Rajinikanth: 6 படங்கள் ரஜினிக்கு தோல்வி.. வரலாறு தெரியாமல் பேசுகிறாரா விஜய் தேவரகொண்டா?
ரஜினி தோல்வி படங்களே கொடுக்கவில்லை என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் வசூல் ரீதியாக கணக்கிட்டால் ரஜினி செய்த சாதனையை தமிழ் சினிமாவில் யாரும் நெருங்கவே முடியாது என்பதே உண்மை.

சினிமாவில் வெற்றி, தோல்வி என்பது சகஜம் தான் என்றும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே 6 படங்கள் அடுத்தடுத்து தோல்வி கொடுத்த பிறகு ஜெயிலர் படம் வெற்றி பெற்றுள்ளது என நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியது ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் சிவா நிர்வானா இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை சமந்தா நடித்துள்ள படம் குஷி. செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் பிரமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவையில் நேற்று நடிகர் விஜய் தேவரகொண்டா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் முந்தைய சில படங்கள் தோல்வி அடைந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
சூப்பர் ஸ்டாரை வம்பிழுத்த விஜய் தேவாரகொண்டா
அதற்கு இங்கே உள்ள சூப்பர் ஸ்டார் பிரபலங்கள் அனைவருக்கும் வெற்றி தோல்வி என்பது உள்ளது. இவ்வளவு ஏன் தமிழ் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்துக்கு கடைசியாக நடித்த ஆறு படங்களும் தோல்வி அடைந்தன. ஆனால் ஜெயிலர் படம் மூலம் அவர் கம்பேக் கொடுத்தார். அப்படம் ரூ.500 கோடி வசூல் செய்துள்ளது. இப்போது யாரும் எதுவும் பேசாமல் படம் மட்டுமே பார்ப்பார்கள் என தெரிவித்திருந்தார். இதனைக் கேட்டு ரஜினி ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
நடிகர் விஜய் தேவரகொண்டா வரலாறு தெரியாமல் பேசுவதாகவும், கடைசியாக அவர் நடித்த ஆறு படங்களில் இரண்டு படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி அடையாவிட்டாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய லாபத்தை பெற்றுக் கொடுத்ததாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். நாம் அதைப்பற்றி காணலாம்.
ரஜினியின் கடைசி ஆறு படங்கள்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட 48 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் அவர், இன்றைக்கும் நம்பர் ஒன் மனிதராகவே பார்க்கப்படுகிறார். இதில் கபாலி, காலா, 2.0, பேட்ட, தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் தான் ரஜினி கடைசியாக நடித்த ஆறு படங்கள்.
இதில்,
- 2016 ஆம் ஆண்டு கபாலி படம் வெளியானது. பா.ரஞ்சித் இயக்கிய இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார். சுமார் நூறு கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கிட்டத்தட்ட 300 கோடி வரை வசூலித்ததாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
- 2018 ஆம் ஆண்டு மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி காலா படத்தில் நடித்தார். நடிகர் தனுஷ் தயாரித்த இப்படம் ரூ.140 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு ரூ.160 கோடி வரை மட்டுமே வசூல் செய்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினிக்கான மாஸ் காட்சிகள் இருந்தாலும் கலவையான விமர்சனத்தையே காலா படம் ரசிகர்களிடம் பெற்றது.
- 2018 ஆம் ஆண்டு இறுதியில் ரஜினி நடித்த 2.0 படம் வெளியானது. லைக்கா நிறுவனம் தயாரித்த இப்படத்தை சங்கர் இயக்கியிருந்தார். சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 800 கோடி வசூலை பெற்று தமிழ் சினிமாவில் அதிகபட்ச வசூலான படம் என்ற சாதனையை கொண்டுள்ளது.
- 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் வெளியானது. சுமார் ரூ.160 கோடி பட்ஜெட்டில் உருவான பேட்ட படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.250 கோடி வசூல் செய்தது.
- 2020 ஆம் ஆண்டு ரஜினி லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது. ஆனால் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவான தர்பார் படம் ரூ.250 கோடி வசூல் செய்தது.
- 2021 ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி மீண்டும் அண்ணாத்த படத்தில் நடித்தார். சிறுத்தை சிவா இயக்கிய இப்படம் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரானது. இப்படமும் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவிய நிலையில் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
நிலவரங்கள் இப்படி இருக்கையில் விஜய் தேவரகொண்டா எதனை அடிப்படையாகக் கொண்டு ரஜினிக்கு தொடர்ந்து ஆறு படங்கள் தோல்வியடைந்ததாக குறிப்பிடுகிறார் என ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர். காரணம் சினிமாவில் உள்ள பிரபலங்களின் சந்தை மதிப்பை பொறுத்து அவர்களின் படங்கள் மினிமம் கியாரண்டி, மேக்ஸிமம் கியாரண்டி என்கிற ரீதியில் வகைப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும் ஒரு படம் வசூல் ரீதியாக வெற்றி பெறுவதையே இங்கு உண்மையான வெற்றியாக கருதுகிறார்கள். அந்த வகையில் பார்த்தால் ரஜினி தோல்வி படங்களே கொடுக்கவில்லை என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் வசூல் ரீதியாக கணக்கிட்டால் ரஜினி செய்த சாதனையை தமிழ் சினிமாவில் யாரும் நெருங்கவே முடியாது என்பதே உண்மை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

