அஜித்தின் திடீர் கொள்கை மாற்றம் ஏன்? விளம்பர யுக்தியா என ரசிகர்கள் கேள்வி
அனிருத் காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் அஜித் கலந்துகொண்டது தனது ரேஸிங் அணிக்காகவா என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது

சினிமா நிகழ்ச்சிகள், பொது விழாக்கள் என எதிலும் கலந்துகொள்வதில்லை என்ற நிலைப்பாட்டில் நீண்டகாலமாக இருந்து வந்தவர் நடிகர் அஜித் குமார். திரைப்படங்களின் விளம்பர நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்கள், விருது விழாக்கள் என எதிலும் அவர் பங்கேற்பதில்லை. அதேபோல், பல ஆண்டுகளாக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களிலும் அவர் கலந்துகொள்ளாமல் இருந்து வந்தார். ஆனால், தற்போது அஜித்தின் இந்த நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது.
கொள்கையை மாற்றிய அஜித்
நடிப்பைத் தாண்டி கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தத் தொடங்கிய அஜித், சொந்தமாக 'அஜித் குமார் ரேஸிங்' அணியைத் தொடங்கினார். சர்வதேச கார் பந்தயங்களில் அவரது அணி பங்கேற்றது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஒவ்வொரு நாட்டிலும் அஜித்துக்குக் கிடைத்த வரவேற்பு அவரது ரேஸிங் அணிக்கும் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுத் தந்தது.
இதனைத் தொடர்ந்து தனது ரேஸிங் அணிக்கான ஸ்பான்சர்ஷிப்பைப் பெறும் நோக்கில் விளம்பரங்களிலும் அஜித் நடிக்கத் தொடங்கினார். குளிர்பான விளம்பரம், ரியல் எஸ்டேட் விளம்பரம் என அடுத்தடுத்து அவர் விளம்பரங்களில் தோன்றியது ரசிகர்களிடையே பேசுபொருளானது. பல ஆண்டுகளாக நேர்காணல்களைத் தவிர்த்து வந்த அஜித், சர்வதேச ஊடகங்களுக்கும் பேட்டியளிக்கத் தொடங்கினார். மலேசியாவில் நடைபெற்ற நிகழ்வின்போது தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஜித்தைச் சந்தித்ததும் இரு தரப்பு ரசிகர்களிடையே பேசுபொருளானது.
விளம்பர யுக்தியா ?
இந்நிலையில், அனிருத் ரவிச்சந்தர் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித் கலந்துகொண்டது மீண்டும் அவரது நிலைப்பாடு குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகத் திரையுலகப் பிரபலங்களின் இல்ல விழாக்கள், திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்த அஜித், நவம்பர் 22ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அங்கு ரஜினிகாந்த், எம்.எஸ்.தோனி உள்ளிட்ட பிரபலங்களுடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. குறிப்பாக ரஜினிகாந்தை அஜித் அன்புடன் கட்டியணைத்துப் பேசிய காட்சிகள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றன. அஜித்தின் இந்த வருகை அவரது ரசிகர்கள் மத்தியிலும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டில் இருந்தவர் தற்போது விளம்பரங்கள், நேர்காணல்கள், பொது நிகழ்ச்சிகள் என அடுத்தடுத்த மாற்றங்களை வெளிப்படுத்துவது ஏன் என்பதே ரசிகர்களின் விவாதமாக உள்ளது. விளம்பர அந்தஸ்த்தை கூட்டுவதற்காகவே அஜித் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறாரா என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.
டேர்டெவில்
அஜித்தின் அடுத்த திரைப்படமான டேர்டெவில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. குட் பேட் அக்லி படத்திற்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ள இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தனது பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ஸ்ரீலீலா, உன்னி முகுந்தன், பிரபு, சுனில், பார்த்திபன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நவம்பர் 2ஆம் தேதி படத்தின் தயாரிப்புப் பணிகள் தொடங்கின. சென்னையில் தொடங்கத் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பு, வானிலை காரணமாக ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























