இயக்குநர் ராமை பார்த்து வயித்தெறிச்சல்.. டீக்கடை ராஜா நாங்க.. மனம் திறந்து பேசிய வெற்றிமாறன்
இயக்குநர்கள் ராம் மற்றும் வெற்றிமாறனும் தங்களது வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளனர்.

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள பறந்து போ திரைப்படம் வரும் ஜூலை 4ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸி ஆண்டனி, அஞ்சலி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பறந்து போ திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் நடந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பாலா, ராம் ஆகியோர் ஒரே விழாவில் இருந்தது இதுவரை இல்லாத அதிசயமாக பார்க்கப்படுகிறது.
பாலுமகேந்திரா பட்டறை
இயக்குநர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என பன்முகத்திறமை கொண்டவர் பாலுமகேந்திரா. இவர் தமிழ் சினிமாவின் லெஜண்ட் என்றே அழைக்கப்படுகிறார். இவரிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்கள் தான் ராம், வெற்றிமாறன், பாலா. இவர்கள் மூவம்ர தமிழ் சினிமாவில் தங்களுக்கு என்று தனித்த அடையாளத்தை பதித்துள்ளனர். தமிழ் சினிமாவை உலகளவில் பாராட்டை பெற வைத்த பெருமையும் இவர்களுக்கு உண்டு. இந்நிலையில், இயக்குநர் ராம் மற்றும் வெற்றிமாறனும் இணைந்து பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தனர். அதில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.
இயக்குநர் ராமை பார்த்து வயித்தெறிச்சல்
இயக்குநர் வெற்றிமாறன் முதல் முறையாக ராமை பார்க்கும்போது வயித்தெறிச்சல் தான் ஏற்பட்டது என தெரிவித்துள்ளார். அதுகுறித்து கூறிய அவர், " எப்போதும் பாலுமகேந்திரா சார் வந்து காலையில் 3.30 மணிக்கு எழுந்து பிரஷ் அப் ஆகிட்டு 1 மணி நேரம் வாக்கிங் போவாரு. அதே மாதிரி அந்த நாளும் அப்படித்தான் இருந்தது. அன்றைக்கு நான் கொஞ்சம் லேட்டா ஆபிஸ் போனேன். அப்போ பாலுமகேந்திரா சார் வந்து ரொம்ப எக்ஸைட்மண்ட்ல இருந்தாரு. அவர் என்கிட்ட வந்து இயக்குநர் மணிரத்னத்திற்கு பிறகு பயங்கரமா கதை சொன்னது இவன்தாண்டா என சிலாகித்து பேசியதை கேட்டதும். யாருடா அது அவரை பார்த்தாக வேண்டுமே என்று எனக்கு தோன்றியது. அவர் அரை மணி நேரமா ராமை பத்தியே பேசிக்கிட்டு இருந்தாரு அதை பார்த்து எனக்கு கொஞ்சம் காண்டாகிட்டேன்" என வெற்றிமாறன் தெரிவித்தார்.
டீ கடை பெஞ்ச்
பாலுமகேந்திரா சார் வந்து இயக்குநர் பரதன், மகேந்திரன், மணிரத்னம் ஆகியோரின் முதல் படத்திற்கு கேமராமேன் பாலுமகேந்திரா சார் தான். அதே மாதிரி ராம் படத்திற்கும் கேமராமேனா வேலை செய்யலாம் முடிவு பண்ணிட்டேன். அவன் சொன்ன கதையை முழுமையா எடுப்பானா தெரியாது. ஆனால், அவன் சொன்ன மாதிரி எடுத்துட்டா தமிழ் சினிமாவை மாத்தக்கூடிய படமா இது இருக்கும் என பாலுமகேந்திரா சார் என்னிடம் கூறினார். எனக்கு ஒரே ஷாக். என்னடா இப்படி சொல்றாரு என்று நினைத்திருந்தேன். பிறகு அவர் பெயரை கேட்டேன். அவர் ராமசுப்பு என்று சொன்னார். நான் மற்ற உதவி இயக்குநர்களும் இவரை பார்த்தாக வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்தோம். அப்போ எதார்த்தமாக டீக்கடையில் இயக்குநர் ராமுக்கும் எனக்கும் முதல் சந்திப்பு ஏற்பட்டது. அப்படித்தான் இருவரும் பேசி பழக ஆரம்பித்தோம். டீக்கடையில் உட்கார்ந்து மணிக்கணக்கா பேசுவோம். முதல் டீ வாங்கிட்டு கடை சாத்தும்போது பருகுகின்ற கடைசி டீ குடிப்பதும் எங்க கேங்காகத்தான் இருக்கும்" என வெற்றிமாறன் மனம் திறந்து பேசினார்.
எனக்கு பிடித்த படம் பேரன்பு
இயக்குநர் ராம் இயக்கத்தில் மிகவும் பிடித்த படம் பேரன்பு என வெற்றிமாறன் தெரிவித்தார். மேலும், பேசிய அவர், கற்றது தமிழ், தங்க மீன்களை தாண்டிய ஒரு படத்தை இவரால் எடுக்க முடிந்தது. கதையின் கிராப்ட் அதை சொன்ன விதத்தை பார்த்து ரொம்ப அசந்துட்டேன். இப்பவும் அவரிடம் சொல்வது பேரன்பு தான். இப்படம் மிகப்பெரிய பேரன்பு இதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை என அவர் தெரிவித்தார்.




















