Happy Birthday Vijay : நடிகன் டூ தலைவன் பயணத்தில், விஜய் எந்த இடத்தில் இருக்கிறார்?
நடிகன்' டூ 'தலைவன்' என்கிற பயணத்தில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் விஜய், 'வாரிசு' என்ற படத் தலைப்பு தனது ரசிகர்களுக்கு கொடுக்கும் இன்னொரு மெசேஜாகவுமே கூட இதை பார்க்கின்றனர்.
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 66 வது படத்தின் First Look வெளியாகியிருக்கிறது. வாரிசு என தலைப்பிட்டு கோட் சூட்டில் ராயலான பின்னணியில் விஜய் அமர்ந்திருக்கும் அந்த போஸ்டர் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது. 'வாரிசு' என்பதை வெறுமென விஜய்யின் அடுத்த படமாக மட்டும் ரசிகர்கள் பார்க்கவில்லை. 'நடிகன்' டூ 'தலைவன்' என்கிற பயணத்தில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் விஜய், தனது ரசிகர்களுக்கு கொடுக்கும் இன்னொரு மெசேஜாகவுமே கூட இதை பார்க்கின்றனர். தலைமைச்செயலக பின்னணியோடு கர்ம வீரரின் வாரிசே...பேரறிஞரின் வாரிசே என இப்போதே மதுரையின் வீதிகளில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்ட தொடங்கிவிட்டனர். ரசிகர்களின் கனவும் விஜய்யின் குறிக்கோளும் ஈடேறுமா? அதற்காக விஜய் இதுவரை போட்டு வைத்திருக்கும் பாதையில் நாமும் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வருவோம்.
தொடக்கக்காலத்தில் விஜய்க்கு பெரிதாக அரசியல் ஆசைகள் இருந்ததாக தெரியவில்லை. ஒரு சாதாரண இளைஞனாக தனக்கான அடையாளத்தை தேடி ஓடும் சாமானியனாகவே விஜய் திரைத்துறைக்குள் வந்தார். திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே விஜய்யின் எண்ணமாக இருந்தது. ஆனால், எஸ்.ஏ.சி க்கு அப்படியில்லை. தனது மகனை அவர் முதல் படத்திலிருந்தே ஒரு சூப்பர் ஸ்டாராகத்தான் பார்த்தார். விஜய்க்கான அரசியல் ரூட்டையும் முதல் படத்திலிருந்தே உருவாக்க தொடங்கினார். முதல் படத்தின் தலைப்பே 'நாளைய தீர்ப்பு'. அந்த படத்தின் ஓப்பனிங் பாடலே அண்ணாவை போல...காமராஜரை போல...எம்.ஜீ.ஆரை போல தானும் உயர வேண்டும் என்பதாக விஜய் பாடுவதை போல அமைக்கப்பட்டிருக்கும். அந்த சமயத்தில் இதையெல்லாம் யாரும் ஒரு பொருட்டாகவே கூட மதித்திருக்கமாட்டார்கள். ஆனால், எஸ்.ஏ.சி ஓயவில்லை. தொடர்ந்து விஜய்யை ஒரு உச்சநட்சத்திரமாகவும் அரசியல் செல்வாக்குமிக்கவராகவமாற்ற வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார்.
எஸ்.ஏ.சி விதைபோட்டு வளர்த்த இந்த எண்ணம் ஒரு கட்டத்தில் விஜய்க்குள்ளும் விருட்சமானது. தொடர்ந்து தன்னுடைய படங்களிலும் சரி நிஜ வாழ்விலும் சரி தன்னை ஒரு சமூக பொறுப்புள்ள நபராக காட்டிக்கொள்ளும் பிரயத்தனங்களில் இறங்கினார். கார்கில் போருக்காக நிதி திரட்ட வீதியில் இறங்கினார். இலங்கையில் இறுதிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தன்னுடைய ரசிகர்களை கூட்டி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார். இதே காலக்கட்டத்தில்தான் இலங்கை கடற்படையினரால் தொல்லைக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக நாகப்பட்டினத்தில் ஒரு மாபெரும் மாநாட்டையே நடத்தினார். காவிரி மேலாண்மை வாரியம் வேண்டி திரையுலகம் நடத்திய போராட்டத்தில் வேறு எந்த நடிகரும் வருவதற்கு முன்பாகவே முதல் ஆளாக போராட்ட மேடைக்கு விஜய் வந்திருப்பார்.
தமிழர்களுக்கு ஏதாவது பாதிப்பென்றால் விஜய்தான் முதல் ஆளாக நிற்பார் என விஜய் ரசிகர்கள் இணையத்தை அதிரவிட்டனர். இந்த மாதிரியான சின்னச்சின்ன விஷயங்களில் கூட தன்னுடைய அரசியல் இமேஜை மேலும் உயர்த்திக் கொள்ளும் அளவுக்கு விஜய் திட்டமிட்டு செயல்பட்டார். திரையிலும் தொடர்ந்து எம்.ஜீ.ஆர் பாணியில் சமூக தத்துவ பாடல்களாக பாடி தன்னுடைய இமேஜை இன்னும் மெருகேற்றிக் கொண்டார். காவலன், தலைவா போன்ற படங்களுக்கு ஆளுங்கட்சிகள் சார்பில் கொடுக்கப்பட்ட குடைச்சலுமே விஜய்யின் மீதான அரசியல் சர்ச்சைகளை இன்னும் சூடாக்கியது. கத்தி, பைரவா, மெர்சல், சர்கார் என இன்னொரு பக்கம் திரையில் இறங்கியடிக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு கட்சிகள் விஜய்க்கு எதிராக போராட்டம் நடத்தி அவரை சுற்றி எரிந்துக் கொண்டிருந்த அரசியல் நெருப்பை அணையாமல் பார்த்துக் கொண்டனர்.
