Vetrimaaran: ஸ்கூல் படிக்கும்போதே இப்படியா.. வெற்றிமாறன் பண்ணிய தில்லுமுல்லு ... அவரே பகிர்ந்த சுவாரஸ்ய கதை..!
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான வெற்றிமாறன் தன் அப்பாவிடம் அடிவாங்கிய கதையை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான வெற்றிமாறன் தன் அப்பாவிடம் அடிவாங்கிய கதையை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநரானவர் வெற்றிமாறன். அந்த படத்தின் வெற்றி தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநராக மாற்றியது. தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை பாகம் 1 ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக மாறினார். அடுத்ததாக விடுதலை பாகம் 2, வாடிவாசல்,வட சென்னை 2 என அடுத்தடுத்து பிஸியாக உள்ளார் வெற்றிமாறன்.
இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில், அவர் தனது அப்பாவிடம் அடிவாங்கிய கதையை பகிர்ந்துள்ளார். அதில், “அப்பா என்னை ஒரு முறை தான் அடித்துள்ளார். நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது என்னை படித்துக் கொண்டிருக்குமாறு சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார். திரும்பி வந்து என்னடா படிச்சிட்டியா என கேட்டார். நானும் படித்துவிட்டேன் என சொல்லி விட்டேன். சரி அந்த சயின்ஸ் புக் எடு என்ன சொல்ல, நான் சயின்ஸ் படிக்கல அப்படின்னு சொன்னேன். சரி ஹிஸ்டரி என சொல்ல, நான் அதுவும் படிக்கல என கூறிவிட்டேன்.
அப்ப என்னதான்டா படிச்ச என அப்பா கேட்டார். நான் புவியியல் படித்தேன் என சொன்னேன். அதுதான் சின்ன புக். மொத்தமே 13 பாடங்கள் தான் இருக்கும். அவர் ஒரு பக்கத்தை எடுக்க நான் அதை படிக்கவில்லை என திரும்பவும் கூறினேன். பின்ன என்னதான் படிச்ச என அப்பா திரும்பவும் கேட்டார். நான் 13 வது பாடத்தை படித்தேன் என சொன்னேன். அது இரண்டு பக்கமே இருக்கும். மொத்தம் இரண்டு கேள்விகள் மட்டுமே இருக்கும். அவர் முதல் கேள்வியை கேட்க முயல, நான் அதையும் படிக்கவில்லை என சொன்னேன்.
சரி இரண்டாவது கேள்வியை கேட்க நான் அதைத்தான் படித்துக் கொண்டிருந்தேன் என சொல்ல, அப்பா தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் முதுகில் ஓங்கி ஒரு அடி அடித்தார். இதேபோல் ரேங்க் கார்டு தொலைந்து விட்டது என பொய் சொல்லி ஸ்கூலில் பணம் கட்டி வேறொன்று வாங்கி விட்டேன். ஸ்கூலில் பெயில் ஆன ரேங்க் கார்டில் நானே சைன் போட்டுக் கொள்வேன். நல்ல மதிப்பெண் எடுத்ததாக இருக்கும் ரேங்கார்டை வீட்டில் காட்டி கையெழுத்து வாங்கிக் கொள்வேன்” என அந்த நிகழ்வில் வெற்றிமாறன் பேசியுள்ளார்.