பிரபல திரைப்பட இயக்குனர் திடீர் மறைவு; அதிர்ச்சியில் திரையுலகம்
வினுவின் உடல் சிங்காநல்லூரில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது திடீர் மறைவிற்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் வினு, உடல்நலக்குறைபாடு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
கேரள மாநில கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் வினு. 69 வயதான இவர், சுரேஷ் என்பவருடன் இணைந்து, சுரேஷ்வினு என்ற பெயரில் மலையாளத்தில் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். இவர்கள் இருவரும் இயக்கிய, கனிச்சுகுளங்கரையில் சிபிஐ, ஆயுஷ்மான் பவா, மங்களம் வீட்டில் மனசேஸ்வரி குப்தா, குஷ்ருதி காற்று உள்ளிட்ட படங்கள் மலையாள திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. மலையாள திரைப்படங்களில் பணியாற்றி வந்த போதும், பல ஆண்டுகளுக்கு முன்பே வினு, கோவை சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவருக்கு அடிவயிற்றில் வலி இருந்து வந்ததால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். அவரது உடல் கோவை சிங்காநல்லூரில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
வினுவின் திடீர் மறைவிற்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வினுவுடன் இணைந்து பணியாற்றிய சுரேஷ், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க கோவை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மலையாள இயக்குனர் சங்கமான ‘ஃபெஃப்கா’ இரங்கல் தெரிவித்துள்ளது. இயக்குனர் வினுவின் மறைவு கேரள சினிமா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : "ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள மாட்டோம்" காங்கிரஸ் அறிவிப்பு