அரசியல் கட்சிகள் மட்டுமல்ல. வருமான வரித்துறையுமே கூட தெரிந்தோ தெரியாமலோ விஜய்யின் அரசியல் இமேஜை பூஸ்ட் செய்தே விட்டனர். நெய்வேலியில் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்துகின்றனர் என்பதை அறிந்தவுடன் அங்கே கூடிய ரசிகர் கூட்டம் விஜய்யே எதிர்பாராதது. வருமான வரித்துறையினரை வழியனுப்பிவிட்டு அந்த ரசிகர்களோடு விஜய் எடுத்து போட்ட அந்த செல்பி. ஒரு அரசியல் ஸ்டேட்மெண்ட்டாகவே பார்க்கப்பட்டது. விஜய் படங்களுக்கு எதிராக பேசும் நடுநிலையாளர்கள் கூட வருமான வரித்துறையினால் விஜய் வரம்பு மீறி விசாரிக்கப்பட்டதற்கு எதிராக பேசி விஜய்யுடன் நின்றனர்.
அரசியல் தலைவர்களுடனான நட்பு மற்றும் திடீர் சந்திப்புகளின் மூலமும் கூட தொடர்ந்து தன்னை சுற்றியிருக்கும் அந்த அரசியல் சூட்டை தணியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். விஜய் ரசிகர் மன்றம் மக்கள் இயக்கமாக மாறி தனி கொடியெல்லாம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் டெல்லிக்கு சென்று ராகுல் காந்தியுடன் சந்திப்பை நிகழ்த்திவிட்டு வந்தார். ஒன்றிரண்டு வருடங்கள் கழித்து அதே மக்கள் இயக்கம் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளித்தது. அந்த தேர்தலில் அதிமுக வெல்லவே விஜய் ஜெயலலிதாவையும் சந்தித்துவிட்டு வந்தார். ஊழலுக்கு எதிராக அன்னாஹசாரே டெல்லியில் நடத்திய மாபெரும் போராட்டத்திலும் நேரடியாக கலந்துக்கொண்டு ஆதரவளித்துவிட்டு வந்தார்.
2014 தேர்தலுக்கு முன்பாக மோடி தமிழகம் வந்த போது இரண்டே இரண்டு நடிகர்களை மட்டுமே சந்தித்தார். ஒருவர் ரஜினிகாந்த். இன்னொருவர் விஜய். அரசியல் தலைவர்களுடனான இந்த மாதிரியான சந்திப்புகளை சீரான இடைவெளியில் விஜய் நிகழ்த்திக் கொண்டே இருப்பார். இது இப்போது வரை தொடர்கிறது. விஜய்யும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் சந்தித்து பேசியதாகவெல்லாம் சமீபத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தது. அதேமாதிரி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி போன்றோரையுமே கூட விஜய் வெகு சமீபத்தில் சந்தித்திருக்கிறார். தொடர்ந்து தன்னைச்சுற்றி அரசியல் பேசப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதில் விஜய் தெளிவாக இருப்பதாகவே தெரிகிறது.
தனக்கு அரசியல் பாடம் சொல்லிக் கொடுத்த தந்தையான எஸ்.ஏ.சி உடனே விஜய்க்கு முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அந்த முரண்பாடுமே கூட எப்போது அரசியல் கட்சி தொடங்கலாம் என்பதை மையப்படுத்தியதானே ஒழிய அரசியல் கட்சி தொடங்கலாமா வேண்டாமா என்பதை பற்றியதல்ல. விஜய் சினிமா உலகிற்கு அறிமுகமாகி ஏறக்குறைய 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 30 ஆண்டுகளில் பெரும்பாலான சமயங்களில் தன்னைச் சுற்றி அரசியல் பேசப்பட்டுக் கொண்டே இருப்பதை விஜய் உறுதி செய்து கொண்டே இருந்தார். அதற்கேற்ப பல சமயங்களில் புறச்சூழல்களும் அவருக்கு சாதகமாக அமைந்திருக்கவும் செய்கிறது. ஆனால், எந்த இடத்திலும் நான் உறுதியாக அரசியலுக்கு வரப்போகிறேன். தேர்தலில் நிற்கப்போகிறேன் என்பதையெல்லாம் விஜய் வெளிப்படையாக பேசியதில்லை. இன்றோடு விஜய்க்கு 47 வயது நிறைவடைகிறது.
விஜய் தனது 50 வயதில் அரசியலில் இறங்க விரும்புவதாக சில செய்திகளும் உலவிக்கொண்டிருக்கிறது. அது உண்மையாயின் இன்னும் ஒன்றிரண்டு வருடங்களில் விஜய்யை சுற்றியிருக்கும் அரசியல் யூகங்களுக்கெல்லாம் ஒரு விடை கிடைத்துவிடும். எஸ்.ஏ.சி யின் வாரிசாக திரைத்துறைக்குள் வந்தவர், யாருடைய வாரிசாக அரசியலுக்கு வரப்போகிறார் என்பதும் அப்போது தெரிந்துவிடும். விஜய்யின் எண்ட்ரிக்காக ரசிகர்கள் வெயிட்டிங். ஆனால், பொதுமக்கள் விஜய்க்காக காத்திருக்கிறார்களா என்றால் பதில் கேள்விக்குறியே.