குநர் கௌதமன்
சிறுபான்மையினத்தில் பிறந்து ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் கட்டிப்போட்ட திரைக்கலைஞனாக உருவெடுத்தவர். 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி முத்தமிழ் வித்தகர் என்ற பெயரோடு தமிழ்நாட்டில் அதிக ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அதிக முறை முதலமைச்சராக இருந்து, தன்னுடைய கடைசி காலத்தில் கூட பேசுபொருளாக இருந்தவர்,
பிக்பாஸ் அஸீம்
கருணாநிதியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அரசியல் சாணக்கியன் என சொல்லக்கூடிய அளவுக்கு இந்தியாவிலேயே தகுதி படைத்தவர் இவர். இவரின் சொல்படி கேட்டு நடக்காத இந்திய அரசியல் தலைவர்களே கிடையாது.
இயக்குநர் அமீர்
இன்றைய காலக்கட்டத்தில் இன்றைய இளைஞர்களுக்கு கருணாநிதியைப் பற்றி தெரியாது. பல்வேறு விமர்சனங்களை சந்தித்தவர். அரசியல் ராஜதந்திரி என பெயரெடுத்தவர். இன்றைக்கு நாம் ஒருவரை பற்றி சுதந்திரமாக பேசுவதற்கு அன்றைக்கு பாடுபட்டவர் கருணாநிதி தான்.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்
அரசியல்வாதிகளில் நான் அண்ணா கூப்பிட்ட ஒரே அரசியல்வாதி கருணாநிதி தான். என்னுடைய 3 படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். பாசமுள்ள மனிதர்.
நடிகர் எஸ்.வி.சேகர்
முத்தமிழ் வித்தகரான கலைஞருடன் நாடக,திரைக்கலைஞனாக நான். அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரது அன்புக்கு பாத்திரமானவன் என்ற பெருமை எனக்குண்டு.