Vetrimaaran on Vijay: விஜய் அரசியலுக்கு வர தகுதி இருக்கா... வெற்றிமாறன் அளித்த பளிச் பதில்!
Vetrimaaran: இயக்குநர் வெற்றிமாறனிடம் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து எழுப்பப்பட்டது.
அரசியல் களத்தில் விஜய்
சமூக ஊடகங்கள் தொடங்கி டீக்கடை வரை நடிகர் விஜய்யின் அரசியில் பிரவேசம் குறித்தான பேச்சுகள் நிறைந்திருக்கின்றனர். நடிகர் விஜய் (Vijay) அரசியல் வருகை குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 10-வது, 12-வது பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு ஊக்கத்தொகை, பரிசு, மகளிர் அணி, தனித்தனியே நிர்வாக குழுவினர் என விஜய் அரசியல் வருகை குறித்து சமீப காலமாக தீவிரம் காட்டி வருகிறார்.
நேரடியாக அரசியல் வருகை குறித்து எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும் அவரது இயக்கம் தொடர்ந்து பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற லியோ திரைப்பட வெற்றி விழாவில் ’மக்கள்தான் மன்னர்கள். நான் அவர்களின் தளபதி. அவர்களின் கட்டளையின் படி செயல்படுவேன்.’ 2026-ல் கப்பு முக்கியம்’ என்று சொன்ன வார்த்தைகள் அவரின் அரசியல் வருகையை உறுதி செய்யப்படும்படி அமைந்துள்ளது.
விஜய் அரசியல் வருகை குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் வெற்றிமாறனிடம் (Vetrimaaran) நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை மெரினா கலங்கரை விளக்கம் அருகே தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த தூய்மைப் பணியை தொடங்கி வைத்த பிரபல திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் செய்தியாளர்களிடம் பேசுமையில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
சமூகப்பாதுகாப்பு சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துகொள்வது உள்ளிட்டவைகளில் தனிமனிதனுக்கும் பொறுப்பு உண்டு என்று பதிலளித்த அவர், கடற்கரை ஓரம் வசிக்கும் மக்களுக்கும் எல்லா முன்னெடுப்புகளும், திட்டங்களும் கொண்டு செல்ல வேண்டும்; அதோடு அரசின் திட்டங்களும் அவர்களை உள்ளடக்கியே இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழ் திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் மாற்றம் ஏற்படுகிறது என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த வெற்றிமாறன், “அரசியலிலும் சமூகத்திலும் சினிமா தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாக நல்லவிதமான உரையாடல்களை சினிமா நிகழ்த்தியிருப்பதாகவே கருதுகிறேன். ஜெய் பீம் போன்ற படங்கள் வெளியான பிறகு அந்த மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு செய்துள்ளது நமக்குத் தெரியும். தொடர்ந்து சினிமா மூலமாக விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன” என்று தெரிவித்தார்.
அரசியலுக்கு வர தகுதி பெற்றவரா விஜய்?
லியோ வெற்றிவிழாவில் விஜய் சொன்ன குட்டிக்கதை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வெற்றிமாறன் கூறுகையில்,” அவங்க அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். அரசியலுக்கு வர எல்லாருக்கும் உரிமையிருப்பதாக நினைக்கிறேன்.அதோடு, அரசியலில் களப்பணி என்பது மிகவும் முக்கியம். அதை செய்துவிட்டு அரசியலுக்கு வரலாம்.” என்று கூறினார்.
அரசியலுக்கு வர நடிகர் விஜய்க்கு தகுதியிருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த வெற்றிமாறன், “அரசியலுக்கு வர அனைவருக்கும் தகுதி இருப்பதாகதான் நான் சொல்கிறேன். எல்லாருக்கும் உரிமை இருகிறது. களப்பணி என்பது ரொம்பவே முக்கியம்” என்று தெரிவித்தார்.